|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2011

வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது!


மத்திய, மாநில அரசுகளின் முதன்மை வங்கியாக ரிசர்வ் வங்கி உள்ளது. நாடெங்கும் 22 கிளைகளுடன் செயல்படும் ரிசர்வ் வங்கி, நாட்டின் நிதி கொள்கையை உருவாக்குதல், வங்கிகளின் பண கை இருப்பை முறைப்படுத்துதல், அன்னியச் செலாவணியை முறைப்படுத்துதல், இந்திய ரூபாய், நாணயம் அச்சிடுதல் உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்து வருகிறது.
 
ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை ஒவ்வொரு அரையாண்டும் வெளியிடுவது வழக்கம். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அரையாண்டு நிதிக் கொள்கையை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வங்கி மாற்றி அமைத்துள்ளது. சமீப காலமாக பண வீக்கம் உயர்ந்துள்ளதால், அதை கட்டுப்படுத்துவதற்கு ஏற்ப கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு நாட்டின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்ததால் வட்டி விகிதத்தை 3.5 சதவீதம் அளவுக்கு ரிசர்வ் வங்கி அதிகரித்தது. கடந்த ஆகஸ்டு மாதம் நாட்டின் விலைவாசி உயர்வு விகிதம் 9.78 சதவீத மாக இருந்தது. தற்போது உணவு பணவீக்கம் 10.6 சத வீதமாக உள்ளது. இதற்கு ஏற்ப வட்டி விகிதத்தை மாற்றும் போது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். என்றாலும் கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
கடந்த 19 மாதங்களில் ரிசர்வ் வங்கி தற்போது 13-வது தடவையாக கடன் விகிதத்தில் மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.   ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட கொள்கை குறிப்பில் 25 அடிப்படை புள்ளி அளவுக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடு மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மீதான கடன் வட்டி உயரும். எனவே இனி வங்கிகளில் வீடு வாங்க கடன் வாங்குபவர்கள் கூடுதல் வட்டி கொடுக்க வேண்டியதிருக்கும். இது நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து வீடு வாங்க ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்கு அதில் ஒரு சதவீதத் தொகையை மானியமாக கொடுத்து உதவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...