|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 April, 2012

ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு, பிரதமர் அறிவுரை


முக்கியமான முடிவுகளை, தைரியமாகவும், விரைவாகவும் எடுக்க வேண்டும். தாமதமாக எடுக்கப்படும் முடிவால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. அரசியல் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து பணியாற்றுவதாக, பொதுமக்கள் மத்தியில் நிலவும் அபிப்ராயத்தையும் மாற்றுவதற்கு முயல வேண்டும்' என்று, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு, பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார்.டில்லியில் நேற்று, மத்திய அரசின் சார்பில், இந்திய ஆட்சிப்பணி நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்திய ஆட்சிப்பணி உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடு, டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தன்னலமற்ற சேவை: மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். பிரதமர் தனது உரையில் கூறியதாவது: இந்திய ஆட்சிப்பணியில், தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அதிகாரிகள், நாட்டிற்கு செய்யும் பங்களிப்பு மிகப்பெரியது. உலக அளவில் சிறந்து விளங்குபவர்களும் நம்மிடம் உள்ளனர். நாட்டுக்காக உறுதியுடனுடம், தன்னலமற்ற வகையிலும் சேவை செய்வதாலேயே அதிகாரிகள் ஜொலிக்கின்றனர். இத்தனை சிறப்புகள் இருப்பினும், சுயபரிசோதனை செய்து பார்க்கும்போது, நம்மில் ஏற்படும் தோல்விகள் மற்றும் திறமையின்மை போன்றவற்றையும் ஒப்புக் கொள்வது அவசியமாகிறது.

நெருக்கடி: முந்தைய காலங்களில் இருந்ததுபோல் அதிகாரிகள் இல்லை. அரசியல் நெருக்கடி மற்றும் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து, வளைந்து பணியாற்றுகின்றனர் என்று, மக்கள் நினைக்கின்றனர். இது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், இதில் கொஞ்சமாவது உண்மையும் உள்ளது. முடிவெடுக்கும்போது, நாட்டு நலனை மனதில் கொண்டு சரியாகவும், அர்த்தமுள்ளதாகவும் அதிகாரிகள் எடுக்க வேண்டும். அதிகாரிகளின் முடிவு மற்றும் தீர்ப்பு ஆகியவற்றின் மீது எந்த வகையிலும் அரசியல் தலைமையின் நிறம் படியக் கூடாது. அவ்வாறு இல்லையெனில் சரியில்லாத, ஒரு தலைபட்சமான முடிவுகளாகவே அவை இருக்கும். தங்களைப் பற்றி பொதுமக்கள் மத்தியில் நிலவும் கருத்தை, மாற்றிக் காட்டும் வகையில் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.

மாற்றம்: வேகமான மாற்றம் நிலவும் காலகட்டத்தில் வாழ்கிறோம். சமூகமும் சரி, பொருளாதாரமும் சரி. மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பம் என்பது, உலகத்தையே சுருக்கிவிட்டது. நம்மை சுற்றி நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாறுகிறோமா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி பார்க்கையில் மாறி வரும் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப, ஆட்சிப்பணித் துறை மாறுகிறதா என்றால் சற்று பின்தங்கியுள்ளது என்றே கூறுவேன். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற சவாலை மனதில் உள்வாங்கி, அதன்படி பணியாற்றுவது அவசியமாகியுள்ளது. ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கேற்பவே மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தைரியமான முடிவு: ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளுகிறோம் என்ற பெயரில், வேண்டுமென்றே தேடிச் சென்று பிடித்து, வதைப்பதோ தொல்லை கொடுப்பதோ கூடாது. முக்கியமான முடிவுகளை எடுப்பதில், அதிகாரிகள் கால தாமதம் ஏற்படுத்தக் கூடாது. முடிவுகளை எடுக்கும்போது, தைரியமாகவும், விரைவாகவும் எடுக்க வேண்டும். தாமதமாக எடுக்கப்படும் முடிவால், யாருக்கும் பயன் இல்லை. முடிவுகள் எடுக்கும்போது, நிர்வாக ரீதியில் சில பிழைகள் ஏற்படுவது சகஜமே. அதற்காகவே தண்டனை அளித்தால் அது தவறாகிவிடும். நேர்மையான அதிகாரிகளுக்கு அவர்களின் நலன்கள் பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் எல்லா விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். முடிவெடுக்கும்போது, சில பிரச்னைகள் ஏற்படுவது உண்மையே. அதற்காக தண்டனை என்றானால், தண்டனை கிடைக்குமே என்ற பயத்தில் அதிகாரிகள் முடிவுகளே எடுக்க மாட்டார்கள். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

மூன்றே மூன்று சூப்பராகிவிடும்: மேலும், பிரதமர் தனது உரையில், "உறுதியாகவும், நேர்மையாகவும், முடிவெடுக்கும் அதிகாரிகளுக்கு என்றுமே, அரசாங்கம் துணை நிற்கும். இருப்பினும், அவ்வாறு எடுக்கும் முடிவுகள் சட்டத்திற்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். எந்த முடிவு எடுத்தாலும், அது நாட்டு நலனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். 12வது ஐந்தாண்டு திட்டத்தின்படி, அரசாங்கம் எடுக்கும் எந்த திட்டங்களானாலும், அது எல்லா பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டியதாக இருக்க வேண்டும். வளர்ச்சியானது எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைத்தாக வேண்டும். அதற்கு மூன்று வழிகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். முதலாவது, ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை அளிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். இரண்டாவதாக வெளிப்படையாகவும், பதில் கூற கடமைப்பட்டதாகவும் அமைந்த நிர்வாகத்தை அளிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். மூன்றாவதாக அரசாங்கம் தீட்டும் திட்டங்கள் எதுவும் காலதாமதம் இல்லாமல் விரைவாக சென்றடையும் வகையில், நிர்வாக அணுகுமுறை இருந்திட வேண்டும்' என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...