|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 March, 2012

அமெரிக்க தீர்மானம்: இலங்கைக்கு எதிராக 22 நாடுகள்...


இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் இலங்கைக்கு நெருக்கடி முற்றியுள்ளது. அதேசமயம், இந்த விஷயத்தில் கண்டிப்பாக பேசியாக வேண்டிய முக்கிய நாடான நமது இந்தியா பெருத்த அமைதி காத்து வருகிறது. இந்தியாவின் இந்த மயான அமைதி உலகத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் வேதனையை அளித்துள்ளதாம்.கடைசி வரை அமைதியாக இருந்து விட்டு கடைசி நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஈழத் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் ரத்த வெறியாட்டம் போட்டது இலங்கை. உலகமே ஒன்று திரண்டு இந்த கோர வெறியாட்டத்கை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்தன. அடிக்காதே, அடிக்காதே என்று வாய் வார்த்தையாக மட்டுமே உலக சமுதாயம் இலங்கையை அப்போது கண்டித்தது. அதை கண்டிப்பு என்று கூட சொல்ல முடியாது. அப்படி ஒரு மென்மையான அணுகுமுறை அது. இதனால் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக புல்டோசர் ஏற்றி மறைக்கப்பட்டு விட்டனர்.

ஆனால் ஈழ மண்ணில் நடந்தது மிகப் பெரிய படுகொலைச் சம்பவங்கள் என்பதை அம்பலமாக்கும் வகையிலான வீடியோ காட்சிகள், பேட்டிகள், புகைப்படங்கள் வெளியாகி ஈரம் உள்ள மக்களின் நெஞ்சங்களை பதறடித்தது, சிதறடித்தது, வேதனையுற வைத்தது.பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர், பெண்கள், ஊனமுற்றோர் என பாரபட்சமே பார்க்காமல் சிங்களப் படைகள் ரத்தக் குளியல் நடத்தியது அம்பலமானது. இந்த நிலையில்தான் இலங்கையின் மனித உரி்மை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையுடன் வரைவுத் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐ.நா. மனித உரிமை பொதுக் கூட்டத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த தீர்மான நகல் மனித உரிமைக் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் குறித்து விவாதம் நடத்தி பின்னர் வாக்கெடுப்புடன் இது நிறைவேற்றப்படும். இது நிறைவேறினால் உலக அளவில் இலங்கை பெரும் சிக்கலுக்குள்ளாகும். பல்வேறு விசாரணைகள், பொருளாதாரத் தடைகள் பாயும், நாடே ஸ்தம்பித்துப் போய் விடும், பொருளாதாரத் தடைகளால் பெரும் பின்னடைவையும் சந்திக்க நேரிடும்.

இதையடுத்து இந்த தீர்மானம் நிறைவேறாமல் முறியடிக்க பகீரத்ப பிரயத்தனம் செய்து வருகிறது இலங்கை. அந்த நாடு தற்போது மலை போல நம்பியுள்ளது ரஷ்யா, இந்தியா, சீனாவைத்தான். இந்த மூன்று நாடுகளில் ரஷ்யாவும், சீனாவும் பகிரங்கமாகவே தங்களது ஆதரவைத் தெரிவித்து விட்டன. இந்தியா இதுவரை கருத்து சொல்லவில்லை. ஆனால் இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா மறைமுகமாக பேசி வருகிறது. இது உலகத் தமிழர்களை அதிர்சசியுற வைத்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங், இந்த தீர்மானம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அதைப் பற்றி அவர் பேசக் கூட மறுத்து வருகிறார். வழக்கம் போல மயான அமைதி காத்து வருகிறார்.மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவோ, இந்தியா, இலங்கை நீண்ட நெடிய நட்புறவுடன் கூடிய நாடுகள் என்று பேசி வருகிறார். இப்படி இந்தியாவின் நிலை ஒரு புறம் இருக்க அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக இதுவரை 22 நாடுகள் கை தூக்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது ஈழத் தமிழர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. கிட்டத்தட்ட பாதி உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதால் தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.

இந்த தீர்மானம் குறித்த துணை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை அமெரிக்கா நடத்தியது. அதில் கலந்து கொண்ட நாடுகளில் பெரும்பாலானவை தீர்மானத்தை ஆதரித்துப் பேசின. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எதிர்த்துள்ளன. கடைசியாக கிடைத்த தகவல்களின்படி கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், நார்வே, ஹங்கேரி, போலந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, போர்ச்சுகல், அயர்லாந்து உள்ளிட்ட 22 நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக திரண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மிகப் பெரிய விஷயம்.

24 நாடுகளின் ஆதரவு இருந்தால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். எனவே மேலும் சில நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்றால் தீர்மானம் நிறைவேறும். அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதனால் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் உற்சாகமும், எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. அதேசமயம், என்ன செய்தால் தீர்மானத்தை சிதறடிக்க முடியும் என்ற பதைபதைப்புடன் இலங்கைத் தரப்பு காணப்படுகிறது. அந்த நாட்டின் அமைச்சர் மகிந்தா சமரசிங்கே தலைமையிலான சிறப்புக் குழு ஒன்றும் தற்போது ஜெனீவா விரைந்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...