|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 March, 2012

எனக்கு எதுவும் தெரியாது...


சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில், முக்கிய கட்டமாக, சொத்துகள் குறித்து நீதிபதி நேற்று அதிரடியாக கேள்விகளை எழுப்பினார். சொத்தின் மதிப்பீடு குறித்த பெரும்பாலான கேள்விகளுக்கு, தனக்கு எதுவும் தெரியாது, என்று சசிகலா, மழுப்பலான பதிலையே தெரிவித்தார். கேள்வி பதில் விவரம் வருமாறு:

ஈக்காட்டு தாங்கலில் ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் கட்டடத்தின் மதிப்பீடு செய்யப்பட்டது தெரியுமா?

ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் வாடகைக் கட்டடத்தில் தான் இயங்கி வந்தது. கட்டடம் யாருடையது என்றுகூட தெரியாமல், மதிப்பீடு செய்தது தவறு.

சென்னை. 36, போயஸ் கார்டன் கட்டடத்தின் மொத்த மதிப்பு, 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு கொடுக்கப்பட்டது தெரியுமா?

தெரியாது.

சிறுதாவூர் பங்களா மதிப்பீடு, 5 கோடியே 40 லட்சம் ரூபாய் என்பது தெரியுமா?

தெரியாது.

பையனூர் பங்களா மதிப்பீடு, ஒன்றே கால் கோடி ரூபாய் என்பது தெரியுமா?

தெரியாது.

ஐதராபாத் திராட்சைத் தோட்டத்தின் மதிப்பு, 6 கோடியே 40 லட்சம் ரூபாய் என்று தெரியுமா?

தெரியாது.

இதே போன்று, நமது எம்.ஜி.ஆர்., நாளிதழ் கட்டடம், நீலாங்கரை ராஜா நகரிலுள்ள பிளாட்கள், ஈ.வி.கே., தொழில்பேட்டையில் உள்ள நான்கு ஷெட்கள், தி.நகர், பத்மநாபநகரில் உள்ள வீடுகள், வேல்ஸ் கார்டன் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள பிளாட்கள், சென்னை நந்தனம் பகுதியில் வாங்கிய சொத்துகள், சாந்தோம் ஆர்.ஆர்.நகரில் வாங்கிய சொத்துகளின் மதிப்பு உட்பட சென்னையில் பல இடங்களில் வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளின் வாடகை ஒப்பந்தங்கள் என பல கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு சசிகலா, சில கேள்விகளுக்கு மதிப்பீடு அதிகம் போட்டுள்ளதாகவும், சில கேள்விகளுக்கு மதிப்பீடு செய்யும் அதிகாரிகள் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்றும், சில கேள்விகளுக்கு, விசாரணை அதிகாரிகள் சாட்சிகளை பொய் சொல்ல வைத்துள்ளனர் என்றும், சில கேள்விகளுக்கு தெரியாது என்றும் பதிலளித்தார்.

காலை 11மணியிலிருந்து மதியம் 2.20 மணி வரை, 36 கேள்விகளுக்கும், மதியம் மூன்று மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை, பத்து கேள்விகளுக்கும் என, 46 கேள்விகளுக்கு பதிலளித்தார். இதுவரை ஐந்து நாள் விசாரணையில் மொத்தம், 286 கேள்விகளுக்கு பதில் பெறப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியுள்ளது. விசாரணை முடிந்து சசிகலா, இளவரசி தனியாக ஒரு காரில் புறப்பட்டு பெங்களூருவில் தாங்கள் தங்கியுள்ள கேபிட்டல் ஸ்டார் ஓட்டலுக்கு சென்றனர். விசாரணையின்போது, சசிகலா பதிலளிக்க, நீதிபதி அதிக நேரம் கொடுப்பதில்லை என அவரது வழக்கறிஞர்கள் நிருபர்களிடம் தெரிவித்தனர். சுதாகரன் மாதக் கணக்கில் பெங்களூருவில் தங்கவுள்ளதால், சிவாஜிநகர் பாலே குந்திரி சர்க்கிள், இந்தியன் எக்ஸ்பிரஸ் சர்க்கிள் அருகேயுள்ள, "குயின்ஸ் பாரடைஸ்' என்ற அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...