|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2011

ஜாமீன் விஷயத்தில் சிபிஐயின் இரட்டை நிலை ஏன்?- உச்ச நீதிமன்றம்!


2ஜ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக சிபிஐ இரண்டு விதமாகப் பேசுவது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த வாரம் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவியின் சரத்குமார், குசேகான் ப்ரூட்ஸ் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் தலைவர்கள் ஆசிப் பால்வா, ராஜிவ் அகர்வால், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவர்களது மனுக்களுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முன்னதாக 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரின் ஜாமீன் மனுக்களையும் பாட்டியாலா விசாரணை நீதிமன்றத்தில் எதிர்க்கப் போவதாக உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ தெரிவித்திருந்தது.

இந் நிலையில் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள யூனிடெக் வயர்லெஸ்ஸின் எம்டி சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் டைரக்டர் வினோத் கோயன்கா, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும அதிகாரிகளான ஹரி நாயர், கௌதம் தோஷி மற்றும் சுரேந்திர பிபாரா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, இந்த வழக்கில் 5 பேரின் ஜாமீன் மனுக்களுக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றார். இதையடுத்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எச்.எல்.தத்து ஆகியோர் சிபிஐக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

ஆதாரங்கள் கலைக்கப்படமாட்டது என்பதில் சிபிஐ உறுதியாக இருந்தால் ஏன் குற்றம்சாட்டப்பட்டவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டும்?. 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் மேலும் நீங்கள் விசாரிக்க விரும்பாதபோது அவர்களை ஏன் சிறையில் வைத்திருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர். விசாரணை நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்ற விவரத்தை நாளை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...