|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2011

புதிய பொறியியல் கல்லூரிகள் வேண்டாம்-மாநில அரசுகள்!


இருக்கும் பொறியியல் கல்லூரிகளே போதும், புதிய கல்லூரிகளை அனுமதிக்க வேண்டாம் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்களுக்கு மாநில அரசுகள் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளன. தமிழகம் உட்பட இந்தியாவில் அடுத்தடுத்து ஏராளமான சுயநிதி பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டு வருகின்றன. புற்றீசல்களைப் போல எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் ஆங்காங்கே சுயநிதி பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டு வருகின்றன. ஒரு ஆண்டில் கல்லுரிகள் அளிக்கும் இடங்களை விட மிகக் குறைந்த அளவிலேயே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவது பொறியியல் கல்வியில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. எல்.கே.ஜியில் சேர்வது கடினமாகிவிட்ட நிலையில், பொறியியல் படிப்பில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்கள் கூட துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் சேர்ந்து விடலாம் என்ற நிலை ஏற்படக் காரணம் என்ன. ஏராளமான பொறியியல் கல்லூரிகள்தான். இந்த கல்வியாண்டில் மட்டும் தமிழகத்தில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 60 ஆயிரம் மாணவ சேர்க்கை இடங்கள் காலியாகவே உள்ளன. இந்திய அளவில் என்று எடுத்துக் கொண்டால் இது சில லட்சங்களை எட்டுகிறது.இந்த நிலையில், அங்கீகாரம் பெற விண்ணப்பித்திருக்கும் புதிய சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தரும் பணியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கல்லூரிகளின் எண்ணிக்கையும், மாணவ சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமேத் தவிர, கல்வித்தரம் அதிகரிக்காது. மேலும், பொறியியல் படிப்பின் தரமும், மதிப்பும் குறையும். எனவே, புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தர வேண்டாம் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலுக்கு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.


தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, ஹரியானா, சட்டிஸ்கர் மாநில அரசுகள் இது குறித்து கடிதம் எழுதியிருப்பதாக கவுன்சிலின் தலைவர் மந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது 3,393 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 15 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில் தமிழகம், ஆந்தரி, கர்நாடகம், உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 70 சதவீத பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த நான்கு மாநிலங்களில் மட்டும் இந்த கல்வியாண்டில் சுமார் 2 லட்சம் பொறியியல் சேர்க்கை இடங்கள் காலியாகவே உள்ளன. இன்னும் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தால் அவை சாதிக்கப்போவது என்ன?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...