|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2011

உலக 'மெகா' கோடீஸ்வரர்கள்: கார்லோஸ் ஸ்லிம் முதலிடம்

உலகின் 'மெகா' கோடீஸ்வரர் பட்டியலில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, முதலிடத்தில் இடம்பெற்றுள்ளார். 9வது இடத்தில், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளார்.'போர்ப்ஸ்' பத்திரிகை, இந்த ஆண்டிற்கான, உலக 'மெகா' கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், தொலைத்தொடர்பு துறையில் உலகளவில், முன்னணியில் உள்ள கார்லோஸ் ஸ்லிம்மின் சொத்து மதிப்பு 2,050 கோடி டாலர் அதிகரித்து, 7,400 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இவருடைய நிறுவனம், அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில், தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபடுகிறது.உலகின் 'மெகா' கோடீஸ்வரர்கள் பட்டியலில், 2வது இடத்தில் மைக்ரோ சாப்ட் கார்ப்பரேஷனின் நிறுவனர் பில்கேட்ஸ் இடம் பெற்றுள்ளார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 5,600 கோடி டாலராக உள்ளது. இவர், அவருடைய மொத்த சொத்தில், 3,000 கோடி டாலரை 'தி கேட்ஸ் பவுண்டேஷன்' அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விருவர்களையும் தொடர்ந்து, 3வது இடத்திலுள்ள வாரன் பப்பட்டின் சொத்து மதிப்பு 5,000 கோடி டாலராக உள்ளது. முந்தைய ஆண்டு, 7வது இடத்தில் இருந்த, எல்.வி.எம்.எச். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பெர்னால்டு அர்னால்டு, 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு, 4,100 கோடி டாலராக உள்ளது. 5வது இடத்தில், ஆரக்கிள் நிறுவனத்தின் லேரி எலீசன் இடம் பெற்றுள்ளார். இவருடைய சாப்ட்வேர் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு, 30 சதவீதம் அதிகரித்ததையடுத்து, இவருடைய சொத்து மதிப்பு 3,950 கோடி டாலராக உயர்ந்துள்ளது.'போர்ப்ஸ்' மேற்கொண்ட ஆய்வில், உலகளவில் 'மெகா' கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 1,210 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுடைய சொத்து மதிப்பு, 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி டாலர் என்ற அளவிலிருந்து, 4 லட்சத்து 50 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. இக்கோடீஸ்வரர்களுள், அமெரிக்காவை சேர்ந்தவர்கள் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய சொத்து மதிப்பு, 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு உள்ளது.மொத்த கோடீஸ்வரர்கள் பட்டியலில், 50 சதவீதத்தினர், பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் புதிதாக உருவாகியுள்ளனர். உலக 'மெகா' கோடீஸ்வரர்களில் சீனாவில் உள்ளவர்களின் எண்ணிக்கை, 115 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள், ரோபின் லீ என்பவருடைய சொத்து மதிப்பு, 900 கோடி டாலராக உள்ளது.உலக 'மெகா' கோடீஸ்வரர்கள் பட்டியலில், முதல் 10 இடத்தில் உள்ளவர்களின் இடம்மாறியுள்ளது, ஆனால், தொடர்ந்து இவர்களே முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.அயல்நாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல், 6வது இடத்தில் இடம் பெற்றுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு, 3,110 கோடி டாலராக உள்ளது. உலகளவில் உருக்கு உற்பத்தியில், இவருடைய நிறுவனம் மிகப்பெரியது. சென்ற 2010ம் ஆண்டில், இவருடைய நிறுவனம், 290 கோடி டாலரை லாபமாக ஈட்டியிருந்தது.இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி, 9வது இடத்தில் இடம் பெற்றுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு, 2,700 கோடி டாலராக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில், முகேஷ் அம்பானி, 4வது இடத்தில் இருந்தார். இவருக்கு அடுத்ததாக, 5வது இடத்தில் லட்சுமி மிட்டல் இருந்தார்.உலக 'மெகா' கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 49ல் இருந்து 55 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை சீனாவில், 69ல் இருந்து 115 ஆகவும், ஆசிய பசிபிக் பகுதிகளில் 243ல் இருந்து 332 ஆகவும் உயர்ந்துள்ளது.உலகின் மிகப்பெரிய 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில், 36வது இடத்தில், விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜியும், 42வது இடத்தில் எஸ்ஸார் குழுமத்தின் சகோதரர்கள் சசி மற்றும் ரவி ரூயாவும், 56வது இடத்தில் சாவித்திரி ஜிந்தாலும், 87வது இடத்தில் கவுதம் அதானியும், 97வது இடத்தில் குமார் பிர்லாவும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.போர்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், முதல் முறையாக ஐரோப்பிய நாட்டினரை விட ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதிகம் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் ஆசியாவைச் சேர்ந்த 332 சேர்ந்த பேரும், ஐரோப்பாவைச் சேர்ந்த 300 பேரும் இதில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...