|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 April, 2012

ஹில் கிருஷ்ணன். நியூயார்க் நகராட்சி தேர்தலில்!


நெல்லையைச் சேர்ந்தவரான ஹில் கிருஷ்ணன் நியூயார்க் நகர சபை தேர்தலில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இப்பதவிக்குப் போட்டியிடும் முதல் தமிழர் மற்றும் இந்தியர் இவர்தான் என்பதால் ஹில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அதிபர் பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் ஹில் கிருஷ்ணன். மேல் கிழக்கு பகுதியிலிருந்து போட்டியிடும் ஹில் கிருஷ்ணனின் பூர்வீகம் நெல்லை மாவட்டமாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஏகப்பட்ட கனவுகளுடன் அமெரிக்காவுக்கு வந்திறங்கினார். இன்று அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்துள்ளார். எர்கோனாமிக்ஸ் மற்றும் பயோமெக்கானிக்ஸ் பிரிவில் மேல் படிப்பு படிப்பதற்காக அமெரிக்காவுக்கு வந்தார் ஹில் கிருஷ்ணன். பின்னர் இங்கேயே செட்டிலானார். படித்துக் கொண்டே வேலை பார்க்கும்போதுதான் தனது வருங்கால மனைவி டெபியை சந்தித்தார். அப்போது அவரும் நியூயார்க் பல்கலைக்கழக மாணவிதான்.

இதுகுறித்து ஹில் கூறுகையில், ஒரே வருடத்தில் நாங்கள் கல்யாணம் செய்து கொண்டோம். அது எனது வாழ்க்கையின் தரத்தை மட்டுமல்லாமல் வாழ்க்கைப் பாதையையும் கூட மாற்றிய்மைத்தது. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் மேலோங்க அது உதவியது. எனது குடும்பப் பின்னணிக்கும், எனது மனைவியின் குடும்பப் பின்னணிக்கும் இடையே நிறைய வேற்றுமைகள். ஆனால் அன்பும், பாசமும் எங்களை ஒன்று சேர்த்தது என்கிறார் ஹில்.ஹில் கிருஷ்ணனின் சொந்த ஊரானது நெல்லை மாவட்டம் வடுகச்சிமதில் என்ற கிராமமாகும். சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் பிஇ படித்தார்.

இவரது தந்தை பெயர் கிருஷ்ணன், தாயார் பெயர் லட்சுமி. இவரது தம்பி கார்த்திக் ஒரு பல் மருத்துவர். இன்னொரு சகோதரர் கணேஷ். தற்போது பேராசிரியராக பணியாற்றி வரும் ஹில் கிருஷ்ணன், தேர்தலில் வெற்றி பெறுவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இவர் போட்டியிடும் பகுதியில் இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். இதுவரை எந்த ஒரு இந்தியரும், தமிழரும் இத்தேர்தலில் போட்டியிட்டதில்லை. அதை விட முக்கியமாக தெற்காசியாவிலிருந்து நியூயார்க் நகரசபை தேர்தலில் போட்டியிடும் முதல் நபரும் கிருஷ்ணன்தான்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து கிருஷ்ணன் கூறுகையில், ஜனநாயகம் என்பது உள்ளாட்சி அமைப்புகளிலிருந்துதான் தோன்றுகிறது. எனவேதான் இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவுக்கு வந்தபோது எல்லோரையும் போலவே ஒரு சூட்கேஸு்ம், மனம் நிறைய நம்பிக்கையையும்தான் சுமந்து வந்தேன். யாராவது உதவி செய்தால் எப்படி நன்றி சொல்வது என்று கூட எனக்கு அப்போது தெரியாது. ஆனால் இன்று ஒரு அமெரிக்கனாக நான் என்னை முழுமையாக உணர்கிறேன். நியூயார்க் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. அதனால்தான் இன்று நியூயார்க் மக்கள் முன்பு நிற்க முடிந்துள்ளது என்றார் ஹில் கிருஷ்ணன்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...