|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 November, 2011

கட்டாக்கில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் முதல் ஒரு நாள் போட்டி!


ஒடிஷா மாநிலம் கட்டாக் நகரில் நாளை இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. நாளைய முதல் போட்டியில் ஷேவாக் தலைமையிலான இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகளை சந்திக்கிறது. கேப்டன் டோணி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த நிலையில் நாளை ஒரு நாள் போட்டிகள் தொடங்குகின்றன.

இந்த நிலையில் நாளை கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஒரு நாள் போட்டித் தொடரில் கேப்டன் டோணி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வளிக்கப்பட்டுள்ளனர். டோணி தவிர, சச்சின், யுவராஜ் சிங் போன்ற அனுபவ வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தை கருத்தில் கொண்டு டோணி, சச்சின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் கட்டி காரணமாக சிகிச்சை பெற்று வரும் யுவராஜூக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டோணிக்குப் பதிலாக ஷேவாக் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

ஷேவாக் இதுவரை 7 போட்டிகளில் கேப்டனாக இருந்து 4 வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளார். ஆனால் ஷேவாக் கேப்டனாக இருந்து தனிப்பட்ட முறையில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக இருந்து ஷேவாக் அடித்த அதிகபட்ச ரன்கள் 44. டோணிக்கு பதிலாக பார்த்தீவ் பட்டேல் விக்கெட் கீப்பிங் பணியை செய்வார். இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆடரில் விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்களை பெற்றுள்ளது. மேலும் மனோஜ் திவாரி, அஜின்கியா ரஹனே ஆகிய புதுமுகங்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

சுழல்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஓஜா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் கலக்கும் அஸ்வின், மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு பெரும் தடைக்கல்லாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. மேற்கிந்திய தீவுகளை பொறுத்தவரை டெஸ்ட் போட்டியை இழந்துள்ள நிலையில், ஒருநாள் தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. சந்தர்பால், சம்மி, பிராவோ உள்ளிட்ட முக்கிய வீரர்களின் ஒத்துழைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி பலமிகுந்த அணியாகவே உள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை கட்டாக்கிலும், 2வது போட்டி டிசம்பர் 2ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3வது போட்டி டிசம்பர் 5ம் தேதி ஆமதாபாத்திலும் நடக்க உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...