|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 December, 2011

இனி டிரான்ஸ்பார்மர்களில் ஜி.பி.ஆர்.எஸ்., மீட்டர்!


மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில், செயற்கைக்கோளில் இயங்கும் ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்ப மீட்டர் பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், எந்த பகுதியில் மின் திருட்டு நடக்கிறது என்பதை, கம்ப்யூட்டரில் கண்டுபிடிக்க முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். மின் திருட்டு தொடர்கதை: மின் திருட்டை தடுக்க, மின் வாரிய தலைவர் தலைமையில், 17 பறக்கும் படைகளும், முன்னாள் ராணுவ வீரர்கள் கொண்ட, 25 படைகளும் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு, 6,544 மின் திருட்டு வழக்குகளும், இந்த ஆண்டு கடந்த மாதம் வரை, 3,200 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆனாலும், மின் திருட்டு தொடர்ந்த வண்ணம் உள்ளது. மின் கசிவு, மின் திருட்டு ஆகியவற்றால் ஏற்படும் இழப்பை சரி செய்யுமாறு, மின் வாரியத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களிலும், மீட்டர் பொருத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மின் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் திருட்டு தடுப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தோ அல்லது வழக்கமான சோதனை செய்யும்போது தான், மின்சாரம் திருடுவது தெரிய வருகிறது. அதனால், 75 சதவீத மின் திருட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.

டிரான்ஸ்பார்மரில் மீட்டர்: எனவே, ஒவ்வொரு டிரான்ஸ்பார்மரிலும் செயற்கைக்கோள் வசதியுடன் இயங்கும், ஜி.பி.எஸ்., ரீடிங் மீட்டர் வைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும், 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, 100 நகரங்களில் செயல்படும், 35 ஆயிரத்து 276 டிரான்ஸ்பார்மர்களுக்கு, நவீன மீட்டர் வைக்கப்படும். இந்த மீட்டர் மூலம் சம்பந்தப்பட்ட பகுதியின், வழக்கமான மின் வினியோக அளவு, மின்னழுத்த நிலை, குறைந்த மின்னழுத்த பிரச்னை, வினியோகத்தில் ஏற்படும் கோளாறு போன்றவற்றை உடனுக்குடன் கண்டுபிடிக்க முடியும். இந்த மீட்டர்களின் செயல்பாடுகள், செயற்கைக்கோள் மூலம், சென்னை மற்றும் முக்கிய நகரங்களின் கம்ப்யூட்டர் பதிவு மையங்களுடன் இணைக்கப்படும். அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள், இந்த பணிகள் முடிக்கப்பட்டு, மின் வினியோகம் சீரமைக்கப்படும். இதற்கான டெண்டர் வழங்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

களவு போகும் ரூ.1,500 கோடி: தமிழகத்தில், 2.12 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இவற்றில், விவசாய மற்றும் குடிசைகளுக்கு, 33 லட்சம் இலவச மின் இணைப்புகள் தவிர, வீட்டு உபயோகம், வணிகம், தொழிற்சாலை உள்ளிட்ட இணைப்புகள் உள்ளன. இலவச இணைப்புகளால் ஆண்டுக்கு, 7,500 கோடி ரூபாய்க்கு, மின் வினியோக இழப்பு ஏற்படுகிறது; விவசாயத்திற்கு மட்டும், 6,500 கோடி ரூபாய்க்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் அளவுக்கு, மின் திருட்டு நடப்பதாக, மின் வாரிய அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...