|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2011

இங்கிலாந்தை 5-0 என வென்று பதிலடி கொடுத்தது இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா இந்தத் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது. அண்மையில் இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி ஒருநாள் போட்டி, 20-20, டெஸ்ட் என அனைத்திலும் தோல்வி கண்டது. அதற்கு பதிலடியாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியை 5 ஒருநாள் போட்டிகளிலும் வென்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் துவங்கிய 5 வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது.


இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய ரஹானே, காம்பிர் இருவரும் நிதானமான துவக்கத்தை அளித்தனர். அணியின் எண்ணிக்கை 80 ஆக இருந்தபோது, காம்பிர் ஃபின்னின் வேகத்தில் போல்டானார். அதே ஓவரில் அடுத்து வந்த விராத் கோலியும் அவுட் ஆக, இந்திய அணி 80க்கு 2 விக்கெட்களை இழந்தது. அடுத்த ஓவரிலேயே ரஹானேவும் அவுட் ஆக, 80க்கு 3 விக்கெட்கள் என்ற நிலை ஏற்பட்டது. அடுத்து வந்த திவாரியும் சுரேஷ் ரெய்னாவும் நிலைத்து நின்று ஆடினர். இருவரும் இணைந்து ஆடி அணியின் எண்ணிக்கையை 123 என்று உயர்த்தியபோது, திவாரி 24 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வழக்கம்போல் நடுவரிசையில் இறங்கிய தோனி-ரெய்னா ஜோடி நன்கு ஆடியது. பவுண்டரியும் சிக்ஸரும் அடித்துவந்த ரெய்னா, 38ரன்களில் ரன் அவுட் ஆனார். முன்னதாக ரன் ஏதும் எடுத்திராத நிலையில் இவர் கொடுத்த எளிய கேட்சுகள் இரண்டை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர்.


பின்னர் ஜடேஜா, அஸ்வின், பிரவீண்குமார் ஆகியோர் தோனியுடன் இணைந்து ரன் சேர்த்தனர். அதிரடி காட்டிய தோனி 75 ரன்கள் குவித்தார். தொடர்ந்து அவுட் ஆகாமல் விளையாடி வரும் தோனி நட்சத்திர வீரராக ஜொலித்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 271 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது. இங்கிலாந்து தரப்பில் படேல் 3, ஃபின் 2, பிரெஸ்னன் 1, மீகர் 1 என விக்கெட் வீழ்த்தினர்.


அடுத்து ஆட வந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி காட்டினர். அந்த அணி நல்ல ரன்ரேட் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது. அந்த அணி விக்கெட் இழப்பின்றி 20 ஓவர்களிலேயே 128 ரன்களை எடுத்தது. கீஸ்வெட்டர் 63, கேப்டன் குக் 60 என இருந்த நிலையில், இந்த ஜோடியினை இந்தியாவின் புதிய வேகப் பந்து வீச்சாளர் ஆரூன் பிரித்தார். இவருடைய வேகத்துக்கு முதலில் குக் போல்டானார். அடுத்து, கீஸ்வெட்டர் ஜடேஜாவின் சுழலில் அவுட்டானார். அடுத்து விளையாட வந்த வீரர்கள் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்களும், அஸ்வின் 3 விக்கெட்களும், ஆரூன், ரெய்னா, திவாரி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இறுதியாக இங்கிலாந்து அணி 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.


கடைசி ஒருநாள் போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த இங்கிலாந்து அணியைத் தோற்கடித்து இந்திய அணி முழு வெற்றியைப் பெற்று, தக்க பதிலடி கொடுத்தது இந்திய ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆட்ட நாயகன் விருதை பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் ஜொலித்த ரவீந்திர ஜடேஜா பெற்றார். தொடர் நாயகன் விருதை அனைத்து ஆட்டங்களிலும் அவுட் ஆகாமல் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் தோனி பெற்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...