|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 November, 2011

நான்கு நிமிடத்திற்கு ஒரு தற்கொலை!


ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கு ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மட்டும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை மூலம் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் என்றாவது ஒருநாள் மரணம் நிகழும். இயற்கையான நிகழவேண்டிய நிகழ்வினை எண்ணற்றோர் இயற்கைக்கு மாறாக சமூகத்தின் எற்பட்ட கோபத்தினால் தங்களின் இன்னுயிரை தாங்களாகவே மாய்த்துக்கொள்கின்றனர். இந்தியாவில் நாளொன்றுக்கு 368 பேர் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் கணக்கெடுப்பு. இதன்படி மணிக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை மூலம் மரண மடைந்துள்ளனர்.

தென்னிந்தியர்கள் அதிகம்; தற்கொலை செய்து கொள்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா கர்நாடகா மற்றும் மகராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்தான். பொருளாதார ரீதியில் முன்னணியில் உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பது கவனிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது. மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள சென்னை, பெங்களூருவில்தான் தற்கொலைகள் அதிகம் பதிவாகியிருக்கின்றன.அதேபோல் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ள திருப்பூரில் தற்கொலைகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. தற்கொலை செய்து கொண்டவர்களில் 41 சதவிகிதத்தினர் சுயதொழில் புரிந்தவர்கள். மாணவர்களின் தற்கொலை விகிதம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. ஐந்தாண்டுகளில் மட்டும் 26 சதவிகித மாணவர்கள் தற்கொலை மூலம் மரணமடைந்துள்ளனர்.

விவசாயிகள் தற்கொலை: இந்தியாவில் அரை மணிநேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். கடந்த மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பாவில்தான் கடந்த 16 ஆண்டுகளில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள இடமாக பதிவாகியுள்ளது இவ்வாறு பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மென்பொருள் விஞ்ஞானிகள் முதல் மாணவர்கள் வரை தற்கொலைக்கான காரணம் பலவாக உள்ளது.

ஆலோசனை அவசியம் ; பணிச்சூழலில் ஏற்படும் மன அழுத்தம், விவசாயத்தில் ஏற்படும் ஏமாற்றம். கல்வி நிலையங்களில் ஏற்படும் அழுத்தம் என பல சூழல்கள் தற்கொலைக்கான காரணங்களாக கூறப்படுகின்றன. பொதுவாக தன்னை சமூகத்தில் யாரும் மதிக்கவில்லை என்றோ, சமூக அநாதை என்ற எண்ணம் தோன்றும் போதோ தற்கொலை எண்ணம் உருவாவதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவயதில் இருந்தே வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை பெற்றோர்கள் கற்றுத்தரவேண்டும். கல்வி நிறுவனங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் ஆலோசனை மையங்களை மனிதவளப் பிரிவுகளில் உருவாக்க வேண்டும் என்றும் உளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...