|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 November, 2011

தமிழகத்தில் ஓடும் அனைத்து ஆம்னி பஸ்களும், டிச., 22க்குள்,வேக கட்டுப்பாட்டு கருவி'யை பொருத்த வேண்டும்' சென்னை ஐகோர்ட்!


வழக்கறிஞர் காசிநாத பாரதி, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில், "கடந்த ஜூன் மாதம், வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் தனியார் ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். பஸ்சில் பயணம் செய்த ஒரு பயணியும், டிரைவரும் மட்டுமே உயிர் பிழைத்தனர். விபத்திற்கு, லாரியை முந்திச் செல்ல முயன்றதே காரணம் என தெரிந்தது. "திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம்பிச்சை, பயணம் செய்த காரை முந்திச் செல்ல முயன்ற லாரியால் விபத்து ஏற்பட்டது. இதில் அவர் உயிரிழந்தார். அரசு பஸ்சில், 12 மணி நேரத்தில் செல்லும் ஒரு இடத்தை, ஆம்னி பஸ்கள் 8 மணி நேரத்தில் சென்றடைகின்றன. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் உயிரை பொருட்படுத்தாமல், நிர்ணயிக்கப்பட்ட மித வேகத்தை விட, அதிவேகத்தில் செல்கின்றன. "விதிகளை மீறும் ஆம்னி பஸ்கள் மீது, தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட ஆம்னி பஸ்களின் செயல்பாடுகளை கண்காணிக்க தனி விதிமுறைகளை உருவாக்கி, ஆம்னி பஸ்களின் முகப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, அதில் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை விசாரித்த, நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது: தமிழக அரசு, ஆம்னி பஸ்களில் வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்துவது குறித்து அறிவிக்கை வெளியிட வேண்டும். அடுத்த மூன்று மாதத்திற்குள், நடுத்தர மற்றும் கனரக வாகனங்களில் வேக கட்டுப்பாட்டுக் கருவியை பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். அனைத்து ஆம்னி பஸ்களிலும், டிச., 22க்குள் வேக கட்டுப்பாட்டுக் கருவியை பொருத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட 90 கி.மீ., வேகத்தை விட, அதிவேகத்தில் செல்லும் ஆம்னி பஸ்கள் மீது, போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும், விதிகளை மீறும் பஸ்களின் உரிமத்தை புதுப்பிக்கக் கூடாது. போக்குவரத்து அதிகாரிகள், ஓட்டுனர்கள், மதுபானம் அருந்தி வாகனங்களை ஓட்டுகிறார்களா என்பதை திடீர் சோதனைகள் நடத்தி கண்டறிய வேண்டும். அவ்வாறு ஓட்டுவது தெரிந்தால், ஓட்டுனர்களின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும். குறுகிய காலத்திற்குள் வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்தாத, "ஆல் இந்தியா பெர்மிட்' பெற்ற வாகனங்களிடமிருந்து வரி வசூலிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...