|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 January, 2012

ஒருதலைக்காதல் விபரீதம்...


சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகில் உள்ள கட்டிநாய்க்கன்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் கண்ணன்-வயது 26.   இவர் மேட்டூர் அருகில் உள்ள கருமலைக்கூடலில் இரண்டு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார்.கண்ணனின் கடையிலிருந்து கோம்பூரான்காட்டுக்கு செல்லும் வழியில் உள்ளது புது சின்னக்காவூர் என்ற சிறிய கிராமம். இந்த கிராமத்தில் குடியிருக்கும் செங்கல் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளியான கோவிந்தன் என்பவரின் மகள் பிரபா வயது-19 .

பிரபா மேச்சேரியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை வணிகம் படித்து வந்தார். கோவிந்தன் வேலைக்கு செல்லும் போது தனது (டி.வி.எஸ் எக்ஸ்.எல்) இருசக்கர வாகனத்தில் தனது மகள் பிரபாவையும் கூட்டிக்கொண்டு வருவார். மகளை பேருந்தில் ஏற்றிவிட்டு, கருமலைக்கூடலில் இருக்கும் கண்ணனின் கடையில் வண்டியை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்வார் கோவிந்தன். மாலையில் கல்லூரி முடிந்துவரும் பிரபா தன்னுடைய தந்தையார் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவார். இப்படி, பிரபாவும்-கண்ணனும் தினமும் சந்தித்துவரும் வேளையில் கண்ணனுக்கு பிரபாவின் மீது “காதல்” ஏற்பட்டுள்ளது. பிரபாவின் மீது இருக்கும் காதலை தெரிந்துகொண்ட கண்ணனின் பெற்றோர்கள் கண்ணனுக்கு தாங்கள் உறவுக்கார பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து விட்டனர்.

கண்ணனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டாலும், பிரபாவின் மீது இருந்த “காதல்” தீரவில்லை, அவ்வப்போது “நீ என்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும்” என்று பிரபாவுக்கு “தூது” விட்டு வந்துள்ளார். ஆனால், கண்ணனின் தூதை பிரபா நிராகரித்து வந்துள்ளார். ஆனாலும், விடாமல் பின் தொடர்ந்து வந்து “காதல்” தொல்லை கொடுத்து வந்துள்ளார் கண்ணன். கண்ணனின் போக்கு சரியில்லை என்பதை அறிந்த கோவிந்தன்,  இப்போது கண்ணனின் கடையில் வண்டியை நிறுத்துவதை விட்டுவிட்டார். 

நேற்று முன்தினம், மாலை பிரபா கல்லூரியிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, வழியில் நின்றுகொண்டிருந்த கண்ணன் என்னை “நீ” திருமணம் செய்து கொள்ளவேண்டும், இல்லையானால், உன்னுடைய அப்பா, அம்மா எல்லோரையும் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். “எனக்கும், உனக்கும் ஒத்து வராது”, “நீ உன்னுடைய வேலையை பார்”... இனி இப்படி பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தால், நான் உன்மீது போலீசில் புகார் கொடுக்கவேண்டிவரும் என்று பிரபா கண்ணனை எச்சரித்து விட்டு சென்று விட்டார். பிரபா வீட்டுக்கு சென்று தனது பெற்றோர்களிடம் கண்ணனின் காதல் தொல்லை பற்றி புகார் சொல்லியுள்ளார். பிரபாவின் உறவினர்கள் கண்ணின் செல்போன் எண்ணுக்கு போன் செய்து “இனி மேல் நீ மரியாதையாக இருந்துகொள்” இல்லையானால் போலீசில் அடிவாங்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளனர். “இனிமே நான் உங்கள் பெண்ணை பற்றி நினைக்க கூட மாட்டேன்” என்று சொல்லிவிட்டார் கண்ணன். ஆனால், கண்ணனுக்கு போன் வந்த கொஞ்ச நேரத்தில், பிரபாவின் அப்பா கோவிந்தன் தன்னுடைய (டி.வி.எஸ் எக்ஸ்.எல்) வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார்.கடையிலிருந்தபடியே கண்ணன் இதை கவனித்துள்ளான். கோவிந்தன் வேலைக்கு போனால் திரும்பவும் காலையில்தான் திரும்பி வருவார் என்பது கண்ணனுக்கு தெரியும். இப்போது பிரபாவின் வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்துகொண்ட கண்ணன். 

இரவு ஒன்பது மணிக்கு டாஸ்மாக்-கில் போய் ஒரு “ஆப்” பாட்டில் சரக்கு வாங்கி உள்ளே உற்றிக்கொண்டு பிரபாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.டாஸ்மாக் சரக்கை உள்ளே தள்ளியிருந்த கண்ணன், தனது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டியுப்-பை பிடுங்கி, வெளியே வந்த பெட்ரோலை பிராந்தி பாட்டிலில் பிடித்து தன்னுடைய உடம்பெல்லாம் உற்றிக்கொண்டார், மீதி ஒருபாட்டிலிலும் பெட்ரோலை பிடித்துக்கொண்டு போய் பிரபாவின் வீட்டு கதவை தட்டியுள்ளார்.கண்ணன் தான் வந்துள்ளான் என்பதை தெரிந்துகொண்ட பிரபா  “இப்போது எதுக்கு இங்கே வந்தாய்”...? என்று கேட்டுள்ளார் பிரபா.உங்க அப்பா கடையில வண்டிய விட்டுட்டு வேலைக்கு போயிட்டார், அதை கொண்டாந்து விட்டுட்டு போகலாமுன்னு தான் வந்தேன், என்று சொல்லியுள்ளார் கண்ணன்.

அவசரமான பல நேரங்களில் கோவிந்தன் தனது (டி.வி.எஸ் எக்ஸ்.எல்) வாகனத்தை கண்ணனின் கடையில் விட்டுவிட்டு பேருந்தில் வேலைக்கு போய்விடுவார்.கண்ணன் கடையில் உள்ள வேலையை எல்லாம் முடித்துவிட்டு வாகனத்தை கொண்டுவந்து கோவிந்தனின் வீட்டில் விட்டுவிட்டு போவது வழக்கம்... இப்போதும் அப்படித்தான் அப்பாவின் வண்டியை கண்ணன் எடுத்துக்கொண்டு வந்துள்ளார் என்று நினைத்த பிரபா கதவை திறந்துகொண்டு வெளியில் வந்துள்ளார்.பிரபா கதவை திறந்ததும், அவர் மீதும் பெட்ரோலை ஊற்றி என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் பரவாயில்லை.... வா நாம் இரண்டு பேரும் செத்துப்போகலாம் என்று கூறியபடியே தன்மீது “தீ” வைத்துக் கொண்டு பிரபாவையும் கட்டி பிடித்துக்கொண்டார் கண்ணன்.

கண்ணன் மீது பற்றி எறிந்த நெருப்பு பிரபாவையும் பற்றிக்கொண்டது, கண்ணன், பிரபா இருவர் மீதும் தீ பற்றி எரிந்த நிலையில், பிரபா போட்ட சத்தத்தில் பக்கத்து வீட்டுகளில் இருந்தவர்கள் ஓடிவந்து கண்ணையும், பிரபாவையும் பிரித்து விட்டுள்ளனர்.கண்ணின் உடல் பெட்ரோலில் நன்றாக நனைந்திருந்தால், தீயில் எரிந்து போன உடல் கரிக்காட்டையாகி சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார்.ஐம்பது விழுக்காடு தீ காயங்களுடன் இருந்த பிரபா முதலுதவிக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கால்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த தீவைப்பு சம்பவத்தில், கோவிந்தனின் வீடு முழுவதும் எரித்து நாசமாக்கியது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...