|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 December, 2011

யூரோவைக் காப்பாற்ற புதிய ஒப்பந்தம்.


யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு, ஒரு வழியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. எனினும், ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளில், 23 மட்டுமே இத்தீர்வை ஏற்றுக் கொண்டுள்ளன. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில், கடந்த 8, 9 தேதிகளில், ஐரோப்பிய யூனியனின் தலைவர்கள் கூடி, யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு, நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண்பது குறித்து ஆலோசித்தனர். முதல் நாள் மாநாட்டில், குறிப்பிடத்தக்க முடிவு எட்டப்படவில்லை. ஆனால், பிரிட்டன் சில கோரிக்கைகளை முன்வைத்தது. ஐரோப்பிய யூனியனின் ஒப்பந்தத்தில், சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம், ஜெர்மனியும், பிரான்சும் தெரிவித்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படலாம் என, அந்நாட்டின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்று நடந்த மாநாட்டில், அதை எந்த நாடும் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக, ஐரோப்பிய யூனியனுக்கு அப்பாற்பட்டு, நாடுகளுக்கிடையிலான மற்றொரு ஒப்பந்தமாக, அவர்களின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள், தங்கள் ஆண்டு பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,), 0.5 சதவீதத்தைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுக் கடன் ஜி.டி.பி.,யில், 3 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாது. மீறினால், தன்னிச்சையாகப் பொருளாதாரத் தடைகள், அந்நாடுகளின் மீது விதிக்கப்படும். இந்த விதிகள், அந்தந்த நாடுகளின் அரசியல் சாசனங்களில், திருத்தங்கள் மூலம் சேர்க்கப்பட வேண்டும். "யூரோப்பியன் ஸ்டெபிளிட்டி மெக்கானிசம்' (இ.எஸ்.எம்.,), 2012, ஜூலை முதல் செயல்படத் துவங்கும். தற்போதைய அதன் 500 பில்லியன் யூரோ நிதி அதிகரிக்கப்படும். கடனில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவுவதற்காக, ஐரோப்பிய யூனியன் மற்றும் யூரோ மண்டல நாடுகள், சர்வதேச நிதியத்திற்கு (ஐ.எம்.எப்.,), கூடுதலாக 200 பில்லியன் யூரோ நிதி வழங்கும். இந்த பரிந்துரைகளை, ஐரோப்பிய யூனியனின் 23 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. யூரோவைப் பயன்படுத்தாத பிரிட்டன், இதில் இருந்து விலகி நிற்பதாகத் தெரிவித்துள்ளது. ஹங்கேரி, செசன்யா, சுவீடன் நாடுகள் தங்கள், பார்லிமென்டில் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாகத் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...