|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 January, 2012

பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் இலங்கை அமைச்சர் விமல்!

இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும் என அந்நாட்டின் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு விமல் வீரவன்ஸ வழங்கிய பேட்டியில் அவர் இதைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: சரத் பொன்சேகா, நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பாராயின் முதல் 24 மணி நேரத்துக்குள் கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் நானும் இடம்பெற்றிருப்பேன். எது எப்படியிருப்பினும், அந்த நபரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும். சரத் பொன்சேகா மீதுள்ள அன்பின் காரணமாக நான் இந்தக் கருத்தைக் கூறவில்லை.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோருபவர்கள்தான் அவர் உள்ளே இருப்பதை அதிகளவில் விரும்புகின்றனர். விடுதலை செய்யுமாறு கோருவதெல்லாம் பொய் நாடகமாகும். தனது கணவர் மீது அவ்வளவு அக்கறையிருந்தால் கணவரை விடுதலை செய்யுமாறு அவரது மனைவி அதிபரிடம் கோரிக்கை விடுக்கலாம்தானே? ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்திலேயே அவர் பொதுமன்னிப்புக் குறித்து பரிசீலிக்கலாம். ஆனால்  அவர் இதுகுறித்து கோரிக்கை விடுக்காதிருப்பது ஏன்?
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப் புதிய எதிரி ஒருவர் உருவாகின்றார். ரணிலும், டிலான் அலஸும் அதிபர் தேர்தல்  காலத்தில் கிடைத்த நிதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக ஒருவருக்கொருவர் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர். ஜே.வி.பியுடன் எவ்வாறாவது ரணில் தூண்டிலைப் போட்டுக்கொள்வார். இவ்வாறான அனைத்துச் சம்பவங்களும் அரசியலில் இடம்பெறவேண்டுமானால் சரத் பொன்சேகா விடுதலையாக வேண்டும். அவர் உள்ளே இருக்கும்வரை இவை ஒன்றும் நடைபெறமாட்டாது. அரசியல் ரீதியில் பார்க்கப்போனால் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதுதான் நல்லதென்று நான் கருதுகிறேன் எனக் கூறியுள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ஸ.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...