|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 November, 2011

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்க விண்கலம் நாளை பயணம்!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ்நிலை உள்ளதா, தண்ணீர் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய புதிய விண்கலத்தை அமெரிக்கா நாளை அனுப்புகிறது.பூமியை தவிர, வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழும் சூழ்நிலை உள்ளதா என்பது குறித்த ஆய்வு நீண்டகாலமாக நடைபெறுகிறது.குறிப்பாக, செவ்வாய் கிரகத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் (பனிக்கட்டி) இருப்பதாக கருதப்படுகிறது. இது தொடர்பாக, 1970-ம் ஆண்டிலேயே வைகிங், வோயகர் போன்ற விண்கலங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் `நாசா' அனுப்பியது.

இது தவிர, 2004-ம் ஆண்டில் கோல்ப் மைதானத்தில் பயன்படுத்தும் வண்டி அளவிலான ரோவர் இயந்திரத்துடன் ஒரு விண்கலம் அனுப்பப்பட்டது. பூமத்திய ரேகைக்கு எதிர்ப்புறத்தில் செவ்வாய் கிரகத்தில் அந்த விண்கலம் தரை இறங்கியது. மூன்று மாதங்கள் அங்கு ஆய்வு நடந்தது. அப்போது தண்ணீர் படலங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக புதிய `ரோவர்' கருவியுடன் கூடிய விண்கலத்தை நாசா அனுப்புகிறது. கென்னடி விண்வெளி ஆய்வு மையம் அருகேயுள்ள கேப் கார்னிவெல் விமானப்படை தளத்தில் இருந்து சனிக்கிழமை காலை 10 மணி (அமெரிக்க நேரப்படி) அளவில் அந்த விண்கலம் புறப்படுகிறது.

இந்த திட்டத்துக்காக ரூ.12 ஆயிரத்து 500 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. விண்கலத்தில் பொருத்தப்பட்ட ரோவர் கருவியானது, ஒரு சிறிய கார் அளவுக்கு உள்ளது. அணுசக்தியால் இயங்கக் கூடியது. விண்வெளியில் 9 மாத காலம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அது சென்றடையும். டிசம்பர் 18-ந் தேதி வரையிலும் விண்கலம் ஏவுவதற்கு சாதகமான பருவநிலை நிலவுகிறது. எனவே, தட்பவெப்ப நிலையால் விண்கலம் புறப்படுவதில் தாமதம் ஏற்படாது.
ஏற்கனவே, நிலாவுக்கு அனுப்பிய அப்பல்லோ விண்கலம், சனி கிரகத்துக்கு அனுப்பிய காசினி விண்கலம், புளுட்டோவுக்கு அனுப்பிய நியு ஹரிசான் திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த விண்கலத்தையும் நாசா விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். விண்கலத்தில் உள்ள ரோவர் கருவியை இரண்டு ஆண்டுகளாக பல்வேறு விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.

செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி ஆராய்ச்சி செய்ய உள்ள இந்த ரோவர் கருவியில் ரோபாட் கைகள் உள்ளன. 10 கருவிகள் இருக்கின்றன. மலைப்பாங்கான பகுதியில் கூட 154 கி.மீட்டர் அளவுக்கு விசாலமாக பயணம் செய்யக் கூடியது. மேலும், தரை தளத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் உயரம் வரை மேலெழும்பும் சக்தி கொண்டது. செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவிலான தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழும் சூழ்நிலை இருக்கிறதா? எவ்வளவு காலம் வரை மனிதர்கள் வாழ முடியும்? என்பது போன்ற ஆராய்ச்சியை இந்த ரோவர் மேற்கொள்ளும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...