|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 November, 2011

கருமமே கண்ணாயினராக இருக்கும் எதிர்க்கட்சிகள்...?


ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, உச்சக்கட்ட வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கனிமொழிக்கும், ராஜாவுக்கும் பெயில் கிடைக்குமா என்ற கேள்வி புறந்தள்ளப்பட்டு, அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற அளவுக்கு வேகமெடுத்துவிட்டது. ஆனால், இந்த வழக்கின் இரண்டு கிளைகள் இன்னமும் தொடப்படாமலேயே உள்ளன. ஒன்று, ஸ்பெக்ட்ரம் வழக்கில், இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பங்கு. அடுத்தது, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மீதான நடவடிக்கை.அரசியல் கட்சிகள், எப்போதுமே அடுத்தடுத்த விஷயங்களுக்கு தாவும் குணமுடையவை. ராஜா விலக வேண்டும் எனக் கோரின. அவர் விலகியதும், தயாநிதியை நீக்கக் கோரின. அவர் ராஜினாமா செய்ததும், சிதம்பரம் பக்கம் பார்வையைத் திருப்பிவிட்டன. ராஜா, நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபடி வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.அதே போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான தயாநிதி, பார்லிமென்டில் அமர்ந்தபடி, சிதம்பரத்துக்கு எழுந்துள்ள சிக்கலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆளுங்கூட்டணி வரிசையிலேயே அவர் அமர்ந்திருந்தும், கருமமே கண்ணாயினராக இருக்கும் எதிர்க்கட்சிகள், சிதம்பரத்தை மட்டுமே குறிவைக்கின்றன; தயாநிதியை மறந்துவிட்டன.அந்த நிம்மதியில் இருக்கும் சி.பி.ஐ.,யும், அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டது. இதேபோல, தயாநிதிக்கு எதிராக அமளி துமளி ஏற்பட்டபோது, கடந்த அக்., 9 ல், சி.பி.ஐ., அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு பண்ணியது. மறுநாள் காலை, அவருக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில், "திடீர்' சோதனை மேற்கொண்டது. அதோடு அந்த அத்தியாயம் முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது. மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.அப்படியானால், அந்த முதல் தகவல் அறிக்கையில் வலு இருக்கிறதா, இல்லையா? 

இதோ எப்.ஐ.ஆரின் முழு விவரம்: பதியப்பட்ட நாள்: 9.10.2011 காலை 10 மணி. இடம்: டில்லி சி.பி.ஐ., அலுவலகம். சட்டப் பிரிவுகள்: இந்திய தண்டனைச் சட்டம் 120 பி. ஊழல் தடுப்புச் சட்டம் 7, 12 மற்றும் 13 (1)டி-யுடன் இணைந்த 13 (2). குற்றச்சாட்டு: சதித்திட்டம், சட்ட விரோதமாக ஆதாயம் அடைதல், பொது ஊழியர் முறைகேட்டில் ஈடுபடுதல். சம்பவம் நடந்த இடங்கள்: டில்லி, சென்னை, மலேசியா, மொரீஷியஸ் மற்றும் சில. குற்றம் சாட்டப்பட்டவர்கள்: முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி, சன் டைரக்ட் "டிவி' இயக்குனர் கலாநிதி, ஆஸ்ட்ரோ ஆசியா நெட்வொர்க் நிறுவன இயக்குனர் ரால்ப் மார்ஷல், மலேசியாவின் உசாகா டேகாஸ் நிறுவனத் தலைவர் அனந்தகிருஷ்ணன், சன் டைரக்ட் "டிவி', ஆஸ்ட்ரோ ஆசியா நெட்வொர்க், மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனங்கள் மற்றும் பெயர் தெரியாத அதிகாரிகள், பிரமுகர்கள்.   

குற்றச்சாட்டு விவரம்:தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஏர்செல் டெலிவென்சர்ஸ் நிறுவனத்தை, தொழிலை விட்டே ஓடச் செய்யும் அற்ப நோக்கத்தோடு, அவர்கள் விண்ணப்பத்திருந்த ஏழு தொலைத்தொடர்பு வட்டங்களுக்கான உரிம விண்ணப்பத்தை, வேண்டுமென்றே தாமதித்தார்.அது மட்டுமின்றி, மத்திய பிரதேச வட்டத்துக்கான உரிமத்தை நீட்டிப்பது, உத்தர பிரதேசம் கிழக்கு மற்றும் மேற்குக்கான உரிமம் கோரும் கோப்பை நீண்ட நாட்களுக்கு தாமதித்த தயாநிதி, அற்பமான சந்தேகங்களையும், ஆட்சேபனைகளையும் எழுப்பி, தனது தனி உதவியாளர் சஞ்சய் மூர்த்தி மூலம் விளக்கம் கேட்டார்.அதே காலகட்டத்தில் விண்ணப்பித்த ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், பார்தி ஏர்டெல் நிறுவனங்களுக்கு, எந்தச் சந்தேகமும் கேட்காமல் உரிமம் வழங்கப்பட்டது. இந்த தாமதத்தால், நுழைவுக் கட்டணம், உரிமக் கட்டணம், அலைவரிசைக் கட்டணங்கள் என, கிடைத்திருக்க வேண்டிய பல வருவாயை தொலைத்தொடர்புத் துறை இழந்தது.

ஏர்செல் பங்குகளை மாக்சிஸுக்கு விற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானதும், வங்கிக் கணக்கு பரிமாற்றம் தொடர்பாக, 2005 அக்டோபரில், ரால்ப் மார்ஷல் மற்றும் சிவசங்கரன் இடையே ஒரு பேச்சுவார்த்தைக்கு (கான்பரன்ஸ் கால் மூலம்) ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி ஏற்பாடு செய்தது. அப்போது, "மாறன் சகோதரர்களிடம் ஒப்புதல் வாங்கி விட்டேன். ஏர்செல்லின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும்' என ரால்ப் கூறியுள்ளார்.அதன் பிறகு, சிவசங்கரனை தொலைபேசியில் அழைத்த தயாநிதி, ஏர்செல் பங்குகளை மாற்றுவது தொடர்பாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கியுள்ளார். தொடர்ந்து, சிவசங்கரன் - கலாநிதி சந்திப்பு, 2005 நவம்பர் 12ம் தேதி சென்னையில் நடந்தது. அப்போது, "100 சதவீத பங்குகளையும் மாக்சிஸுக்கே விற்க வேண்டும். இதுதொடர்பாக தயாநிதி பேசுவார்' என கலாநிதி கூறியுள்ளார். சொன்னபடியே, அதே நாளில் தயாநிதியிடம் இருந்து சிவசங்கரனுக்கு போன் வந்தது. அன்றே சிவசங்கரன் - ரால்ப் சந்திப்பு, தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடந்தது. சிவசங்கரனிடம் நான்கு விதமான வாய்ப்புகளைக் கொடுத்து, அதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி ரால்ப் கூறினார். இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கு முன், தயாநிதியை கோலாலம்பூரிலும், டில்லி அலுவலகத்திலும் ரால்ப் சந்தித்து வந்தார்.ஏர்செல் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நிறுவனம், 629 கோடியே ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 203 ரூபாயை சன் டைரக்டில் முதலீடு செய்தது. இதற்காக, அப்போது தொழிலையே துவக்கியிராத சன் டைரக்டின் சந்தை மதிப்பு 4,039 கோடி ரூபாய் வரை மிகைப்படுத்திக் காட்டப்பட்டிருந்தது.

ஆனால், அன்று சந்தையின் 50 சதவீதத்தை ஆக்கிரமித்திருந்த டாடா ஸ்கை நிறுவனத்தின் வர்த்தக மதிப்பே 2,500 கோடி ரூபாயாகத் தான் இருந்தது. விசாரணையில், அந்த முதலீடு ஓர் உண்மையான வர்த்தகப் பரிமாற்றம் அல்ல; ஆதாயப் பணத்தைப் பெறுவதற்கான ஒரு வழியே எனத் தெரிய வந்தது.ஏர்செல் டெலிவென்சர்ஸ் நிறுவனத்தின் உரிமை மாற்றப்பட்ட பின், 2004 முதல் நிலுவையில் இருந்த மூன்று உரிமங்கள், 2005ல் இருந்து நிலுவையில் இருந்த நான்கு உரிமங்கள் என மொத்தம் ஏழு விண்ணப்பங்களும், 2006 டிச., 18 ல் வழங்கப்பட்டுவிட்டன. இதன் மூலம், தயாநிதி, தனது சகோதரர் கலாநிதி மூலம், சட்ட விரோதமாக, 549 கோடியே, 96 லட்சத்து, 1,793 ரூபாய் அளவுக்கு ஆதாயம் அடைந்தார்.

மேற்சொன்ன உண்மைகள் மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில், இவர்கள் அனைவரும் குற்றம் புரிந்ததற்கான பூர்வாங்க முகாந்திரங்கள் இருப்பது தெரிய வருகிறது. எனவே, சி.பி.ஐ.,யின் துணை கண்காணிப்பாளர் எஸ்.கே.சின்காவால் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.இவ்வாறு அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இவ்வளவு தகவல்கள், ஆரம்ப கட்ட விசாரணையிலேயே சி.பி.ஐ.,க்கு கிடைத்துள்ளன எனும்போது, முழு வீச்சிலான விசாரணை நடந்தால், எவ்வளவு உண்மைகள் வெளிவருமோ!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...