|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 August, 2011

இந்தியாவை உலுக்கி எடுத்த உண்ணாவிரதங்கள்!

உண்ணாவிரதம். தன்னைத் தானே வறுத்திக் கொண்டு ஒரு உயரிய நோக்கத்தை அடைய மகாத்மா காந்தி பயன்படுத்திய ஆயுதம் இந்த உண்ணாவிரதம். வெள்ளையர்களின் இரும்பு மனதைக் கரையவைக்க பலமுறை காந்தியடிகள் இந்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார், வெற்றியும் கண்டுள்ளார். இன்று அன்னாவின் உண்ணாவிரதத்தால் நாடே பதறிப் போயுள்ளது.

இதற்கு முன்பும் இந்தியாவில் பல உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்...
அரிஜனங்களுக்காக காந்தி உண்ணாவிரதம்:
வெள்ளையர் ஆட்சியின்போது அரிஜனங்கள் என்று அப்போது அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு தனி வாக்குரிமை தர இங்கிலாந்து அரசு திட்டமிட்டது. இதை கடுமையாக எதிர்த்தார் காந்தியடிகள். அனைவருக்கும் சமமாக வாக்குரிமை தரப்பட வேண்டும். அரிஜன மக்களைப் பிரிக்கக் கூடாது, பாரபட்சம் காட்டக் கூடாது என்று கோரி உண்ணாவிரதத்தில் குதித்தார்.

காந்தியடிகளின் உண்ணாவிரதத்தைப் பார்த்து நாடு முழுவதும் ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் இறங்கினர். இதையடுத்து அரிஜன மக்களை தனியாகப் பிரிக்கும் திட்டத்தை வெள்ளையர் அரசு கைவிட்டது.

மேலும் காந்தியடிகளின் இந்த உண்ணாவிரதம் அரிஜன மக்களுக்கு பல விமோச்சனங்களை அளிக்க வழி வகுத்தது. அதுவரை கோவில்களுக்குள் நுழைய அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. இந்தியாவில் ஜாதீய முறைக்கு எதிரான முதல் சம்மட்டி அடியாக இது இன்றும் கருதப்படுகிறது.

செளரி செளரா இயக்கம்: அகிம்சையை உலகுக்குப் போதித்தவர் காந்தி. ஆனால் அவரையே கலங்கடித்து விட்டது செளரி செளராவில் நடந்த சம்பவம். போலீஸ் நிலையத்தை போலீஸாருடன் வைத்து தீவைத்துக் கொளுத்தினர் சுதந்திரத்திற்காக போராடிய மக்கள். இது காந்தியடிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அகிம்சை முறையி்ல போராட வேண்டிய நமது மக்கள் வன்முறையைக் கையில் எடுத்து விட்டார்களே என்று மனம் நொந்து, தன்னைத் தானே தண்டித்துக் கொள்வதற்காக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதி்த்தார். பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து வற்புறுத்தியதன் விளைவாக 5வது நாளில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் காந்தி.

பொட்டி ஸ்ரீராமுலு:
அமர்ஜீவி என்று புகழப்படுபவர் பொட்டி ஸ்ரீராமுலு. சென்னை மாகாணத்தின் கீழ் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த இந்த புரட்சிகரத் தலைவர் மகாத்மா காந்தியடிகளின் தீவிர தொண்டர்.

தெலுங்கு பேசும் மக்கள் உள்ள பகுதிகளை தனியாகப் பிரித்து ஆந்திரப் பிரதேசம் மாநிலம் உருவாக்க வேண்டும், சென்னையை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். இந்த உண்ணாவிரதம் அவரது மரணத்தில் முடிந்ததால் தெலுங்கு மொழி பேசுவோர் மத்தியில் பெரும் சோகம் ஏற்பட்டது. இன்று வரை பொட்டி ஸ்ரீராமுலுவின் மொழிப் பற்று ஆந்திர மக்களிடையே பெரும் தியாகச் செயலாக போற்றப்படுகிறது.

சந்திரசேகர ராவ்:
ஆந்திர மாநிலம் அமைய தனது உயிரை பொட்டி ஸ்ரீராமுலு கொடுத்தார் என்றால் அந்த மாநிலத்தை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியவர் சந்திரசேகர ராவ்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரான ராவ், 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். கிட்டத்தட்ட 11 நாட்கள் உண்ணாவரிதம் இருந்த இவரது போராட்டத்தால் தெலுங்கானா ரத்த பூமியாகியது. அதன் பின்னர் வலுக்கட்டாயமாக இவரை மருத்துவமனைக்குச் சென்று குளுக்கோஸ் ஏற்றி உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது அரசு.

நானோவை எதிர்த்து மமதா உண்ணாவிரதம்:
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டி ஆட்சியைப் பிடித்தவரான மமதா பானர்ஜி,எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது நானோ தொழிற்சாலை அமைக்க சிங்கூரில் டாடா நிறுவனத்திற்கு விவசாய நிலங்களைக் கொடுத்ததைக் கண்டித்து மிகப் பெரிய போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

அந்தப் போராட்டத்தின் உச்சம் காலவரையற்ற உண்ணாவிரதம். கிட்டத்தட்ட 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் மமதா. இந்தப் போராட்டமும் நாட்டை பரபரப்பில் ஆழ்த்தியது. மமதாவின் போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறியது டாடா. இந்த வெற்றிதான், பின்னர் நடந்த சட்டசபைத் தேர்தலில் மமதாவை ஆட்சிக் கட்டிலில் உட்கார வைக்க உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேதா பட்கர்:
நர்மதா பச்சாவோ அந்தோலன் அமைப்பின் முன்னோடியான மேதா பத்கர், தனது வாழ்க்கை முழுவதும் போராட்டங்களுக்காகவே அர்ப்பணித்தவர். பல்வேறு பிரச்சினைகளுக்காக கடுமையாக போராடியுள்ள பத்கர், நர்மதா பச்சாவோ அந்தோலன் அமைப்பின் முக்கிய முகம் ஆவார். சர்தார் சரோவர் அணைக்கு எதிராக போராடி வந்த பழங்குடியினருக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து போராடியவர் பத்கர். அணைக்கு எதிராக அவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார். இந்தப் போராட்டம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இராம் ஷ்ர்மிளா:
மணிப்பூரைச் சேர்ந்த இராம் ஷர்மிலா கடந்த 11 ஆண்டுகளாக இந்தியப் பாதுகாப்புப் படையினரை எதிர்த்து தனி நபராக போராடி வருகிறார். மலோம் என்ற பகுதியில் பத்து அப்பாவிகளை பாதுகாப்புப் படையினர் கொடூரமாகக் கொன்றதற்கு நியாய்ம் கேட்டு இந்தப் போராட்டம்.

வட கிழக்கு மாநிலங்களிலிருந்து பாதுகாப்புப் படையினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 11 வருடங்களாக இவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உடல் பலவீனமாகி விட்ட நிலையில், டியூபுகள் மூலம் திரவ உணவுகளை கொடுத்து உயிரைப் பிடித்து வைத்து வருகின்றனர். இந்த இரும்புப் பெண்ணின் இந்தப் போராட்டம் பெரியஅளவில் யாராலும் கண்டு கொள்ளப்படாமல் போனது மிகப் பெரிய துரதிஷ்டம்.

இன்று அன்னா...
இன்று அன்னா ஹஸாரே, ஊழலுக்கு எதிராக தலைநகரில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 9 நாட்களாகி விட்ட அவரது உண்ணாவிரதத்தின் மூலம் மக்களை ஊழலுக்கு எதிராக ஒன்று திரட்டிய பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. அன்று வெள்ளையனை விரட்ட மகாத்மா காந்தி கிடைத்தார். இன்று ஊழல் கொள்ளையர்களை விரட்ட வந்திருக்கும் அன்னாவை, மக்கள் மிகவும் பெருமையுடன் பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...