|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 March, 2012

என் கண்களில் வழிந்த "நீலிக்" கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களைக் கண்டித்து அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் பிரதமருக்கு மீண்டும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உச்சக்கட்டப் போரின் போது மனித உரிமைகளை மீறும் வகையில் ராஜபக்சே தலைமையிலான இலங்கை ராணுவம் போர்க் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி விசாரித்து இலங்கை அரசின் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ந்து பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான விசாரணைக்குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. ஏப்ரல் 25ஆம் நாளன்று வெளியிடப்பட்ட இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசின் ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும், போர்க் கைதிகளை இலங்கை ராணுவம் கொடூரமாகக் கொன்று விட்டதாகவும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டுமென்றும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த உயர்நிலை செயல் திட்டக் குழுவின் கூட்டத்திலேயே முதல் தீர்மானமாக; வலியுறுத்தப்பட்டது.மேலும், இந்த கருத்தை கடந்த 1ம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையிலும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளேன்.  ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக் கூடாது என்று வலியுறுத்தினேன்.

மேலும், நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும், பிரதமரை நேரில் சந்தித்து கழகத்தின் நிலைப்பாட்டினையும், உலகளாவிய தமிழ் மக்களின் உணர்வுகளையும் எடுத்துரைத்தார். உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட ஆவன செய்திடுக என்று மத்திய அரசுக்கு உணர்வு பூர்வமாக வேண்டுகோள் விடுத்தோம். இந்தப் பிரச்சினை குறித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒருமித்த நிலைப்பாட்டினையே மேற்கொண்டு கருத்துத் தெரிவித்திருக்கின்றன.

இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்ட போது, என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. மத்திய அரசில் இருப்போர் அந்தக் காட்சிகளை ஒரு முறை பார்த்தாலே தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.அமெரிக்க நாட்டின் சார்பில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தில்; சட்டத்துக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் படுகொலைகள் மற்றும் ஏராளமானோர் காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டது குறித்து இலங்கை அரசு அமைத்த குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும். அந்தக் குழு எடுத்துரைத்துள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஆலோசனைகளையும், தொழில் நுட்ப உதவிகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வழங்க வேண்டும்; அதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமையானதும் கடுமையானதுமான போர்க் குற்றங்கள் அனைத்தையும் இந்திய அரசு நினைவிலே கொண்டு, இனியும் காலம் தாழ்த்தாது, இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொடுத்துள்ள தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக அறிவித்திட வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...