|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 July, 2012

பாருக்குள்ளே கொடுமை நாடு!

மாணவியை சிறுநீர் குடிக்க வைத்தது,சாலையில் சென்ற டீன் ஏஜ் பெண் 20 பேர்  கும்பலால் மானப்பங்கப்படுத்தப்பட்டது, பணம் திருடியதாக மாணவியிடம் ஆடை களைந்து  சோதனை என்ற அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான கொடுமைகளின்  உச்சமாக, கர்நாடகாவில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கணவன் சிறுநீர்  குடிக்க வைத்த சம்பவம்  என கடந்த ஒரு வார காலத்தில்,  அடுத்தடுத்து பெண்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள கொடுமைகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளன. 

சம்பவம் 1:மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சாந்தி நிகேதன் என்ற பள்ளியின்  விடுதியில்,ஒரு மாணவி படுக்கையில் சிறுநீர் கழித்தால் என்பதற்காக, அந்த மாணவி  சிறுநீர் கழித்த போர்வையை எடுத்துவரச் செய்து,பின்னர் அதனை பிழிந்து குடிக்கச்  செய்துள்ளார் அந்த விடுதி வார்டன்.இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி கடும் கண்டனக்குரல்கள் எழுந்தவுடன், படுக்கையில்  சிறுநீர் கழிக்கும் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் ஒருவித பாரம்பரிய சிகிச்சையாகவே தாம்  அதனை செய்ததாக அந்த விடுதிவார்டன் சால்ஜாப்பு சொன்னார்.
ஆனால்  தமக்கு தண்டனை அளிப்பதற்காகவே அவ்வாறு செய்ததாக அந்த  மாணவி கதற, அந்த வார்டன் தற்போது கம்பி எண்ணுகிறார். 

சம்பவம் 2


இந்த சர்ச்சை ஓய்வதற்குள்,அசாமில் ஒரு டீன் ஏஜ் பெண்ணை  20 பேர் கொண்ட  கும்பல் மானப்பங்கம் செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.சம்பவம்  நிகழ்ந்து மூன்று தினங்கள் கழித்தே, நேற்று இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 

அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள பார் ஒன்றில், நண்பரின் பிறந்த  நாளையொட்டி,  இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, வீடு  திரும்பிக்கொண்டிருந்த அப்பெண்ணை,சுமார் 20 க்கும் அதிகமானோர்களை கொண்ட ஒரு  கும்பல் அந்த பெண்ணை முடியை பிடித்து இழுத்தும்,மேலே தூக்கியும், கீழே   போட்டும், அடித்து உதைத்தும்,ஆடைகளை இழுத்து, கிழித்தும்   மானப்பங்கப்படுத்தியுள்ள்னர்.

போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் நடைபெற்ற இச்சம்பவத்தை,உள்ளூர்  தொலைக்காட்சி ஒன்று படம்பிடித்து ஒளிபரப்பாக்கியது.அத்துடன் சமூக  வலைதளங்களான யூ டியூப், ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரிலும் அந்த வீடியோ  வெளியிடப்பட்டது.இதனையடுத்தே,அசாம் அரசு இது குறித்து விசாரணை நடத்தி  குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டது.இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அக்கும்பலை   சேர்ந்த 4 பேரை மட்டும் இதுவரை கைது செய்துள்ளனர்.மேலும் 11 பேர் அடையாளம்   காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தை  கிளப்பிய நிலையில்,தேசிய மகளிர் ஆணையம்,மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்  மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் சம்பந்தப்பட்ட  குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர்.இவ்வாறு நெருக்கடிகள் அதிகரித்ததை தொடர்ந்து குற்றவாளிகளை இன்னும் 48 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு இன்று கெடு விதித்துள்ளார் அசாம் முதல்வர் தருண் கோகை! 

சம்பவம் 3 : 

நேற்றைய அசாம் சம்பவ அதிர்ச்சி மற்றும் மேற்கு வங்கத்தில் மாணவியை ஏற்கனவே  சிறுநீர் குடிக்கவைத்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகுவதற்குள், அதே மாநிலத்தில்  மாணவியிடம் ஆடையை களைந்து சோதனை செய்யப்பட்டதாக இன்று செய்தி வெளியாகி, மேலும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் பாரக்னாஸ் மாவட்டத்தில் இயங்கி வரும் கோபால் நகர் பாலிகா   வித்யாலாயா பள்ளியிலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.இப்பள்ளியின் 8 ஆம் வகுப்பில் பணம் காணாமல் போனது. இதையடுத்து குறிப்பிட்ட   அந்த மாணவி மீது சந்தேகம் அடைந்த ஆசிரியை ரூபாலி,மற்ற மாணவர்கள் முன்பு அந்த  மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்தார்.இதனால் அந்த மாணவி மிகுந்த வேதனையடைந்து அவமானம்   அடைந்தார்.அழுதுகொண்டே வீடு திரும்பிய அந்த மாணவி, இது குறித்து தமது   பெற்றோரிடம் கூறினார்.அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து போலீசில் புகார்   அளித்தனர்.இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி   வருகின்றனர்.

சம்பவம் 4  மேற்கூறிய சம்பவத்திற்கெல்லாம் உச்சமாக, கர்நாடக மாநிலத்தில் கர்நாடகாவில்  கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சிறுநீர் குடிக்கவைத்து கணவன்  கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம்,  மகளிர் அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அருகே உள்ள தவான்கரே என்ற இடத்தை சேர்ந்த சப்னா என்ற 27 வயது  பெண்ணுக்குத்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. இவரது கணவர் ஆகாஷ் ராஜ் ஒரு பல் மருத்துவர்.கடந்த 2011 ஆம் ஆண்டு இவர்கள்  இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ஆகாஷ் ராஜுக்கு, ஒரு கிலோ தங்கம்,ஐந்து கிலோ வெள்ளி  சாமான்களை வரதட்சணையாக கொடுத்துள்ளார் சப்னாவின் தந்தை.


ஆனால் திருமணம் ஆனதிலிருந்தே,”வரதட்சணை போதாது;மேலும் 25 லட்சம்  ரூபாயை உனது தந்தையிடமிருந்து வாங்கி வா..!” என்று கூறி சப்னாவை அடித்து  துன்புறுத்தி வந்துள்ளார் ஆகாஷ் ராஜ்.இதற்கு ஆகாஷ் குடும்பத்தினரும் உடந்தையாக  இருந்துள்ளனர். இந்த அராஜகத்தின் உச்சமாகத்தான் சப்னாவை தனது சிறுநீரை குடிக்கவைத்து  கொடுமைப்படுத்தியுள்ளார் ஆகாஷ் ராஜ்.பொறுத்து பொறுத்து பார்த்த சப்னா,கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தனது சகோதரன்  வீட்டிற்கு வந்துவிட்டார்.அவர்களிடம் நடந்த சம்பவங்களை கூறி அவர் அழுதார். இதனையடுத்து தற்போது ஆகாஷ் ராஜுக்கு எதிராக காவல்துறையில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது.காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்தடுத்து நடந்துள்ள இந்த கொடுமைகளை பார்த்தால்,”பாருக்குள்ளே கொடுமை  நாடு... இந்த பாரத நாடு!”  என்று பெண்கள் பாடும் நிலைமை ஏற்பட்டுவிடும்போல!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...