|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 August, 2011

பண்டைத் தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டு துவக்கம் சித்திரை மாதம் தான்!

சித்திரை 1ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து, சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ""பண்டைத் தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டு துவக்கம் சித்திரை மாதம் தான். மக்கள் நம்பிக்கையை சட்டம் மூலம் மாற்றுவது சரியல்ல. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டத்தை ரத்து செய்வதே சரி,'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை சட்டம்) 2008 நீக்கச் செய்யும் சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சித்திரை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவதற்காக, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று முந்தைய தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய, இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இம்மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மசோதாவை ஆதரித்து, செ.கு.தமிழரசன் பேசினார். எனினும், இந்த சட்டத்தின் மீது விவாதம் நடத்த வேண்டியிருப்பதால், இதை நிறைவேற்றாமல் நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின.

இது பற்றி முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும், தனக்கு மட்டுமே அக்கறை இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை, பொதுமக்கள் மத்தியில் உருவாக்க, முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தமிழ்ப் புத்தாண்டு சட்டம் 2008ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டம், ஒரு சுய விளம்பரத்துக்காக ஏற்றப்பட்டதே தவிர, இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. மாறாக, ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதப் பிறப்பை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வரும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இச்சட்டம் அமைந்துள்ளது.

தமிழர் காலக் கணிப்பு முறைப்படி, ஒரு ஆண்டுக்குரிய 12 மாதங்களில் சித்திரை முதலாவது மாதம். இது, சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. சூரியன், மேஷ ராசிக்குள் நுழைவதில் இருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம். ஆண்டின் துவக்கம் வசந்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், சித்திரை மாதத்தை ஆண்டுத் தொடக்கமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டுள்ளனர். பல்லாண்டு காலமாக, சித்திரை முதல் நாளையே புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். சித்திரை மாதத்தில் புத்தாண்டு துவங்குவது என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. கோடைக் காலமே முதலாவது பருவம் என, "சீவக சிந்தாமணி'யில் வர்ணிக்கப்பட்டுள்ளது. பண்டைத் தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டு துவக்கம் சித்திரை மாதம் தான். மேலும், பல்வேறு கல்வெட்டுகளும், எண்ணற்ற இலக்கியங்களும் சித்திரை முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டு துவங்குவதை உறுதிப்படுத்துகின்றன. தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், யாருக்கும் பயனளிக்காத, காலங்காலமாக போற்றி பாதுகாத்து வந்த மரபுகளை மீறும், தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிற, இச்சட்டத்தை ரத்து செய்வது தான் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு முதல்வர் கூறினார். இதன் பின், அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் கொண்டு வந்த சட்ட மசோதா, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது

தமிழர் பெருமை மீட்பு-விஸ்வ ஹிந்து பரிஷத்:தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை 1 என்று மாற்றியிருப்பதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் வரவேற்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வேதாந்தம் வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களின் பழம்பெருமை வாய்ந்த ஆன்மீகப் பாரம்பரியத்தையும் கலாசாரப் பெருமையையும் மீட்டுக் கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. சென்ற திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட தமிழர் விரோத சட்டமான, தமிழ்ப் புத்தாண்டு தினத்தை சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து தை மாதம் முதல் நாளுக்கு மாற்றியமைத்த புதிய தமிழ்ப் புத்தாண்டு சட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது.தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை முதல் நாளுக்கு மாற்றி சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டதை வரவேற்கிறோம்.

மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பேசிய முதல்வர், தமிழ் மக்களின் பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் மகோன்னதத்தையும், தமிழர்களின் பழம்பெருமை வாய்ந்த காலக் கணிப்பின் சிறப்பையும் கூறியதோடு, வானியல் நூல்களையும் சங்க இலக்கியங்களையும் மேற்கோள் காட்டி தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதப் பிறப்பில் கொண்டாடப்படுவதே சிறப்பானது, முறையானது என்பதையும் வெகு அழகாக விளக்கிக் கூறியுள்ளார்.

மேலும் சுய விளம்பரத்திற்காக நிறைவேற்றப்பட்ட திமுக அரசின் சட்டமானது தமிழ் மக்களின் ஆன்மீக மற்றும் கலாசார உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டி, ஆதீன கர்த்தர்கள், தமிழ்ப் பண்டிதர்கள், வானியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்துக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க இந்த சட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாக எடுத்துரைத்தது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...