|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2011

ஆட்டோக்களுக்கு போட்டியாக 200 மினி பஸ்கள் சென்னையில் இனி!

சென்னையில் மினி பஸ் இயக்க அரசு திட்டமிட்டு வருகிறது. மாநகர பஸ்கள் செல்லாத இடங்களுக்கும், புறநகர் பகுதிக்கும் மினி பஸ்களை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.   குறுகலான தெருக்கள் வழியாக மக்கள் பயன் அடையும் வகையில் இந்த பஸ்களை இயக்க ஆய்வு செய்யப்படுகிறது. முதல் கட்டமாக 200 மினி பஸ்கள் விடப்படுகின்றன. அதற்கான வழித்தடங்கள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது.

எந்தெந்த பகுதிகளுக்கு மினி பஸ் அவசியம் தேவைப்படுகிறது என்பதை நேரடி ஆய்வு நடத்தி அரசிடம் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.   வேளச்சேரி, அம்பத்தூர் மற்றும் புறநகர் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நகரின் முக்கிய பகுதியில் இருந்து புதிதாக உருவாகி உள்ள நகர்களுக்கு மினி பஸ் அவசியம் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.100 வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை அரசுக்கு வழங்கியதை 4 அரசு செயலாளர்கள் கொண்ட குழு ஆய்வு செய்துள்ளது. மினி பஸ் இயக்குவதற்கான திட்டத்தை அக்குழு அரசுக்கு அனுப்பியுள்ளது. இன்னும் சில வருடங்களில் மெட்ரோ மற்றும் மோனோ ரெயில் சென்னையில் ஓட இருக்கும்பட்சத்தில் மினி பஸ்கள் தற்போது அவசியமாக கருதப்படுகிறது.   
 
சென்னையில் மினி பஸ்கள் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோ என்று சொல்லக்கூடிய பெரிய ஆட்டோக்கள் நகரின் முக்கிய பகுதியில் இருந்து பஸ் வசதி இல்லாத பகுதிகளுக்கு ஓடுகிறது. அவர்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.  ஆட்டோவிற்கு பெரும் தொகை செலவழிக்க கூடியவர்கள் பலர் மனம் குமுறுகிறார்கள். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மாநகர பஸ் செல்லாத இடங்களுக்கு ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். 
 
மாநகர பஸ் செல்லாத இடங்களுக்கு மினி பஸ்கள் இயக்கினால் பொதுமக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தற்போது சென்னையில் வாடகைக்கு விடக்கூடிய வேன்களில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். பஸ் வசதி இல்லாத உட்பகுதிகளுக்கு இதுபோன்ற வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தாலும் கட்டணம் பஸ்சைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது.   
 
குறுகிய சாலைகளில், மக்கள் அதிகம் வசிக்ககூடிய புதிய பகுதிகளுக்கு மினி பஸ்சின் தேவை அதிகமாக இருப்பதால் விரைவில் விட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.மினி பஸ்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஓடத்தொடங்கினால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மினி வேன் ஆகியவற்றில் அதிக கட்டணம் மக்கள் கொடுத்து ஏற மாட்டார்கள்.   மேலும் இதுபோன்ற வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. முக்கிய சாலைகளின் நடுவே நின்று பயணிகளை ஏற்றி இறக்குவதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...