|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 January, 2012

நிலத்திலும், நீரிலும் செல்லும் கார்...

நிலத்திலும், நீரிலும் செல்லும் அதிசய பேட்டரி காரை தஞ்சாவூர் பிரிஸ்ட் எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரியில் இயங்கும் கார்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் பல முன்னணி கார் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள பிரிஸ்ட் பல்கலைகழகத்தில் பயிலும் இறுதியாண்டு எஞ்சினியரிங் மாணவர்கள் 7 பேர் கொண்ட குழு புதிய பேட்டரி காரை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய பேட்டரி கார் நிலத்திலும், நீரிலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடியிலுள்ள ஹைடெக் புராஜெக்ட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் முரளி மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் வழிகாட்டுதல்களின்படி இந்த புதிய காரை பிரிஸ்ட் பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.


இ-கார்போ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கார் நிலத்தில் 30 கிமீ வேகத்திலும், நீரில் 15 கிமீ வேகத்திலும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த கார் சூரிய சக்தி மின்சாரத்தை சேமித்து இயங்கும் என்பதால் இரவில் கூட இதில் பயணம் செய்ய முடியும் என்கின்றனர் இந்த காரை வடிவமைத்த மாணவர்கள். மேலும், சுற்றுச்சூழலுக்கு துளி கூட மாசு ஏற்படுத்தாது என்று கூறிய அவர்கள் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டு இந்த காரை வடிவமைத்ததாக தெரிவித்தனர். வெறும் ரூ.35,000 செலவில் இந்த காரை உருவாக்கியுள்ளதாக மாணவர்கள் கூறினர்.நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் முனுசாமி முன்னிலையில் இந்த காரை புகழ்பெற்ற தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகே மாணவர்கள் சமீபத்தில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பித்தனர். அப்போது, பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமான பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அங்கு குழுமியிருந்தனர். நிலத்தில் சிறிது தூரம் சென்ற அந்த கார் திடீரென நீரிலும் இறங்கி படகு போன்று மிதந்து சென்ற அந்த காரை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். வெறும் 35,000 ரூபாயில் இந்த காரை வடிவமைத்து சாதனை புரிந்துள்ள இந்த மாணவர்களின் சாதனையை ஆட்சியர் முனுசாமி, மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...