|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 November, 2011

அதி வேகமாக அதிகரித்து வரும் சர்க்கரை வியாதி!


உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வரும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. அதன் கோரப் பிடியில் சிக்கி கோடிக்கணக்கான இந்தியர்கள் தவித்து வரும் நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையிலும் நீரிழிவு நோய் அதி வேகமாக பரவி வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். முன்பெல்லாம் 30 வயதுக்கு மேற்பட்டோரைத்தான் நீரிழிவு நோய் பீடிக்கும். ஆனால் இன்று குழந்தை முதல் எந்த வயதினரையும் அது விடுவதில்லை. சென்னையைப் பொறுத்தவரை அதிக அளவில், அதி வேகமாக நீரிழிவு நோய் பரவி வருவதாக பிரபல நீரிழிவு நோய் நிபுணரான டாக்டர் மோகன் எச்சரிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னையில் மிக வேகமாக சர்க்கரை வியாதி பரவி வருகிறது. இது கவலை தருவதாக உள்ளது. எங்களது மையத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஐந்து மடங்கு அதிக அளவிலான நோயாளிகள் வரத் தொடங்கியுள்ளனர். இது நிச்சயம் கவலைக்குரிய ஒன்று. டைப் 2 எனப்படும் நீரிழிவு நோய்தான் தற்போது 30 வயதுக்கு உட்பட்டவர்களை பெருமளவில் தாக்குகிறது. முன்பெல்லாம் இதற்கான வாய்ப்பே இல்லாத நிலைதான் இருந்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக 30 வயதுக்குட்பட்டவர்களை பெருமளவில் இந்த டைப் 2 நீரிழிவு தாக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மக்களின் வாழ்க்கை முறை மாறிப் போயிருப்பது, உணவுப் பழக்க வழக்கம், உடல் பருமன் ஆகியவையே காரணம்.

குறிப்பாக குழந்தைகளிடம் காணப்படும் நொறுக்குத் தீணி உண்ணும் பழக்கம், உடல் பருமன், சுறுசுறுப்பாக செயல்பட முடியாத அளவுக்கு அவர்கள் டிவி, வீடியோ கேம்ஸ் உள்ளிட்டவற்றுக்கு அடிமையாகிப் போயிருப்பது என பல காரணங்களால் டைப் 2 நீரிழிவுக்கு அவர்கள் ஆட்படுகிறார்கள். சிறார்கள் மத்தியில் நீரிழிவுநோய் அதிகரித்து வருவது பெரும் கவலைக்குரிய ஒன்று. நாம் விரைவாகவும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே நான் கருதுகிறேன். முன்பு அச்சப்பட்டதை விட தற்போது அதிக அளவிலான சிறார் நீரிழிவு நோயாளிகள் நாட்டில் உள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சி தருவதாக உள்ளது.

இந்தியாவில் டைப் 1 நீரிழிவு கொண்ட சிறார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேலாக இருக்கும் என்று தகவல் கூறுகிறது என்றார் அவர். உலக அளவில் ஆண்டுதோறும் நீரிழிவால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கும் 12 முதல் 14 வயதுடையவர்களின் எண்ணிக்கை 27,000 என்று கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் 12,000 பேர் உள்ளனர் என்பது அதிர்ச்சித் தகவலாக உள்ளது. தமிழகத்தில் இன்சுலின் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாத நிலையை நோக்கி பெருமளவிலான சிறார்கள் போய்க் கொண்டுள்ளனர் என்கிறார் மோகன்.

மேலும் பிறந்து 6 மாதத்தைக் கூட தாண்டாத நிலையில் பல குழந்தைகளையும் சர்க்கரை வியாதி பீடிக்கிறதாம். இப்படிப்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 பேர் வரை தங்களது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதாக டாக்டர் மோகன் கூறுகிறார். அமெரிக்கா மற்றும் சீனாவில் சிறார் நீரிழிவு நோயைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு ஓரளவு பலன் கிடைத்தது. அதேபோல இந்தியாவிலும் செய்ய வேண்டியது அவசியம் என்பது டாக்டர் மோகனின் கருத்தாகும். 
மத்திய அரசும், மாநில அரசுகளும் விரைந்து செயல்பட்டு சிறார்களிடையே அதிகரித்து வரும் நீரிழிவு மற்றும் உடல் பருமன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டாவிட்டால் நீரிழிவின் தாக்கம் அபாயகரமான அளவைத் தாண்டி விடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...