|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 March, 2012

ஆஸ்திரேலியா வெல்ல இந்திய ரசிகர்கள் ஆர்வம்!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் கடைசி லீக் போட்டி நாளை நடைபெறுகின்றது. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. மாறாக இலங்கை வென்று விட்டால் மூட்டையைக் கட்டிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான். போட்டி டை ஆனாலும் நமக்குத்தான் சிக்கல். இதனால் இந்திய ரசிகர்கள் இடையே நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் மெல்போர்ன் நகரில் நாளை நடைபெற உள்ள கடைசி லீக் போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப் பெறும் நிலையில், இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப் பெறுவதை பார்க்க ஆர்வமாக உள்ளனர். முத்தரப்பு தொடரை சொந்த மண்ணில் விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் கை முதலில் இருந்தே ஓங்கிய நிலையில் உள்ளது. இதுவரை 7 லீக் போட்டிகளில் விளையாடி உள்ள ஆஸ்திரேலியா, 19 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை அணிகள் 15 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா அணி இந்த நிலையில் நாளைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மைக்கேல் கிளார்க் காயம் காரணமாக பங்கேற்பது சந்தேகம் என்று அணித் தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர் போட்டியில் பங்கேற்காத பட்சத்தில் ஷான் வாட்சன் கேப்டனாக செயல்படுவார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜேம்ஸ் பேட்டின்சன் முழு உடல்தகுதியை எட்டி உள்ளார். இதனால் நாளைய போட்டியில் அவர் பங்கேற்கலாம் என்று எதிப்பார்க்கப்படுகின்றது. மேலும் ரெயன் ஹரீஸ் நீக்கப்பட்டு, இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பந்துவீச்சில் பிரட் லீ தொடர்ந்து திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங், பந்துவீ்ச்சு, பீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதால் இலங்கைக்கு கடும் நெருக்கடியாக அமையலாம்.

இலங்கை அணி இலங்கை அணி நாளை கட்டாய வெற்றியை முன்வைத்து களமிறங்குகின்றது. பேட்ஸ்மேன்கள் சங்கக்காரா, ஜெயவர்த்தனே, தில்ஷன் ஆகியோர் சிறப்பான 'பார்மில்' இருப்பது இலங்கைக்கு கூடுதல் பலம். ஆல்- ரவுன்டர்களாக கடைசி ஓவர்களில் வந்து ரன்களை குவிக்கும் ஆஞ்சிலோ மேத்யூஸ், பெரேரா போன்றவர்கள் இலங்கையின் ஸ்கோரை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பந்துவீச்சில் ஜொலித்து வந்த மலீங்கா, இந்தியாவுடனான போட்டியில் அதிக ரன்கள் கொடுத்தது இலங்கைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நாளை போட்டியில் இலங்கை குறைந்த ரன் ரேட் உடன் தோல்வி அடைந்தால், இந்தியாவுக்கு இறுதிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனால் இலங்கை அதிக கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...