|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 November, 2011

அன்புள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு - ஞாநி!

வணக்கம். நான் உங்கள் ரசிகன் அல்ல. விமர்சகன். “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்று உங்களை சில வாரம் முன்னால் இதே பக்கங்களில் கோரியிருந்தேன். நீங்கள் கேட்கவில்லை. உலகத்தில் விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் எவரும் செய்யத் துணியாத ஒரு பிரகடனத்தை செய்திருக்கிறீர்கள். கூடன்குளம் அணு உலை 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று ! அணுத் தொழில்நுட்பம் 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று எந்த அணு விஞ்ஞானியும் சொல்லமாட்டார்.நீங்கள் அணு விஞ்ஞானி இல்லை என்பது எனக்குத் தெரியும். எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏரோநாட்டிகல் எஞ்சினீயரிங் படித்துவிட்டு ராக்கெட் விடுவது, ஆயுத ஏவுகணைகள் தயாரிப்பது முதலிய துறைகளில் வேலை பார்த்தவர் நீங்கள். அதிலும் பெரும்பாலும் உங்கள் வேலை நிர்வாக வேலை. ஆராய்ச்சி வேலை அல்ல. வேலை செய்யும் விஞ்ஞானிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக இருந்தீர்கள். அணுகுண்டு தயாரிப்பதற்கு உதவி செய்தீர்கள். எனவே நீங்கள் அணுமின்சாரம் என்ற முகமூடியை பலமாக ஆதரிப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.கூடன்குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அணு உலைக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை ஒழித்துக் கட்ட மத்திய அரசு சாம, தான, பேத தண்ட முறைகள் அனைத்தையும் கையாளுகிறது. அதில் ஒன்றுதான் உங்களை ஏவிவிட்டிருப்பது. அணு ஆயுத, ராணுவ ஆதரவாளரான நீங்கள் அணு உலைக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்.உங்கள் விருப்பப்படி உதயகுமாரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயத் தயாராக இருக்கிறது. அணு உலைகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களோ நாங்களோ ஒருபோதும் சொல்வதில்லை. ஏனென்றால் நாங்கள் காந்தியவாதிகள். அதுதான் நமக்குள் அடிப்படை வித்யாசம். உங்களுக்கும் மத்திய அரசுக்கும் இருக்கும் பலத்தை பயன்படுத்தி பெரிய பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக உங்கள் ‘ஆராய்ச்சி’க் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறீர்கள். அதே அளவு இடத்தை எங்களுக்கு இந்த பத்திரிகைகளை ஒதுக்கமாட்டார்கள். ஒதுக்கினால், உங்கள் சாயங்களை வெளுத்துவிடுவோம் என்பது அவர்களுக்கும் தெரியும். நீங்கள் வெளியிட்டிருக்கிற அறிக்கைக் கட்டுரையில் பல முழு உண்மைகளை மறைக்கிறீர்கள். பல அரை உண்மைகளை அள்ளி வீசுகிறீர்கள். ஒவ்வொன்றாகப் பார்த்தால் இடம் போதாது. முடிந்த வரை இங்கே பார்ப்போம்.

செர்னோபில் விபத்தில் 57 பேர் மட்டுமே இறந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். அதை விட அதிகமாக சாலை விபத்தில் பலர் சாவதாக ஒரு அபத்தமான் ஒப்பீடு செய்திருக்கிறீர்கள். சாலைவிபத்து ஏற்பட்டால், விமான, ரயில் விபத்து ஏற்பட்டால், சுற்றிலும் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மனித நடமாட்டமே அடுத்த பல வருடங்களுக்குக் கூடாது என்ற நிலைமை கிடையாது. ஆனால் அணுவிபத்து ஏற்பட்டால், அடுத்த தலைமுறை வரை தொடரும். செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட கதிரியக்க பாதிப்புகளில் இரண்டாயிரம் பேர் வரை செத்திருக்கிறார்கள் என்பதுதானே முழு உண்மை. அதை ஏன் சொல்லாமல் கேன்சர் கேஸ்கள் என்று மழுப்புகிறீர்கள் ? 1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன. (இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு நடந்தவை.) அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கை சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். எம்.ஐ..டி என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனம் ( நீங்கள் படித்த குரோம்பேட்டை எம்.ஐ.டி அல்ல) 2005லிருந்து 2055க்குள் உலகில் நான்கு பெரும் அணு விபத்துகள் நடக்கும் என்று முன்கூட்டியே கணித்திருந்தது. அதில் ஒன்றுதான் 2011ல் நடந்த புகோஷிமா விபத்து.

விபத்து மட்டுமல்ல.அணு உலைகள் இயங்கும் இடங்களிலெல்லாம் கதிரியக்க ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அதை மறுப்பவர் நீங்களும் உங்கள் கும்பலும் மட்டும்தான். அமெரிக்காவின் அணு உலைகள் இயங்கும் 65 இடங்களிலும் ரத்த, மூளை புற்று நோய்கள் அதிகரித்திருப்பதை அவர்களுடைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கே கல்பாக்கத்தை சுற்றிலும் முறையான ஆய்வை சுதந்திரமான விஞ்ஞானிகள், மருத்துவர்களைக் கொண்டு நடத்த உங்கள் அரசும் அணுசக்தி நிர்வாகமும் ஏன் அனுமதிப்பதில்லை ? இந்தியாவில் அணு உலைகளில் விபத்தே நடப்பதில்லை என்று இன்னொரு பொய் சொல்லியிருக்கிறீர்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியிடாம்ல் ரகசியமாக அல்லவா அணு சக்தி நிர்வாகம் இதுவரை இருக்கிறது? அதுவேதான் நிர்வாகம், அதுவேதான் கண்காணிக்கும் உயர் அமைப்பு. குற்றவாளியே நீதிபதியாகவும் இருக்கும் வேறு எந்த துறையும் இந்தியாவில் இல்லை. உச்ச நீதி மன்றம் போல, கணக்குத் தணிக்கை அதிகாரி போல சுயேச்சையான் விசாரணை அமைப்பு அணுசக்தித் துறைக்கு இருந்தால்தானே உண்மைகள் வெளிவரமுடியும்? அப்படி ஒரு விசாரணைக்கு அந்த துறை தயாரா? அணு உலை அமைக்க இடம் தேர்வு செய்வது பற்றிய ஆய்வு முதல், ஊழியருக்கு கதிர் வீச்சு அளவு ஆய்வு வரை எந்த அறிக்கையையும் பகிரங்கப்படுத்த மறுப்பதுதானே வழக்கமாக இருக்கிறது ?

ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் கோர் பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள். ராஜஸ்தான் உலையில் 1991ல் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக ஒரு காண்ட்ராக்டர் பெயிண்ட் அடிக்க கலந்தார். அதிலேயே பெயிண்ட்டர்கள் முகம் கழுவினார்கள். கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கல்ந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள். கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது 1994ல், கதிரியக்கம் வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து நொறுங்கி 120 டன் கான்க்ரீட் கீழே விழுந்தது.இந்த விபத்து அணு உலை இயங்கத்தொடங்கிய பிறகு நடந்திருந்தால், குட்டி செர்னோபில்தான். அணுசக்தி துறையின் பொறியாளர்களுக்கும் கட்டட காண்ட்ராக்டர்களுக்கும் இருக்கும் “நெருக்கமான உறவினால்” டிசைன்களின் தரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது. இதே போன்ற ஊழல் இந்த வருடம் ஜூலையில் ரஷ்யாவில் நடந்தது. லெனின்கிராடில் அணு உலை கட்டுமானம் நடக்கும்போது தடுப்புக் கவச சுவர் கான்க்ரீட் நொறுங்கி விழ்நுதது. இந்த உலை கூடன்குளத்தில் ரஷ்யர்கள் அமைக்கும் உலையின் அடுத்த மாடல். ஊழல் மிகுந்த இந்தியாவில் எப்படி அணு உலை கட்டுமானம் பாதுகாப்பானது என்று நம்பமுடியும் ?

இந்தியாவில் போதுமான யுரேனியம் இருக்கிறது என்று சொல்லும் நீங்கள் அது என்னவோ இலவம்பஞ்சு போல ஆபத்தில்லாமல் எட்டிப் பறிக்கும் பொருள் போல பேசுகிறீர்கள். யுரேனிய சுரங்க விபத்து, ஆபத்து பற்றி எதையும் உங்கள் கட்டுரையில் சொல்லவில்லை. இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாதுகோடா யுரேனிய சுரங்கப்பகுதியை சுற்றியுள்ல கிராமங்களில், மலட்டுத்தன்மை, புற்று நோய்கள், பிறவி ஊனம் எல்லாம் தேசிய சராசரியை விட அதிகமாகியிருப்பதை நோபல் பரிசு பெற்ற் உலக அமைப்பான அணுப்போருக்கு எதிரான் மருத்துவர் அமைப்பின் இந்தியக் கிளையின் ஆய்வு தெரிவித்திருக்கிறது.ஒரு பிரச்சினை வருவதற்கு முன்பு அது வராது என்று சொல்வதும் வந்தபிறகு அதை முன்பே கவனித்துவிட்டோம் என்று சொல்வதும்தான் அணுசக்தி துறையின் வழக்கம். நவம்பர் 1986 கன நீர் அழுத்த அணு உலை பாதுகாப்பு பற்றிய அறிக்கையில் அணுசக்தி நிர்வாகம் சொல்லிற்று- ” இந்தியாவில் சுநாமிகள் வருவதில்லை. எனவே புயல்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.” ஆனால் 2004ல் சுநாமி கல்பாக்கத்துக்கு வந்தது. கல்பாக்கம் உலை சுநாமியைக் கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டதில்லை. தப்பியது அதிர்ஷ்டமே தவிர, நீங்கள் மெச்சும் அணு விஞ்ஞானிகளின் முன்யோசனையான பாதுகாப்பால் அல்ல.

விபத்துக்கு பயந்தால் முன்னேறமுடியாது என்று ஒரு கருத்து சொல்கிறீர்கள். நீங்கள் விபத்துக்கு பயப்படாமல், கன நீரில் முகம் கழுவி, யுரேனியம் படுக்கையில் படுத்து ஆராய்ச்சி செய்து மேடம் கியூரியைப் போல நோபல் வாங்கிக் கொள்வதில் எங்களுக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை.ஆனால் ஒரு மக்கள் சமூகத்தையே அவர்கள் சம்மதம் இல்லாமல் ஆபத்துக்கு உட்படுத்த உங்களுக்கு துளிக் கூட உரிமை கிடையாது. ஆனால் கூடங்குளத்தில் அதைத்தான் செய்கிறீர்கள். நீங்கள் அதை நியாயப்படுத்துகிறீர்கள். எதிர்க்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்கிறீர்கள். என்ன அநியாயம் இது ? மக்கள் சம்மதத்தைப் பெறுவதற்காக 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கச் சொல்கிறீர்கள். தரமான, பள்ளிக்கூடம், மருத்துவமனை, தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகல், நான்குவழிச் சாலை எல்லாவற்றையும் கூடங்குளத்தை சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குறுதி தருகிறீர்கள். அய்யா, இதையெல்லாம் அணு உலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிராமங்களுக்கு செய்வதுதானே அரசின் கடமை? அணு உலைக்கு சம்மதித்தால்தான் செய்வீர்களா? கல்பாக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இதையெல்லாம் செய்திருக்கிறீர்களா? இல்லையே ? ஏன் இல்லை ? அங்கே எதிர்ப்பியக்கம் நடக்கவில்ல. எனவே லஞ்சம் கொடுக்க வில்லை, அல்லவா?

கூடங்குள அணு உலை எதிர்ப்புக்குப் பின்னால் அந்நிய சக்திகள் இருப்பதாக நீங்களும் பூச்சாண்டி காட்டியிருக்கிறீர்கள். உலகப் பொருளாதாரா ஏகாதிபத்ய சக்திகள் இந்தியா முன்னேறவிடாமல் தடுக்க இப்படி செய்வதாக் சொல்கிறீர்கள். அந்த சக்தி யார் ? அமெரிக்காதானே ? அது மன்மோகன் அரசுடன் போட்ட 123 ஒப்ப்ந்தத்தின் நோக்கம் இந்தியாவை முன்னேற்றுவதா? அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளிடம் அணு உலைகளை வாங்க இந்தியாவை சம்மதிக்கவைத்த திட்டம்தானே அது ? அதில் எப்படி இந்தியா முன்னேறும் ? விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈட்டை அணு உலை விற்ற கம்பெனி முழுக்க தரமுடியாது. இந்திய அரசே ஏற்கவேண்டும் என்று சொல்லும் ஒப்பந்தம்தானே அது ? அதை நீங்கள், ஏன் அய்யா அப்போது குடியரசுத்தலைவராக இல்லாதபோதும் எதிர்க்கவில்லை ? உலகப் பொருளாதார ஏகாதிபத்யத்துடன் அந்த ஒப்பந்தம் போடத் தடையாக இருந்த இந்திய இடதுசாரிகள் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை முறியடிக்க முலாயம் சிங் யாதவின் உதவியை நீங்கள்தான் பெற்றுத் தந்தீர்கள், இல்லையா? கூடங்குளம் விஷயத்தில் மட்டும் 100சதவிகித தேசபக்தர் ஆனது எப்படி ? 123ல் மட்டும் அமெரிக்க ஆதரவாளராக இருந்தது எப்படி ? ஜெர்மனி அணு உலைகளை மூடுகிறது என்று நாங்கள் சுட்டிக் காட்டினால், அதற்குக் காரணம் அதனிடம் யுரேனியம் இல்லை என்றும் ஆனால் இந்தியாவிடம் போதுமான யுரேனியம் இருப்பதால் நமக்கு அணு உலைதான் லாபமானது என்றும் கதை விடுகிறீர்கள். அப்படியானால் ஏன் 123 ஒப்பந்தம் போட்டு நாம் யுரேனியத்தையும், அணு உலை இயந்திரங்களையும் வெளிநாடுகளில் வாங்க வேண்டும் ? ஏன் கூடங்குளத்துக்கு ரஷ்யாவிலிருந்து யுரேனியம் வரவேண்டும் ? நம்மிடமே இருக்கிறதே ? உங்கள் அசல் நோக்கம் மின்சாரமே அல்ல. அணுகுண்டுதான். மின்சார அணு உலைகளுக்கு வெளிநாட்டு யுரேனியம் வாங்கினால், நம்மிடம் உள்ள யுரேனியத்தை மொத்தமாக அணுகுண்டுகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம். வெளிநாட்டிலிருந்து வாங்கும் யுரேனியம் உள்ள உலைகள் மட்டும் சர்வதேச கண்காணிப்புக்கு உட்படும். நம் அணுகுண்டு உலைகள் கண்காணிப்பில் வராது என்பதுதானே அரசாங்கத்தின் திட்டம், இல்லையா?

உங்கள் நீண்ட கட்டுரையில் ஒரே ஒரு விஷயத்தில்தான் ஏறக்குறைய முழு உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். சூரிய சக்தியும் காற்று சக்தியும்தான் முழுமையான தூய்மையான பசுமை சக்திகள். அவற்றுக்கு இந்தியாவில் மாபெரும் வாய்ப்புள்ளது என்பதுதான் அந்த உண்மை. ஆனால் அவற்றை நிலையானதாக நம்பமுடியாது என்று சொல்லி நல்ல பாலில் பத்து சதவிகிதம் கனநீர் கலந்துவிட்டீர்கள். ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் இப்போதே 20 சதவிகிதம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் பெறும்போது இங்கே ஏன் முடியாது ? உங்கள் விஞ்ஞான அறிவும் கோடானுகோடி ரூபாய்களும் அதற்கல்லவா செலவிடப்படவேண்டும்? சூரியசக்தியிலிருந்து 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் இங்கே சாத்தியம்.அவ்வளவு ஏன் ? இப்போது நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்துகொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் ந்மக்குக் கிடைத்துவிடும். கிராம மேம்பாட்டுக்காக புரா விடுகிறீர்களே. ஏன் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் 10 மெகாவாட், 50 மெகாவாட் அளவில் மாற்று எரிசக்தி மூலம் மின் நிலையம் அமைத்து தன்னிறைவு பெறும் திட்டம் உங்கள் புராவில் இடம் பெறுவதில்லை ? ஏன் பிரும்மாண்டமான ஆபத்தான கோடிக்கணக்கில் விழுங்கும் அணுதிட்டங்களே உங்களுக்கு இனிக்கின்றன ?
இந்த மாதம் 81 வது வயதில் நுழைந்துவிட்டீர்கள்.கடந்த 50 வருடங்களில் அணுசக்திதுறை அடுத்த இருபதாண்டு திட்டம் என்று சொன்ன எதுவும் அதன்படி நடக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனாலும் அரசு விஸ்வாசத்தினால், இந்த தள்ளாத வயதில் டெல்லி, நெல்லை, கூடங்குளம் என்று நீங்கள் அலைவது வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறீர்கள். அதிகபட்சம் இன்னும் 20 வருடங்கள். நூறைத் தாண்டி மனிதன் ஆரோக்கியமாகக வாழ்வது அரிது. உங்கள் நூற்றாண்டு வரும்போது இந்தியாவில் அணு மின்சாரம் நிச்சயம் மொத்த தேவையில் 10 சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்திராது. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாகியிருக்கும். லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை நசுக்கியிருக்கும்.

கனவு காணச் சொல்வது உங்கள் வழக்கம். எங்கள் கனவு அமைதியான இயற்கையோடு இயைந்த பசுமை வாழ்க்கை. உங்கள் கனவில் என்ன வருமோ எனக்குத் தெரியாது. ஒரு கோரமான அணு விபத்தை இந்தியாவில் உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்க்கும் கொடுமை உங்களுக்குக் கனவிலும் நேராமல் இருக்கட்டும்.இரவு படுக்கச் செல்லும் முன்பு ஒரு நிமிடம் யோசியுங்கள். அணுஉலைகள் குண்டு தயாரித்தாலும் மின்சாரம் தயாரித்தாலும் அவை மக்கள் நலனுக்கு எதிரானவை என்பது உங்கள் மனசாட்சிக்கு நிச்சயம் நன்றாகத் தெரியும். அணு மின்சாரம் ஆயுத திட்டத்தின் ஒரு முகமூடி மட்டும்தான்.மின்சாரம்தான் உண்மையான நோக்கம் என்றால் உங்களுக்குப் பிடித்தமான் காயத்ரி மந்திரத்தைப் பின்பற்றுவீர்கள். பாரதி வார்த்தையில் அதை நினைவுபடுத்துகிறேன். செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.
அன்புடன்
ஞாநி

1 comment:

  1. Yes, I agree with Nyani as I worked as a Nuclear scientist for 6 years.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...