|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2011

இதயத்திற்கு வலிமை தரும் மாதுளம் பூ!


மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பல வித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. சளி, இருமல், மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது மாதுளம் பூ.


இருமல் போக்கும்: மாதுளம் பூ மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.



தொண்டை ரணம்: மாதுளம் பூக்களை மைய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலக்கி வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவேண்டும். இதனால் தொண்டைக்கமறல், தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும்.



தாதுபலம்: தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும். மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வரவேண்டும்.



ரத்த மூலம் குணமாக: மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.


ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...