|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 November, 2011

டேம் 999’ திருட்டு சிடி திடுக்கிடும் ரகசிய திட்டம்!

தமிழகத்தில் ‘டேம் 999’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், திருட்டு சிடிக்கள் மூலம் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டம் தீட்டியுள்ளனர். பணத்தை காட்டி சட்ட விரோத கும்பல் உதவியுடன் இதை நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர்.முல்லைபெரியாறு அணையை மையமாக வைத்து, கேரளாவை சேர்ந்த திரைப்பட இயக்குனர் சோஹன்ராய் என்பவர், ‘டேம் 999’ எனும் படத்தை எடுத்துள்ளார். அணை உடைந்து, லட்சக்கணக்கான மக்கள் மடிவது போன்ற காட்சிகள் இப்படத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழகம் தவிர இந்தியாவில் பிற மாநிலங்களில் இன்று இப்படம் வெளியாகியது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பால், ‘டேம் 999’ படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது.சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், தமிழக, கேரள மக்களிடையே வேற்றுமையை உருவாக்கும் நோக்கத்துடனும் எடுக்கப்பட்டுள்ளதால், இப்படத்திற்கு தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக்கை ஊழல்வாதி போல் இப்படத்தில் சித்தரித்துள்ள தால் தென் தமிழக மக்களும் கொதிப்படைந்துள்ளனர்.

இயக்குனர் சோஹன்ராயோ, ‘டேம் 999’ படத்திற்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு நிற்காமல், இப்படத்தை பார்த்த பின்னர் முல்லை பெரியாறு அணையை உடைத்து புதிய அணை கட்ட தமிழக அரசே ஒத்துழைக்கும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் அவரது விபரீத எண்ணம் தெளிவாகி உள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. கேரள மாநிலத் தில் அனைவரையும் இப்படத்தை பார்க்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாதவர்களுக்கு, இப்படத்தின் சிடிக்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக லட்சக்கணக்கில் சிடிக்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் சிலர் இதற்கு மறைமுக உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.தமிழகத்தில், இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அப்படி என்ன தான் எடுத்துள்ளார்கள் என்று பார்க்கும் ஆர்வம் பலரிடையே ஏற்பட்டுள்ளது.  இதை பயன்படுத்தி தமிழகத்திலும் மெல்ல சிடிக்களை விற்பனைக்கு விட முடிவு செய்துள்ளனர். இதற்காக திருட்டு சிடி கும்பலுக்கு வலை விரிக்கப்பட்டு வருகிறது.

கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில், திருட்டு சிடி கும்பல்களும் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து ‘டேம் 999’ படத்தின் சிடிக்களை கொண்டு வந்து, தங்களுக்கு உள்ள ரகசிய தொடர்புகள் மூலம் விற்பனைக்கு விட இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது. அரசு தடை செய்துள்ள படத்தை, எப்படியும் தமிழக மக்களை பார்க்க செய்து, அதன் மூலம் பிரச்னைகளை உருவாக்கி குளிர்காய சிலர் நினைக்கின்றனர். எனவே ‘டேம் 999’ படத்தின் திருட்டு சிடிக்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும். அதிரடி சோதனை நடத்தி, சிடிக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இதற்கு உறுதுணையாக இருப்போர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...