|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 December, 2011

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக்...


மக்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தமிழக மக்களின் நலனுக்காக தன் சொத்துக்களை எல்லாம் விற்று முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேயர் பென்னி குயிக் படத்திறப்பு விழா இன்று சென்னையில் நடக்கிறது என்று அந்த இயக்கத்தின் தலைவர் கே. ராஜன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், ராணுவ பணி பொறியாளராக தமிழ்நாட்டுக்கு வந்த பென்னி குயிக், இந்த நாட்டை ஒரு அடிமை நாடாக கருதாமல், தன் உற்றார்- உறவினர் வாழும் பூமிபோல கருதி, மழையை நம்பி மானாவாரி சாகுபடி செய்யும் மக்களின் விவசாயத்துக்காக, அவர்களின் குடிநீர் வசதிக்காக அரசாங்கம் நிதி உதவி செய்ய மறுத்த நிலையிலும், தன் சொத்துக்களையெல்லாம் விற்று, ஏன் மனைவியின் நகைகளைக்கூட விற்று `முல்லைப் பெரியாறு' அணையை கட்டினார்.

அப்போதுள்ள ஆங்கிலேய அரசாங்கமும் சரி, அதைத்தொடர்ந்து சுதந்திரம் பெற்றபின் தமிழகத்தை ஆண்ட அரசுகளும் சரி, அவருக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் மனதில் குறிப்பாக தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்ட மக்களின் மனதில் பொன்னெழுத்துக்களால் அவருடைய பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு, கேரளா இரு மாநில மக்களும், பென்னி குயிக்கின் தியாகத்தால் உருவான இந்த அணையை போற்றி பாதுகாக்க வேண்டிய இந்த தருணத்தில், கேரள மாநிலம், `இந்த அணை பாதுகாப்பற்றது, இதை இடித்து தள்ளிவிட்டு, புதிய அணையை கட்டுவோம்' என்று சொல்வது, தமிழக மக்களின் இதயத்தை வேதனையால் வாட்டுகிறது.

அணையை மட்டும் சுக்குநூறாக உடைக்க சொல்லவில்லை. ஒரு வரலாற்று சின்னத்தையே அதுவும், போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய தியாக சின்னத்தையே சுக்குநூறாக உடைக்க சொல்வது, எந்த வகையில் நியாயம்? என்பதை எங்களுடைய கேரள சகோதரர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கல்லணையே எத்தனை நூற்றாண்டுகளுக்கு பிறகும், இன்னும் உறுதியாக இருக்கும் நிலையில், அதே தொழில்நுட்பத்தோடு, அதே முறைகளை பின்பற்றி பென்னி குயிக், அதுவும் அவர் ஒரு பொறியாளர், அவர் கட்டிய அணை பலவீனமாக இருக்கிறது என்று சொல்வது அரசியல் காரணங்களுக்காகத்தானே தவிர, அது நிச்சயமாக உண்மை இல்லை.

இப்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றிருக்கும் பென்னி குயிக் பெயரை முல்லைப் பெரியாறு அணைக்கு சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இப்படி ஒரு தியாகியின் பெயரை அந்த பகுதி மக்கள் நினைவில் வைத்திருந்தாலும், தமிழக மக்கள் அனைவரும் நினைவில் கொள்ளத்தக்க வகையில், அவருடைய வரலாற்றை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இன்று (செவ்வாய்க்கிழமை) அவருடைய திருவுருவ படத்திறப்பு விழாவை வண்ணாரப்பேட்டையில் உள்ள காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட கலையரங்கில் மாலை 3 மணிக்கு மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்துகிறது. இதே உணர்வை தமிழகம் முழுவதிலும் அரசியல் கட்சிகளும், ஆன்றோர், சான்றோர் பெருமக்களும், தமிழ் ஆர்வலர்களும் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...