|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 November, 2011

கனிமொழிக்காக காஞ்சி கோவிலில் விசேஷ வழிபாடு!


ஸ்பெக்டரம் ஊழல் வழக்கு விசாரணை இன்று துவங்க உள்ள நிலையில், கனிமொழி விரைவில் விடுதலை பெற வேண்டி, காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், நேற்று விசேஷ வழிபாடு நடத்தப்பட்டது. கனிமொழி சார்பில், தி.மு.க., எம்.பி., வசந்தி ஸ்டான்லி முன்னின்று வழிபாடு நடத்தினர்.

வழக்கில் இருந்து விமோசனம் தரும்...: காஞ்சிபுரம் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், சாலையிலிருந்து 6 அடி பள்ளத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் மறைந்த முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து ஐயமும், கருத்து வேறுபாடும் எழுந்தன. இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தீர்த்துக் கொள்ளவும், அவற்றின் உண்மைப் பொருளை அறியவும், காஞ்சிபுரத்தில் விசேஷமாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். அவர்களுடைய வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவர்கள் முன் தோன்றி, அவர்கள் பிரச்னையை தீர்த்து வைத்தார். இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவிலில் உள்ள இறைவன், "வழக்கறுத்தீஸ்வரர்' என காலம் காலமாக அழைக்கப்படுகிறார். "லோக்கல்' வழக்கு முதல் "ஸ்பெக்ட்ரம்' வரை:தற்போது, கோர்ட் வழக்குகளில் சிக்கித் தவிப்போர், இக்கோவிலில் வந்து வழிபட்டால், வழக்கிலிருந்து விடுதலை பெறுவதாக ஐதீகம். சமீப காலமாக வழக்குகளில் சிக்குவோர், இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது அதிகரித்து வருகிறது. அதிக அளவில் அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் வந்து செல்கின்றனர். நேற்று வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேகம் நடந்தது. அதைக் காண, பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இறைவனை தரிசிப்பதற்காக, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

மாலை 6.20 மணிக்கு, தி.மு.க., கொடி கட்டிய, வெள்ளை நிற டாடா சபாரி கார் (பதிவு எண்: டி.என்.10. ஏ.ஏ-5) கோவில் முன் வந்து நின்றது. அதிலிருந்து தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வசந்தி ஸ்டான்லி இறங்கினார். அவருடன் காங்கிரஸ், காஞ்சிபுரம் மாவட்ட பொதுச் செயலர் விஜயகுமார் மற்றும் இருவர் வந்தனர். அவர்களை காங்கிரஸ் பொருளாளர் ஜோஷி வரவேற்றார். அனைவரும் கோவில் உள்ளே சென்றனர். வழியில் வசந்தி ஸ்டான்லியிடம், விஜயகுமார் வேட்டி எடுத்து வைத்துள்ளீர்களா எனக் கேட்டார். அவர் எடுத்து வைத்துவிட்டேன் என்றார். அனைவரும் பக்தர்கள் வெளியே வரும் பகுதி வழியாக, கோவில் உள்ளே நுழைந்தனர். மூலஸ்தானம் முன் சென்றதும், அர்ச்சகரிடம் வசந்தி ஸ்டான்லி, தான் கொண்டு வந்திருந்த, மஞ்சள் நிற பாலித்தீன் கவரைக் கொடுத்தார். அதில் வேட்டி மற்றும் அர்ச்சனைப் பொருட்கள் இருந்தன. அர்ச்சகர் அந்த பொருட்களுடன் கருவறைக்குள் சென்றார்.

சுவாமியைக் கண்ட வசந்தி ஸ்டான்லி, பக்தி பரவசத்துடன் கண் மூடி நின்றார். வரிசையில் நின்ற பக்தர்கள், சுவாமியை பார்க்க முடியவில்லை எனக் கூறியதால், வசந்தி ஸ்டான்லியை கீழே உட்காரும்படி அர்ச்சகர் கூறினார். மாலை 6.32 மணிக்கு, மின் தடை ஏற்பட்டது. அப்போது, கனிமொழி பேரில் அர்ச்சனை நடந்ததாகத் தெரிகிறது. அர்ச்சகர் அர்ச்சனையை முடித்துவிட்டு வந்து, அவருக்கு மாலை அணிவித்தார். விபூதி, குங்குமம் பிரசாதம் வழங்கினார். அவர் பயபக்தியுடன் பெற்றுக் கொண்டார். மற்றொரு அர்ச்சகர், அவர் கொண்டு வந்த பையை திரும்பக் கொண்டு வந்து கொடுத்தார். அவர் வைத்துக் கொள்ளும்படி கூறினார். அர்ச்சகர் மீண்டும் பையை, சுவாமியிடம் கொண்டு சென்றார். இரண்டு நிமிடத்தில் மின்சாரம் வந்தது. வசந்தி ஸ்டான்லி தனது வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்பினார். கொடி மரம் முன் வணங்கிவிட்டு, மாலை 6.36 மணிக்கு, தனது காரில் புறப்பட்டு சென்றார். கனிமொழிக்காக ஏற்கனவே மொட்டை போட்டுள்ள வசந்தி ஸ்டான்லி, சிறையிலிருக்கும் கனிமொழி விரைவில் விடுதலையாகி வெளியில் வரவேண்டும் என்பதற்காக, வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...