|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 November, 2011

விவசாய பொருட்களை சேமித்து பாதுகாக்க 50 நவீன கிடங்குகள்.


விவசாயப் பொருட்களை பாதுகாக்க 82 கோடி ரூபாய் செலவில், 50 நவீன கிடங்குகளை புதிதாக அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த ஆண்டு தானிய உற்பத்தியில், 115 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயர் இலக்கை, தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கும், அதன் வாயிலாக அவர்களின் தனிநபர் வருமானம் உயருவதற்கும், வழிவகை செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிறு மற்றும் குறு விவசாயிகள், பயிர்க் கடனை திரும்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும், பயிர்களை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதாலும், அறுவடை முடிந்தவுடன் கிடைத்த விலைக்கு தங்கள் விளைபொருட்களை விற்று விடுகின்றனர். இதனால், தாங்கள் விளைவித்த பயிர்களுக்கு, நல்ல விலை கிடைக்காமல், விவசாயிகள் அவதிப்படுகின்றனர். விலை வீழ்ச்சியின் போது, பொருட்களை பாதுகாத்து, பின்னர் விலை ஏற்றத்தின் போது விற்பனை செய்வது, விவசாயிகளின் வருவாயை பெருக்க உதவும். அறுவடை காலங்களில் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சியும், தேவை அதிகரிக்கும் போது, உற்பத்தி இல்லாததால் விலை ஏற்றமும் ஏற்படுவது தடுக்கப்படும். இவற்றை கருத்தில் கொண்டு, எடை போடும் இயந்திரங்கள், எடை மேடைகள், ஈரப்பதமானி போன்ற வசதிகளுடன் கூடிய, நவீன முறையிலான சேமிப்புக் கிடங்குகள் கூடுதலாக உருவாக்கப்படும். இதன்படி, லாரி நிறுத்தம் வசதியுடன் கூடிய 10 ஆயிரம் டன் கொள்ளளவில், 25 கோடி ரூபாய் செலவில், எட்டு கிடங்குகளும், 2,000 டன் கொள்ளளவில் 37 கோடி ரூபாய் செலவில் புதிய கிடங்குகள் அமைக்கப்படும். இதற்கு அடுத்ததாக, தமிழகத்தின் 37 இடங்களில் கிடங்குகளும் பல பகுதிகளில் அமைகின்றன. மொத்தம் 50 நவீன கிடங்குகள் உருவாக்கப்படுவதன் மூலம், விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பொருட்களை நல்ல முறையில் பாதுகாத்து, அவற்றை நல்ல விலைக்கு விற்பனை செய்ய வழிவகை ஏற்படும். இவ்வாறு, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...