|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 December, 2011

உதயநிதி முன்ஜாமின் கேட்டு தாக்கலான வழக்கு வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது!



சென்னை, ஆழ்வார்ப்பேட்டையைசேர்ந்தவர் குமார் என்ற சேஷாத்ரி குமார்,64. இவர், நவ., 29ல், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனு : என் தந்தை நாராயணசாமியால் வாங்கப்பட்டு, சித்தரஞ்சன்தாஸ் சாலை என்று, என் தந்தையால் பெயரிடப்பட்ட இடத்தில், என் பங்காக கிடைத்த இரண்டரை கிரவுண்டில், நான் 4,445 சதுரடிக்கு கட்டடம் கட்டி வசித்து வந்தேன். பின், இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான ஆறு கிரவுண்டு நிலத்தை, ஸ்டாலின் (தி.மு.க., பொருளாளர்), ஐ.சி. ஐ.சி.ஐ., வங்கி மூலம் வாங்கி குடியேறினார். அவர், அங்கு வந்ததில் இருந்து, அருகில் உள்ள என் வீட்டையும் வாங்கி, ஒரே வீடாக்கிவிட திட்டமிட்டார். அதற்காக, என் வீட்டில் குடியிருந்தவர்களை மிரட்டி, வீட்டை காலி செய்ய வைத்தனர். அத்துடன், சீப்ராஸ் மற்றும் ரெயின்ட்ரீ ஓட்டல்கள் அதிபர் சுப்பா ரெட்டி, ராஜா சங்கர் (ஸ்டாலின் நண்பர்), ஸ்ரீனிவாசன் ஆகியோர், என் வீட்டிற்கு வந்து, சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை, ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இல்லையென்றால், எனக்கு பல பிரச்னைகள் வரும் என்று மிரட்டினர்.

அவர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயந்து, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், கடந்தாண்டு ஜூலை 16ல் புகார் செய்ய சென்றேன். என் மனுவை வாங்க மறுத்து விட்டனர். அதன் பின், பத்திர பதிவாளரை என் வீட்டிற்கு அழைத்து வந்து, வேணுகோபால் ரெட்டி பெயரில், என் வீட்டை கிரையம் செய்து கொண்டனர். அதற்கு, 5.5 கோடி ரூபாயை (5,54,50,000) டி.டி.,யாக கொடுத்தனர். அதன் பின், சீனிவாசன் என் வீட்டிற்கு வந்து, ஒரு கோடியே 15 லட்ச ரூபாயை பணமாக கொடுத்தார். இது கணக்கில் வராத பணம் என்றும், இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது, சொன்னால், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திடம், தளபதி சொல்லி வருமான வரித்துறை மூலம் தொந்தரவு செய்வார்கள் என்று சொன்னதுடன், 15 லட்ச ரூபாயை கமிஷன் என்று சொல்லி எடுத்துச் சென்றுவிட்டார். தற்போது, இந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் பெயரில், 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு, ஸ்டாலினின் மகள் செந்தாமரை குடியிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி, தன் பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், கறுப்பு பணத்தை என் வீட்டிற்கு வந்து வலுக்கட்டாயமாக கொடுத்து, வருமான வரி சோதனை செய்ய வைத்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும், வேணுகோபால் ரெட்டி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது, தகுந்த நடவடிக்கை எடுத்து, என் வீட்டை மீட்டுத் தருமாறும், என் குடும்பத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு தரும்படியும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு: கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர்கள் வேணுகோபால்ரெட்டி, சுப்பாரெட்டி, ராஜாசங்கர், சீனிவாசன் ஆறு பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். அத்துமீறி நுழைதல் (451), மரணம், கொடுங்காயம் ஏற்படுத்திவிடுவேன் என அச்சுறுத்தி பணம் பறித்தல் (386,387), கொலை மிரட்டல் (506-1), கூட்டு சதி செய்தல் (120-பி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, விசாரணையைத் துவக்கியுள்ளனர். நில அபகரிப்பு மோசடி புகார் தொடர்பாக, தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் சிக்கி, சிறைக்கு சென்று ஜாமினில் வந்துள்ளனர். இந்த வரிசையில், ஸ்டாலின் மீது விரைவில், கைது நடவடிக்கை இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு உதயநிதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். உதயநிதிக்கு முன்ஜாமின் வழங்க அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்‌து உதயநிதிக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி மனு மீதான விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் ஸ்டாலின் நண்பர் ராஜா,சங்கர் ஆகியோரும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையையும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...