|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 November, 2011

வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு 17%

மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான மின்வாரியத்தின் மனுவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டது.  இந்த மனுவில் வீடுகளுக்கான மின் கட்டணம் உள்பட குறைந்த அழுத்த மின் விநியோகம் செய்யப்படும் பிரிவுகள் அனைத்துக்கும் சராசரியாக 17 சதவீதமாக கட்டணத்தை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இதுபோல தொழிற்சாலைகள் உள்பட உயர் அழுத்த மின் விநியோகம் செய்யப்படும் பிரிவுகளுக்கு சராசரியாக 18 சதவீத கட்டண உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  மின்வாரிய உத்தேச கட்டண உயர்வு மனு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் எஸ். கபிலன் தலைமையிலான அமர்வு முன்னிலையில், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இந்த உத்தேச கட்டணப் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக இப்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய இணையதளத்திலும், தமிழ்நாடு மின்வாரிய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.  

வரும் டிசம்பர் 2-ம் தேதி பத்திரிகைகளில் விளம்பரமாக இந்தப் பட்டியல் வெளியிடப்படும். பொதுமக்கள் கட்டணம் குறித்த தங்களது கருத்துக்களை டிசம்பர் 31-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.  இந்த உத்தேச கட்டணப் பட்டியல் அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளர் அலுவலகங்களில் விற்பனைக்காக வைக்கப்படும். இதற்கான கட்டணம் ரூ. 300-ஐச் செலுத்தி பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.  பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பின்னர் உயர்த்தப்பட வேண்டிய புதிய மின் கட்டணம் இறுதி செய்யப்படும்.  உத்தேச கட்டண உயர்வு விவரம்: வீடுகள் உள்பட குறைந்த அழுத்த மின் விநியோகம் 17 சதவீதம் வரை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் படி நிலைகளின் (ஸ்லாப்) எண்ணிக்கையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  வீடுகளுக்கு இதுவரை 7 ஸ்லாப்புகளாக பிரித்து மின் கட்டணம் கணக்கிடப்பட்டது. இப்போது 4 ஸ்லாப்புகளாக பிரித்து கணக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதாவது 100 யூனிட் வரை ஒரே ஸ்லாப்பாக கணக்கிடப்பட உள்ளது.  முன்னர் 0-50 யூனிட்களுக்கு ஒரு யூனிட் ரூ. 1.10 எனவும், 51-100 யூனிட்களுக்கு ஒரு யூனிட் ரூ. 1.30 எனவும் கணக்கிடப்பட்டது. இதில் அரசு வழங்கும் மானியம் 45 பைசாவைக் கழித்துவிட்டு யூனிட்டுக்கு 65 பைசா என கணக்கிட்டு நுகர்வோரிடம் வசூலிக்கப்பட்டது.  இனிமேல், 0-100 யூனிட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 3 ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் மானியம் ரூ. 1.50-ஐ கழித்துவிட்டு ஒரு யூனிட்டுக்கு ரூ. 1.50 நுகர்வோர் செலுத்த வேண்டும்.  வீடுகளில் 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களில் 0-200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்கள் ஒரே ஸ்லாப்பில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 3 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் மானியம் ரூ. 1-ஐ கழித்துவிட்டு யூனிட்டுக்கு ரூ. 2 வீதம் கணக்கிட்டு இவர்கள் செலுத்த வேண்டும்.  201-500 யூனிட்டுகள் பயன்படுத்துபவர்களுக்கான மின் கட்டணம் ரூ. 4 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அரசு மானியம் 50 பைசாவைக் கழித்துவிட்டு யூனிட்டுக்கு ரூ. 3.50 வீதம் கணக்கிட்டு செலுத்த வேண்டும்.  501 யூனிட்டுகள் முதல் அதற்கு மேல் பயன்படுத்துபவர்கள் ஒரே ஸ்லாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்கள் யூனிட்டுக்கு ரூ. 5.75 வீதம் கணக்கிட்டு செலுத்த வேண்டும். இந்தப் பிரிவினருக்கு அரசு மானியம் கிடையாது.  

விவசாயத்துக்கு...: விவசாய பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 7 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு ஒரு குதிரைத் திறனுக்கு ரூ. 250 வசூலிக்கப்பட்டது, இப்போது ரூ. 1,750-ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயத்துக்கு அரசு 100 சதவீத மானியம் வழங்குவதால் விவசாயிகளுக்கு இதனால் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. மின் வாரியத்துக்கு அரசிடமிருந்து கூடுதல் வருமானம் (மானியத் தொகை) கிடைக்கும்.  விசைத்தறி பயன்பாட்டுக்கான அரசு மானியத்தில் மாற்றம்: விசைத்தறி பயன்பாட்டுக்கான மின் கட்டணம் முன்னர் 3 ஸ்லாப்புகளின் கீழ் கணக்கிடப்பட்டு வந்தது, இப்போது 2 ஸ்லாப்புகளின் கீழ் கணக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  0-500 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு அரசின் 100 சதவீத மானியம் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால், 501-1000 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு அரசு வழங்கி வந்த 100 சதவீத மானியம் ரத்துசெய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  மேலும் 501 யூனிட்கள் முதல் அதற்கு மேல் பயன்படுத்துபவர்கள் ஒரே ஸ்லாப்பாக கணக்கிடப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அரசின் மானியம் ரூ. 1-ஐ கழித்துவிட்டு யூனிட்டுக்கு ரூ. 4 வீதம் கணக்கிட்டு செலுத்த வேண்டும்.  

சினிமா தியேட்டர்களுக்கு...: சினிமா தியேட்டர்கள் முன்னர் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் வைக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளது. இது இப்போது மாற்றப்பட்டுள்ளது.  அதாவது முன்னர் யூனிட்டுக்கு ரூ. 5.50-ஆக கணக்கிடப்பட்டது இப்போது யூனிட்டுக்கு ரூ. 7 வீதம் கணக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. குறைந்த அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை ஒரே ஸ்லாப்பாக நிர்ணயித்து யூனிட்டுக்கு ரூ. 5.50 என கணக்கிட்டு வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  கடை உள்ளிட்ட வர்த்தக ரீதியிலான மின் பயன்பாடுகளையும் இப்போது ஒரே ஸ்லாப்பாக கணக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 7 வீதம் கணக்கிட்டு வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்போது இவர்களிடம் 0-100 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.30 வீதமும், 0-200 யூனிட் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 5.30 வீதமும், 201 யூனிட் முதல் அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 6.50 வீதமும் கணக்கிட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.    

கல்வி நிறுவனங்களுக்கு...  அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் முன்பிருந்ததைக் காட்டிலும் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. யூனிட்டுக்கு ரூ. 4.80 என்று இருந்தது இப்போது ரூ. 5-ஆக வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 1 உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது யூனிட்டுக்கு ரூ. 5.50 வசூலிக்கப்பட்டு வருவது ரூ. 6.50-ஆகக்கூடும்.  

உயர் அழுத்த மின் கட்டணம்: உயர் அழுத்த மின் கட்டணத்தை சராசரியாக 18 சதவீதம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.  தொழில் நிறுவனங்களிடம் இணைப்புக் கட்டணமாக (மாத கணக்கீட்டின் கீழ்) ஒரு கிலோ வோல்டுக்கு ரூ. 300 செலுத்த வேண்டும். பயன்பாட்டுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 5 வீதம் கணக்கிடப்படும்.  அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் இணைப்புக் கட்டணமாக ஒரு கிலோ வோல்டுக்கு ரூ. 300 செலுத்த வேண்டும். பயன்பாட்டுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 4.50 வீதம் கணக்கிடப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் இணைப்புக் கட்டணமாக ஒரு கிலோ வோல்டுக்கு ரூ. 300 செலுத்த வேண்டும். பயன்பாட்டுக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 5.50 வீதம் கணக்கிட்டு வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.   

வீட்டு பயன்பாடு மின் கட்டணம்  யூனிட் இப்போதைய கட்டணம் உத்தேச உயர்வுக் கட்டணம்  0 - 50 65 பைசா ரூ. 1.50  51-100 75 பைசா ரூ. 1.50  100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு  0 - 50 75 பைசா ரூ. 2  51-100 85 பைசா ரூ. 2  101-200 ரூ. 1.50 ரூ. 2  201-500 ரூ. 2.20 ரூ. 3.50  501 - 600 ரூ. 1.80 ரூ. 5.75 (மானியம் ரத்து)  601 -அதற்கு மேல் ரூ. 4.05 ரூ. 5.75 (மானியம் ரத்து)

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...