|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 June, 2011

ஊனமுற்றோரை திருமணம் செய்பவர்களுக்கும் 25 ஆயிரம் உதவி...தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,    ’’முதல் - அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும், 5 திருமண திட்டங்களின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் திருமண நிதி உதவியோடு, மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இளம்பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தியும் மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு 6.6.2011 அன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, கை அல்லது கால் இழந்தோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது மற்றும் மாற்றுத் திறனாளிகளை மாற்றுத் திறனாளிகள் திருமணம் செய்து கொள்வது என நான்கு வகை திட்டங்களின் கீழ் திருமண நிதி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாற்றுத் திறன் படைத்த பயனாளிகளும் சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திருமணநிதி உதவி திட்டங்களால் பயனடைவது போன்றே பயன்பெற முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத் தரவிட்டுள்ளார்.

இதன்படி 25 ஆயிரம் ரூபாய் திருமண நிதி உதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும், இளம் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளோமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவி தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும் 15.6.2011 அன்று ஆணையிட்டுள்ளார்.

இத்திட்டத்தினால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.   முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு மேற்காணும் ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 500 ரூபாய் மாத ஓய்வூதியத்தை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஓய்வூதியத்தை இந்த மாதம் முதலே அனைவரும் பெறலாம் என்றும் அறிவித்தார்.   இதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணைய ரகத்தின் கீழ் செயல் படுத்தப்படும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், மனவளர்ச்சி குன்றியோருக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆகிய 3 திட்டங்களின் கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.  இந்த உத்தரவின் மூலம் 76,407 மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுவார்கள். மேலும் இத்திட்டம் செயல் படுத்தப்படுவதால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 46 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்’’ என்று  கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...