|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 November, 2011

கிங்பிஷர் கேலண்டர் என்ன ஆகும்?


நஷ்டம் ஏற்படுத்தும் ரூட்களில் மத்திய அரசு விமானங்களை இயக்கச் சொல்வதாலும், விமான எரிபொருள் விலை உயர்வாலும், எரிபொருளுக்கு மாநில அரசுகள் விதிக்கும் கடும் வரிகளாலும் தனது நிறுவனம் கடும் நிதித் தட்டுப்பாட்டில் சிக்கிவிட்டதாகக் கூறிவரும் கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா தொடர்ந்து பல விமான சேவைகளை ரத்து செய்து வருகிறார்.

இதற்கிடையே தனது நிறுவனத்தை காப்பதற்காக, மத்திய அரசின் சில கொள்கைகளையே மாற்றச் சொல்லியும் வலியுறுத்தி வருகிறார். அதில் ஒன்று, விமானத்துறையில் வெளிநாட்டு விமான நிறுவனங்களை முதலீடு செய்ய அனுமதிப்பது. இதுவரை இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய கட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்தக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று மல்லையா வைத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது.

இந் நிலையில் நிறுவனத்தின் காலாண்டு செயல்பாடு குறித்து விவாதிக்க கிங்பிஷர் நிர்வாகத்தின் இயக்குனர் குழு இன்று மும்பையில் கூடி விவாதிக்கவுள்ளது. அதில், கிங்பிஷருக்கு மல்லையாவின் யு.பி மதுபான தயாரிப்பு நிறுவனம் தந்துள்ள கடன்களை பங்குகளாக மாற்றுவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. கிங்பிஷர் சுமார் 7,000 கோடி கடனில் மூழ்கியுள்ளது. இதில், யு.பி நிறுவனம் தந்த கடன், ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 13 வங்கிகள் தந்த கடனும் அடக்கம். இந் நிலையில் யு.பி. நிறுவனம் தந்த கடனை பங்குகளாக மாற்றிவிட்டால், கிங்பிஷரின் கடன் கொஞ்சம் குறையும்.

கிங்பிஷர் இயக்குனர்கள் குழு இன்று கூடி, பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து விவாதிக்கவுள்ளது என்றவுடனேயே மும்பை பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை 7 சதவீதம் அதிகரித்துவிட்டது (இது எப்டி இருக்கு!!!). கடந்த வெள்ளிக்கிழமை வரலாறு காணாத அளவுக்கு 18 சதவீதம் இந்த பங்குகள் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இன்று சிக்கல்கள் குறித்துப் பேசப் போகிறார்கள் என்றவுடனேயே அதன் விலையை 7 சதவீதம் அளவுக்கு ஏற்றிவிட்டுவிட்டனர் பங்குச் சந்தை யூக வியாபாரிகளும் முதலீட்டாளர்களும்.

இதற்கிடையே அடுத்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விமானங்களை வாங்க கிங்பிஷர் நிறுவனம் ஆர்டர் வேறு தந்துள்ளது. கிட்டத்தட்ட திவால் நிலையில் உள்ள இந்த நிறுவனம் இந்த விமானங்களை வாங்குமா என்பது சந்தேகமே. தனது யு.பி நிறுவனத்தை விரிவாக்கவும் ஐரோப்பாவில் மார்க்கூ லிக்கர் பிராண்ட்டை வாங்கவும் திட்டமிட்டுள்ள விஜய் மல்லையா, கிங்பிஷர் நிறுவனத்தில் மேலும் தனது சொந்த நிதியைப் போடத் தயாராக இல்லை. இதனால், வங்கிகளின் உதவியையும் மத்திய அரசின் உதவியையும் நாடி வருகிறார்.

கிங்பிஷர் நிறுவனத்தில் மல்லையாவின் துணை நிறுவனங்கள் 58.61% பங்குகளை வைத்துள்ளன. 13 வங்கிகள் 23.27% சதவீத பங்குகளை வைத்துள்ளன. ஆனால், கிங்பிஷரில் முதலீடு செய்த வங்கிகளின் அதிகாரிகள் இன்று கூடி விவாதித்தனர். அதில், நஷ்டத்திலிருந்து வெளியே வர கிங்பிஷர் உரிய திட்டங்களை வகுத்தாத வரை அதில் இனியும் முதலீடு செய்வதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் மும்பையில் உள்ள இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்தை விற்கவும் மல்லையா முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

சிக்கல்கள் இவ்வளவு இருந்தாலும் ஒரு 'ரொம்ப முக்கியமான கவலையும்' சிலரை வாட்டி வருகிறது. வருடாவருடம் கிங்பிஷர் காலண்டருக்காக பல்வேறு நாட்டு மாடல்களை வைத்து, உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில், கிட்டத்தட்ட முக்கால் நிர்வாண படங்களை எடுப்பார்கள். இந்த போட்டோ ஷூட் பற்றிய செய்திகள், வீடியோக்கள், படங்களை பரபரப்பாக பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடுவார்கள். படங்கள் தயாரானதும் அதை கிங்பிஷர் கேலண்டராக வெளியிடுவார்கள். இந்த கேலண்டருக்கு உலகம் முழுவதும் ஏராளமான விசிறிகள் உண்டு. ஜனவரி மாதம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் கிங்பிஷர், தனது கேலண்டர் தயாரிப்பை (குஜால் படங்களை எடுப்பதை) வழக்கம் போல் மேற்கொள்ளுமா அல்லது நிறுத்தி விடுமா என்ற கவலையை பலரும் தங்களது பிளாக், ட்விட்டர், பேஸ்புக் தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...