|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 May, 2012

பிரிந்து வாழ்பவர்களின் சதவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகம்!

தமிழ்நாட்டில் துணை இழந்தவர்கள், விவாகரத்துப் பெற்றவர்கள் மற்றும் திருமண உறவிலிருந்து பிரிந்து வாழ்பவர்களின் சதவிகிதம் இந்தியாவிலேயே அதிக சதவிகிதம் என்று மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அது 8.8 சதவிகிதம் என அறியப்பட்டுள்ளது. அதற்கடுத்த நிலையில் ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் வருகின்றன. காதல்கொண்ட கணவனும் மனைவியும் பிரிந்துவாழும் முடிவெடுப்பதற்கான சமூகவியல் காரணங்கள் என்ன? மின்னல் வேகத்தில் நடக்கும் நகர்மயமாதல், பெருகிவரும் மென்பொருள்துறை வேலைவாய்ப்புகள், கூடுதலான ஊதியம், உயர்கல்வி வாய்ப்புகள் என தமிழர்களின் வாழ்க்கை அதிவேக வளர்ச்சியைக் கண்டுவருகிறது. அதுவே தற்போது எழும் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகவும் தொடர்புள்ளதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. மேலும் அரசே நடத்தும் மதுக்கடைகளால் குடிநோயாளிகளாக மாறிவரும் ஆண்கள், அடிக்கடி நிகழும் சாலை விபத்துக்கள் ஆகியவையும்கூட விதவைகள் அதிகரிக்க காரணமாக இருக்கக்கூடும். தமிழ்ச் சமூகம் தொண்ணூறுகளுக்குப் பிறகு கண்டுவரும் அதிநவீன முன்னேற்றத்தின் எதிர்விளைவுதான் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள உண்மைகள்.

விதவைகள் அதிகமாகி இருப்பதற்கான சூழலுக்கு குடியும் ஒரு காரணமா? சாராயம்தான் முதல் காரணம் என்று உறுதியாகவும் புள்ளிவிபரத்துடனும் பேசுகிறார் `பாடம்' பத்திரிகை ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நாராயணன், "ஒரு கிராமத்துக்கு சராசரியாக 60 விதவைகள் வாழ்கிறார்கள். 5 லட்சம் குழந்தைகள் அனாதை இல்லங்களில் இருக்கிறார்கள். அவர்கள் அனாதைகள் அல்ல. ஒற்றைப் பெற்றோரைக் கொண்டவர்கள். சாலை விபத்துக்களும் ஒரு காரணம். ஒரு ஆண்டுக்கு 16 ஆயிரம் ஆண்கள் இறந்துபோகிறார்கள். அதில் 60 சதவிகிதம் விபத்துகள் குடியால் ஏற்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 65 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். அடுத்து மருத்துவம் தனியார்மயமாவதால் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. மக்கள் பயன்பெற முடியாத அளவுக்கு மருத்துவமனைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் மதுபான விற்பனை வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது என்றால் விதவைகளும் அதிகரிக்கிறார்கள் என்று அர்த்தம்" என்று நெஞ்சைச் சுடும் உண்மைகளை தசஇயிடம் எடுத்துவைக்கிறார்.

இளைஞர்களும் இளம்பெண்களும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கான மிகப்பெரிய வலைதளமான பாரத் மேட்ரிமோனி. காம் இயக்குநர் முருகவேல் ஜானகிராமன், சமூகத்தில் சகிப்புத்தன்மை குறைந்துவருவதுதான் விவாகரத்துக்கான முக்கிய காரணம் என்று சொல்கிறார். தசஇயிடம் பேசிய அவர், ஒரு கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்வதற்கு பல காரணங்களை நாம் சொல்லமுடியும். சமூக ஒத்துழைப்பு குறைந்துவிட்டது. முன்பெல்லாம் ஒரு பிரச்னை என்றால் குடும்பத்தில் மூத்தவர்களிடம் பேசித் தீர்த்துக்கொள்ளமுடியும். கூட்டுக்குடும்பம் குலைந்துவிட்டது. சிறு குடும்பங்களாக உருவாகிவிட்டன. அந்தக் காலத்தைப்போல பெண்கள் பொருளாதார காரணங்களுக்காக ஆண்களை நம்பி வாழ்ந்த நிலை மாறிவிட்டது. இருவரும் தனித்துவமாக வாழ நினைக்கிறார்கள். குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரம் குறைந்துவிட்டது. அந்த நேரத்தை சமூக நிகழ்ச்சிகளும், தொலைக்காட்சியும் எடுத்துக்கொண்டுவிட்டன. எங்களைப் பொருத்தவரை திருமணங்கள் வெற்றிகரமாக அமைந்தால்தான் குழந்தைகள் நல்ல குடிமகன்களாக உருவாகமுடியும். திருமணம் முறிந்தால் அவர்களது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. ஒரு வலிமையான சமூகத்தின் ஆணிவேராக திருமணமே இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகமாக துணையை இழந்தும் பிரிந்து வாழ்கிறார்கள் என்கிற செய்தி ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. மிக மலினமான காரணங்களுக்காக பிரிவதும் அதிகமாகிவிட்டதும் கவலையளிக்கிறது" என்கிறார். 

மற்ற மாநிலங்களைவிட தமிழகப் பெண்கள் அதிக விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் தசஇயிடம் பேசிய மனநல உளவியல் மருத்துவர் ஷாலினி, "கிராமத்துப் பெண்களுக்கும்கூட தங்களது உரிமைகள் பற்றிய தெளிவு வந்துவிட்டது. முன்பெல்லாம் கணவன் அடித்தாலும் உதைத்தாலும் பொறுத்துக்கொண்டார்கள். பொருளாதார சுதந்தரமும் பெண்களுக்குக் கிடைத்திருக்கிறது. பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதற்கான விழிப்புணர்வை திராவிட இயக்க எழுச்சியும் தமிழ் மண்ணில் ஏற்படுத்தியிருக்கிறது. மனைவி போய் மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துவிடுவாளோ என்ற பயத்தில் கணவர்கள் முந்திக்கொண்டு விவாகரத்துக்கு விண்ணப்பிக்கிறார்கள். மென்பொருள் துறை வளர்ச்சி மட்டும் காரணமல்ல. கிராமங்களிலும்கூட அதிகமாக விவாகரத்துகளும் பிரிந்து வாழுதலும் அதிகரித்திருக்கின்றன" என்று விளக்கம் தருகிறார். சமூக ஆர்வலர் அ.மார்ஸ், ஆண்களும் பெண்களும் பிரிந்துவாழ்வது கவலைப்படக்கூடிய விஷயமல்ல என்று ஒரு மாறுபட்ட பார்வையில் கருத்தை முன்வைக்கிறார். "பொதுவாக தனிநபர்களின் சராசரி ஆயுள் அதிகரித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். எனவே விதவைகள் அதிகமாக இருப்பதற்கான காரணமா குடியைச் சொல்லமுடியாது. துணையை இழந்தவர்களும் விவாகரத்துப் பெற்றவர்களும் தனித்து வாழ்கிறவர்களும் சேர்ந்துதான் இந்த கணக்கெடுப்பில் சொல்கிறார்கள். சமகாலப் பெண்களிடம் தனித்து வாழ்வதற்கான உணர்வும் சுதந்தரமும் இருக்கிறது. ஏன் சகித்துக்கொள்ள வேண்டும் என்கிற கேள்வி அவர்களிடம் வந்திருக்கிறது" என்று சமூக எதார்த்தம் பற்றிப் பேசுகிறார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...