|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 March, 2012

காதல் ஜோடிகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள்- உயர்நீதிமன்றம்.


கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளை பிரிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கலப்புத் திருமண தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.கண்ணகி (வயது 20), பி.விஜய் ஆனந்த் (22) ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நான் (கண்ணகி) ஓசூரில் அதியமான் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். எனது கணவர் விஜய் ஆனந்த் தமிழகத்தைச் சேர்ந்தவர். நாங்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், ஒருவரை ஒருவர் காதலித்து 6.3.11 அன்று திருமணம் செய்துகொண்டோம். ஓசூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் எங்கள் திருமணத்தை 24.3.11 அன்று பதிவு செய்தோம். எனவே நாங்கள் செய்த திருமணம் சட்டப்பூர்வமானது. இருந்தாலும், பிரிந்து வாழ்ந்து வந்தோம். விஜய் ஆனந்த் ஓசூரில் கேன் பின்ஸ் ஹோம் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். எங்கள் திருமணத்தை எனது பெற்றோர் எதிர்த்தனர். ஆனால் கணவரின் வீட்டார் ஆதரித்தனர். கடந்த ஜனவரி மாதம் என்

வீட்டுக்கு எனது கணவர் தனது தந்தையுடன் வந்து, எனது தந்தை திம்மராயப்பாவிடம் திருமண வரவேற்பு பற்றி பேசினர். அவர்கள் முன்னிலையில் எங்கள் திருமணத்தை ஒப்புக்கொள்வதுபோல் எனது தந்தை பேசினார்.  ஆனால் அவர்கள் போனபிறகு என்னை திட்டி ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டார். மறுநாளில் (16.1.12) அங்கிருந்து தப்பிச்சென்று எனது கணவரிடம் போய்விட்டேன். பின்னர் பாதுகாப்பு கேட்டு 2 பேரும் ஓசூர் நகர போலீஸ் நிலையத்துக்குச் சென்றோம். ஆனால் அவர்கள் பாதுகாப்பு அளிக்காமல், எனது தந்தையை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி என்னிடம் கட்டாயமாக கையெழுத்து வாங்கினர். எனது கணவரையும், அவரது தந்தையையும் சட்ட விரோதமாக ஒருநாள் காவலில் அடைத்தனர்.

பின்னர் என்னை வலுக்கட்டாயமாக கர்நாடகா மாநிலம் தர்மசாலாவுக்கு கொண்டு சென்று, மற்றொருவரை திருமணம் செய்ய வற்புறுத்தினர். ஆனால் அங்கிருந்தும் நான் ஜனவரி 19-ந் தேதி தப்பி எனது கணவரிடம் சேர்ந்தேன். அதன் பின்னர் பாதுகாப்புக்காக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறோம். என் மீது, எனது தந்தை மிகவும் கோபமாக இருக்கிறார். என்னை எரித்துக் கொன்றுவிடுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் என்னை கடத்திச் சென்றதாக என் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி, எனது தாயார் பிரபுல்லா வழக்கு தொடர்ந்தார். அதனடிப்படையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில், எனது கணவர் மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்தான் அவரிடம் சென்று சேர்ந்தேன். அவர் என்னை கடத்தவில்லை. தற்போது போலீசாராலும் எங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது.

இந்த வழக்கால் எனது கணவரின் வேலையும் போய்விடும் நிலை உள்ளது. நானும் எனது படிப்பை தொடர முடியவில்லை. எனது தந்தையின் பேச்சைக் கேட்டு எங்களை பிரிக்கவும், என்னை எனது தந்தையிடம் ஒப்படைக்கவும் ஓசூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டரும் முயற்சி செய்கிறார். எனவே எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரையும் தலையிட அனுமதிக்கக் கூடாது. எனது கணவர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரித்தார். கலப்புத் திருமணத்தை ஆதரித்து உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே கலப்புத் திருமணம் செய்துள்ள இந்த ஜோடியை பிரிக்கக்கூடாது. அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை காவல்துறைவழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...