|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 August, 2011

சங்கர்ராமன் கொலை வழக்கு: நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் 'டீல்'!

சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசுவது போன்ற ஆடியோ சிடி வெளியாகியுள்ளது. நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர் முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந் நிலையில் இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஜெயந்திரர், அவரது பெண் உதவியாளர், 2 இடைத்தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக்கொள்ளும் உரையாடல் அடங்கிய சி.டி. வெளியாகி உள்ளது. இதை ஒரு தமிழ்த் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை குறித்தும், பணம் பட்டு வாடா குறித்தும் பேசுவது போன்று உரையாடல் உள்ளது. இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுதலையாக ஏதோ 'டீல்' நடந்துள்ளதாகத் தெரிகிறது.

அதில் பேசும் பெண் குரலுக்குச் சொந்தக்காரர் கெளரி என்பவர் ஆவார். இவர் ஜெயேந்திரரின் உதவியாளர் என்று அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.இந்த சி.டி. உண்மையானதா, உண்மை என்றால் பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

அதுவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது வார இறுதியில் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இதன்மூலம் புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார் ஜெயேந்திரர்.

இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் திமுக ஆட்சியின்போது இந்த வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து ஜெயேந்திரருக்கு ஆதரவாக பல்டியடித்தனர். இப்போது மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ஜெயேந்திரர் தொடர்பான புதிய சிடி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...