|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 January, 2012

என்ன செய்கிறது இந்திய அரசு?

 இப்படித்தான் தாக்குவது என்ற வரைமுறையே இல்லாமல் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருகிறது இலங்கைக் கடற்படை. மேலும், இலங்கை மீனவர்களும் சேர்ந்து கொண்டு தமிழக மீனவர்களை தாக்கி வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் தமிழக மீனவர்கள். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவது தமிழக மீனவர்களை குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

அத்தனை பேரும் ஈழத் தமிழர்களின் அவலம், தவிப்பு குறித்து நிறையப் பேசி விட்டார்கள். ஆனால் தமிழகத்தில், ராமேஸ்வரம் பகுதியிலும், நாகப்பட்டினம் பகுதியிலும் வாழ்ந்து வரும் தமிழர்களின், குறிப்பாக மீனவர்களின் பரிதாப நிலை குறித்து அக்கறை காட்ட யாருமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கிட்டத்தட்ட தினசரி அடிபட்டு சாகும் நிலையில் உள்ளனர் இந்த மீனவர்கள். இவர்களுக்காக உரத்த குரல் கொடுக்க ஒருவரும் இல்லை என்பதே நிதர்சனம். ஈழத் தமிழர்களுக்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்தார்கள். தமிழகத்திலோ போராட்டங்கள் பல வெடித்தன. ஆனால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கோ, மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒரு போராட்டம் கூட நடந்ததில்லை.

யாராவது ஒரு மீனவர் கொல்லப்பட்டாலோ அல்லது தாக்குதல் நடந்தாலோ அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து கடும் கண்டனம் தெரிவிக்கின்றன, முதல்வராக இருப்பவர் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவார். நிவாரணத் தொகை கொடுப்பார்கள், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு கண்டன அறிக்கைகளை வெளியிடுவார்கள். அத்தோடு அந்தப் பிரச்சினை முடிந்து போய் விடும்.ஆனால் மறு நாளே மீண்டும் இலங்கைக் கடற்படைக் காடையர்கள் தமிழக மீனவர்களை அடித்து விரட்டுவார்கள், பிடித்துச் செல்வார்கள். இது தினத்தந்தியில் வரும் சிந்துபாத் கதை போல முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது.இதற்கெல்லாம் ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான் என்று மீனவர்கள் உறுபதிபடக் கூறுகிறார்கள். நாங்கள் வாழ வேண்டுமானால் கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி என்று அவர்கள் பரிதாபமாக கூறுகிறார்கள்.

சமீப காலமாக இலங்கைக் கடற்படையினர் கற்களை வீசியும் கேவலமாக தாக்கி வருகிறார்கள். கச்சத்தீவுதான் என்றில்லாமல் சர்வதேச எல்லைப் பகுதிக்கு அருகில் மீன்பிடித்தாலும் கூட வந்து தாக்குகிறார்கள். இதை இதுவரை ஒருபோதும் இந்தியக் கடற்படையோ அல்லது கடலோரக் காவல் படையோ தட்டிக் கேட்டதில்லை, தடுத்ததில்லை. மாறாக, இவர்கள் ஏன் போய் மீன் பிடிக்கிறார்கள் என்று அடிப்படையே இல்லாமல் பேசுகிறார்கள். தமிழக மீனவர்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பெரும் கேள்விக்குறியில் தொக்கி நிற்கின்றன. ஆதரவுக்கு யாரும் இல்லாமல் நிர்க்கதியாக நிற்கிறார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எத்தனை முறைதான் நாங்களும் ஸ்டிரைக் செய்வது, போராடுவது என்று விரக்தியுடன் கேட்கிறார்கள் இந்த மீனவர்கள்.

கச்சத்தீவு பகுதி பாரம்பரியமாக தமிழகத்தின் பகுதியாகும், தமிழர்களின் பூமியாகும். இங்கு மீன்பிடிக்காதே என்று கூறினால் எப்படி அதை ஏற்க முடியும் என்பது மீனவர்களின் கேள்வி. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது வரலாற்றுத் தவறு என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இந்தத் தவறை செய்தவர்கள் இப்போதாவது அதற்கு வருந்த வேண்டும், மீண்டும கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும், எங்களை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்று மீனவர்கள் உரத்த குரலில் கோருகின்றனர். சமீப காலமாக தாக்குதல்கள் தொடர்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தாதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறது சிங்களக் கடற்படை. சுட்டால்தானே பிரச்சினை, எனவே அதைத் தவிர வேறு எது செய்தாலும் தவறில்லை என்ற எண்ணத்திற்கு இலங்கைக் கடற்படை வந்து விட்டது போலத் தெரிகிறது.கல்வீசித் தாக்குவது, படகுகளை சேதப்படுத்துவது, மீன்பிடி வலைகலை அறுத்தெறிவது, அடிப்பது, சிறை பிடிப்பது என அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. பிடித்த மீன்களையும் கூட திருடிக் கொண்டு போய் விடுகிறது சிங்களக் கூட்டம்.

கச்சத்தீவில் மீனவர்கள் ஓய்வெடுக்கலாம், மீன் பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம் என்று இந்தியா, இலங்கை இடையிலான ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தாலும் அது இதுவரை ஒருமுறை கூட அமல்படுத்தப்படவில்லை. அந்தப் பக்கம் வந்தாலே கூட இலங்கைப் படை தமிழக மீனவர்களைத் தாக்குகிறது. பிறகு எதற்கு இந்த ஒப்பந்தம் என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது உலகமே பார்த்தது. அப்படி இருக்கையில், நமது எல்லைப் பகுதியில், இலங்கைக் கடற்படையும், சிங்கள மீனவர்களும் தொடர்ந்து நமது நாட்டு மீனவர்களைத் தாக்கும்போது அதை ஏன் இந்தியக் கடற்படை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் புரியவில்லை. ஒரு வேளை நாளை தீவிரவாதக் கூட்டம் ஒன்று தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை ரூபத்தில் வந்து தாக்கி ஊடுறுவினாலும் கூட நமது படையினர் வேடிக்கை பார்ப்பார்களா என்று கேட்கிறார்கள் தமிழக மீனவர்கள்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் மறு வாழ்வுக்காகவும், இலங்கைத் தமிழ்ப் பகுதிகளின் மறு சீரமைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் பணத்தைக் கொட்டுகிறது இந்திய அரசு. இதுதொடர்பாக இந்திய அரசுத் தரப்பில் பலரும் இலங்கைக்குப் படையெடுத்துப் போய் பார்த்து வருகின்றனர். ஆனால் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் நலன் குறித்து ஒரு துரும்பைக் கூட மத்திய அரசு எடுத்துப் போட முன்வராதது ஏன் என்பதுதான் புரியவில்லை.சீனாவையும், பாகிஸ்தானையும் காட்டி இலங்கை மிரட்டுகிறதாம், இதற்காக இலங்கையை தாஜா செய்ய அது என்ன செய்தாலும் இந்திய அரசு தட்டிக் கேட்காதாம். இதற்காக நமது நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை படையினர் என்ன செய்தாலும் அதை நாம் கண்டு கொள்ள மாட்டோமாம். இந்திய அரசின் இந்த லாஜிக் சற்றும் புரியவில்லை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...