|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 January, 2012

மோடி பிரதமராக வேண்டும்..அல்லது ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும்-சோ.


ஜெயலலிதாவைப் பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.துக்ளக் இதழின் ஆண்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினி, இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன், இயக்குனர் கே.பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் சோ, 2014ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் புதிய அரசு அமைவதில் அதிமுகவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். திறமையான அரசை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்து, அவர் பிரதமரானால் நாடே பெரும் உற்சாகம் அடையும். 

ஒருவேளை பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய், மதச்சார்பற்ற கட்சிகள் என்ற பெயரில் தடை கிளம்புமானால், பாஜக ஆதரவுடன் ஆட்சி அமையலாம் என்ற நிலை ஏற்பட்டால், ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அத்வானி பேசுகையில், நாடாளுமன்றத்தில் பாஜக பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. மத்திய அரசின் தவறான செயல்பாடுகளைக் கண்டிக்கும் பிரச்னைகளில் அதிமுக எங்களுக்கு எந்தக் குறைவும் அற்ற, முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

இந்த இடத்தில் நான், ஒன்றை தெளிவுபடுத்திட விரும்புகிறேன். அதிமுக-பாஜக கூட்டணி இயல்பான கூட்டணி. மத்திய, மாநில அரசுகளின் உறவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில், பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பொதுவான கொள்கைகளே இருக்கின்றன. மற்றபடி, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை, இப்போதே கூறிவிட முடியாது என்றார். நரேந்திர மோடியை மிகக் கடுமையாக எதிர்க்கும் பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை சோ விமர்சித்தார். அவரது தலைமையிலான அரசிலும் பிகாரில் பெரிய வளர்ச்சி ஏதும் நடந்துவிடவில்லை என்றும், நிதிஷ் குமார் தான் பாஜக கூட்டணியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதெல்லாம் சரிவராது என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...