|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 May, 2012

டாஸ்மாக் மக்களின் ஈரலும் சிறுநீரகமும் கெட்டுப்போவதற்கு மறைமுகக் காரணமாக?

க்களின் ஈரலையும் சிறுநீரகங்களையும், அரசு மதுக்கடைகள் மறைமுகமாகப்பழுது​படுத்துகின்றன’ என்று, ஒரு விமர்சனத்தை முன்வைத்து, அரசை தலைகுனிய ​வைத்துள்​ளார் நீதிபதி சந்துரு.கடலூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்தவர் பால​முருகன். டாஸ்மாக் மதுக்கடையின் தற்காலிக ஊழியர். பாலமுருகனுக்குத் திருமணம் ஆகி ஒன்பது மாதத்தில் ஓர் ஆண்குழந்தை உள்ளது. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு டாஸ்மாக் கடையில் வேலைக்குச் சேர்ந்த பின்பு, அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்து பார்த்ததில், அவருடைய கிட்னி பாதிக்கப்பட்டு இருந்தது.'அறுவை சிகிச்சை மூலம், வேறு கிட்னிதான் பொருத்த வேண்டும்’ என்ற நிலையில், அவரது தாயார் ராஜேஸ்வரி, கிட்னி தானம் செய்ய முன்வந்தார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த பாலமுருகனால், மருத்துவமனை கேட்ட தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை.

அதனால், டாஸ்மாக் நிறுவனத்தில் நடப்பில் உள்ள இன்சூரன்ஸ் திட்டம் மூலமாக சிகிச்சைக்கான தொகையைப் பெறுவதற்காக கோரிக்​கை வைத்தார். 'தற்காலிகப் பணியாளருக்கு, சுகாதாரத் திட்டத்தின்படி அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். அதுவும் சிகிச்சை முடிந்த பிறகு, பில்களை ஒப்படைத்துத்தான் பெற முடியும்’ என்று நிர்வாகத் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள்.இந்தப் பதிலால் நொந்துபோன பாலமுருகன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு அளித்த தீர்ப்பில்தான் அரசை விளாசித் தள்ளி விட்டார்.''ஊழியர்களுக்காகப் பல்வேறு சுகாதாரத் திட்டங்களை அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது. தற்காலிகப் 


பணியாளர்களுக்கான சுகாதாரத் திட்டத்துக்குள், மனுதாரர் பாலமுருகன் வருகிறார். அந்தத் திட்டத்துக்குக் கட்டணமாக, தனது ஒவ்வொரு மாத ஊதியத்தில் இருந்தும் 80 ரூபாயை அரசுக்குச் செலுத்துகிறார். அதை, டாஸ்மாக் நிறுவனமும் ஒப்புக்கொண்டு உள்ளது. ஆனால், விதிமுறைகளைக் காரணம் காட்டி, சிகிச்சைக்கு முன் பணம் தர முடியாது என்று, டாஸ்மாக் நிறுவனம் மறுத்து உள்ளது. மேலும், அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை செய்துகொள்ள மனுதாரர் பால முருகனுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.தான் எங்கு சிகிச்சை பெற வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். டாஸ்மாக் நிறுவனமும், அது முன்வைக்கும் விதிமுறைகளும் அதை முடிவு செய்யக்கூடாது. தன்னுடைய ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை சுகாதாரத் திட்டத்துக்காக செலுத்தும் அரசு ஊழியர், தனக்கான மருத்துவச் செலவை அரசிடம் கேட்பதற்கு முழு உரிமை பெற்றவர் ஆகிறார். அவருக்கு உரிய மருத்துவச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவர் சார்ந்துள்ள அரசு நிறுவனத்தின் கடமையும் ஆகிறது.2007-ல் சுகாதாரத் துறைக்கு எதிராகத் தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கின் தீர்ப்பில், 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வாழும் ஒவ்வொருவருக்கும் உணவு, தூய்மையான குடிநீர், ஆரோக்கியமான சுற்றுப்புறம், கல்வி மற்றும் மருத்துவ வசதியை அரசிடம் கேட்டுப் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது. அவற்றைக் குடிமக்களுக்கு வழங்க வேண்டியதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் முதன்மையான கடமையும் ஆகும். பணியில் இருக்கும் அரசு ஊழியர் நோயில் சிக்கும்போது, அவருக்குத் தேவையான மருத்துவ வசதியைச் செய்து தரவேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.ஆகவே, மனுதாரரின் சிகிச்சைக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும், டாஸ்மாக் நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை உறுதி செய்து, மனுதாரர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மனைக்கு ஒப்புதல் கடிதம் தரவேண்டும். மருத்துவமனைக்குக் கடிதம் தரும் முன் அதன் நகலை மனுதாரருக்கும் வழங்க வேண்டும்.


மது விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம், மக்களின் ஈரலும் சிறுநீரகமும் கெட்டுப்போவதற்கு மறைமுகக் காரணமாக இருக்கிறது. மக்களின் ஆரோக்கி​யத்தைக் கெடுக்கும், மதுவை விற்று, ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாயை டாஸ்மாக் நிறுவனம் சம்பாதிக்கிறது. ஆனால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஓர் ஊழியரின் சிகிச்சைக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டும்தான் வழங்க முடியும் என்கிறது. ஒரு லட்சம் ரூபாயில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். எனவே, மனுதாரருடைய மருத்துவச் செலவு முழுவதையும் டாஸ்மாக் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். விதிமுறைகளைக் காரணம் காட்டி, விளக்கங்களை அள்ளித் தெளித்து அவற்றின் பின்னால் டாஸ்மாக் நிறுவனம் ஒளிந்துகொள்ள முடியாது'' என்று உத்தரவு போட்டார்.இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள், நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நடவடிக்கை​களை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், நீதிபதி சந்துருவின் தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.இப்போது, உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடன் வாங்கி, ஆபரேஷன் செய்து​ கொண்ட பாலமுருகன், 'அரசு பணம் வந்துவிடும்... கடனை எல்லாம் அடைத்து விடலாம்’ என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். அவரது நம்பிக்கையை அரசு காப்பாற்றட்டும்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...