|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 June, 2011

இலவச அரிசியை விலைக்கு விற்கும் ரேஷன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை!

இலவச அரிசியை விலைக்கு விற்கும் ரேஷன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உணவுத் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக வளாகத்தில் இந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உணவுத் துறை செயலாளர் யதீந்திரநாத் ஸ்வெய்ன், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் க.பாலச்சந்திரன், நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவர் வீரசண்முக மணி, குடிமைப் பொருள் வழங்கல் துறை கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியது: உணவுப் பொருள் கடத்தல், பதுக்கல் போன்ற செயல்களைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் இணைந்து உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான பணிகளைக் கண்காணிக்க வேண்டும். அவ்வப்போது வாகன சோதனை, குடோன்களில் சோதனை நடத்த வேண்டும்.உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றைப் பதுக்கும் கடத்தல்காரர்களையும் கள்ளச் சந்தையில் அவற்றை விற்பனை செய்பவர்களையும் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இலவச அரிசியை வாங்கி சில கடைக்காரர்கள் வெளிச்சந்தையில் விற்பதாகத் தகவல்கள் வருகின்றன. அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மண்ணெண்ணெய் மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள் ஆகியோர் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் ரேஷன் கடைப் பொறுப்பாளர்கள், குடோனில் உள்ள பணியாளர்கள் மீதும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதிய ரேஷன் அட்டைகள்: மாவட்டங்களில் உள்ள அரிசி மாவு அரைக்கும் பெரிய ஆலைகளில் ரேஷன் அரிசி பதுக்கப்படுகிறதா? என்பதைக் கண்டறிய வேண்டும். புதிய ரேஷன் அட்டைகளைக் கேட்கும் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, உரிய முறையில் அவற்றின் மீது விசாரணை நடத்த வேண்டும். போலி ரேஷன் அட்டைகளைக் களையும்போது உண்மையான குடும்ப அட்டைதாரர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது.ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாநிலங்களின் எல்லைகளில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி.நுகர்வோர் உதவி மையம்: சேப்பாக்கம் எழிலகம் நான்காவது தளத்தில் உள்ள மாநில நுகர்வோர் உதவி மையத்தை (044-2859 2828) அமைச்சர் ஆய்வு செய்தார். ரேஷன் அட்டை தொடர்பான புகார்கள் உள்ளிட்ட நுகர்வோர் குறித்த அனைத்துப் புகார்களையும் தொலைபேசி வழியாகத் தெரிவிக்க வகை செய்யும் உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் நேரில் கேட்டறிந்தார்.இதன்பின், "நுகர்வோர் ஆலோசனை மையம்' உள்ளிட்ட துறையின் பல்வேறு பிரிவுகளையும் அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...