|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 November, 2011

அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சாம்பலுக்கு மாதம் ரூ.24 லட்சம் மாமூல்!


மேட்டூர் அனல் மின் நிலையத்தில், இலவசமாக வழங்கப்படும் சாம்பல், டன் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம், மாதந்தோறும் 24 லட்ச ரூபாய், வெளிப்படையாகவே மாமூல் வசூலிப்பதாக, ஹாலோ பிரிக்ஸ் செங்கல் உற்பத்தியாளர்கள், பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இப்பிரச்னையில், தமிழக முதல்வர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில், நான்கு மின் நிலையங்களில், மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்திக்கு எரிபொருளாகப் பயன்படும் நிலக்கரி, பயன்பாட்டுக்குப் பின், சாம்பல் கழிவாக வெளியேறுகிறது.வெளியேறும், 4,000 டன் சாம்பல், நீரில் பதப்படுத்தப்பட்டு, உலர் சாம்பல், ஈரச் சாம்பல் என, இரு ரகமாகப் பிரிக்கப்படுகிறது. இந்த வகை சாம்பல், சிமென்ட் மற்றும் ஹாலோ பிரிக்ஸ் செங்கல் உற்பத்திக்கு, மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.இதில், ஹாலோ பிரிக்ஸ் உற்பத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 சதவீதப்படி, 800 டன், சிமெண்ட் ஆலைகளுக்கு 80 சதவீதப்படி, 3,200 டன் உலர், ஈரச் சாம்பல் வினியோகிக்கப்படுகிறது.

இவற்றில், மத்திய அரசின் சிறு தொழில் சட்டத்தின் கீழ், 106 ஹாலோ பிரிக்ஸ் செங்கல் கம்பெனிக்கு இலவசமாகவும், 16 உயர்நிலை செங்கல் உற்பத்தி கம்பெனிக்கு, டன் 300 ரூபாய் வீதமும், சிமென்ட் ஆலைகளுக்கு டன் 350 ரூபாய் வீதம், உலர், ஈரச் சாம்பல் விற்பனை நடக்கிறது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருச்சி, கோவை உட்பட, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், ஹாலோ பிரிக்ஸ் செங்கல் உற்பத்திக்கு, உலர், ஈரச் சாம்பல் பயன்படுத்தப்படுகிறது.இலவசமாக வழங்க வேண்டிய இந்த சாம்பலுக்கு, வசூல் வேட்டை நடத்துவதாக, ஆணித்தரமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின் வாரிய அதிகாரிகள் துணையோடு, நோட்டு போட்டு வசூல் வேட்டை கன ஜோராக நடந்து வருகிறது. ஞாயிறு தவிர, 6 நாள் சாம்பல் விற்பனை மேற்கொள்ளப்படும். திங்கள்தோறும், செங்கல் கம்பெனிக்கு தேவையான சாம்பல் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6 நாட்களில் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும்.ஆனால், டன் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம், "கவனிப்பு' நடந்தால் மட்டுமே, இலவச சாம்பல் வினியோகம் நடக்கிறது. இல்லையெனில், ஒதுக்கீட்டைப் பாதியாகக் குறைத்து, காலதாமதப்படுத்தி வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, ஹாலோ பிரிக்ஸ் செங்கல் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:மத்திய அரசு உத்தரவுப்படி, 106 சிறு தொழில் செங்கல் உற்பத்திக்கு, 800 டன் சாம்பல் இலவசமாகத் தர வேண்டும். ஆனால், டன் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் வசூல் செய்து கொண்டு சாம்பல் தருகின்றனர். தர மறுத்தால் 35 டன் கொண்ட ஒரு லோடு சாம்பலுக்குப் பதிலாக, வெறும் 20 டன்னாக குறைத்துத் தருகின்றனர்.லாரி வாடகை, டிரைவர் படி, வழியில் அதிகாரிகளுக்கு மாமூல் கவனிப்பு என, கட்டுபடி ஆகாது எனக் கூறி, டிரைவர்கள் வரமறுக்கின்றனர். எனவே, வேறு வழியின்றி, டன் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் லஞ்சம் கொடுத்து சாம்பல் வாங்க வேண்டியுள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு, 80 ஆயிரம் ரூபாய் வீதம், மாதம், 24 லட்ச ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டி உள்ளது. அனல் மின் நிலைய தலைமை இன்ஜினியர் மாது, மேற்பார்வைப் பொறியாளர் (மெக்கானிக்கல்-2) கிருஷ்ணசாமி ஆகியோர் தான், சாம்பல் அளவு ஒதுக்கீடு செய்வர். ஆனால், மூன்று மாதமாக, இவர்களுக்குத் தெரியாமலேயே சாம்பல் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.மாமூல் வசூலிக்க கிருஷ்ணசாமி உடன்படாததால், அவரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்னை, மின் வாரிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் வரை சென்று, கிருஷ்ணசாமி பணி ஓய்வு பெற, இன்னும் 3 மாத காலமே உள்ளதால், அவரை இடம் மாற்றுவதற்கான முயற்சி கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...