|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 November, 2011

மத்திய அரசு இலங்கை ஏஜன்ட் போல் செயல்படுவதா? விஜயகாந்த்!!


இலங்கை அரசின் ஏஜன்ட் போல் செயல்படுவதை, மத்திய அரசு இனியாவது விட்டுவிட வேண்டும். தமிழக மீனவர்கள், இந்திய குடிமக்கள் என்று உணர்ந்து, கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை திரும்பப் பெற வேண்டும்'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை : இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், கடலோர காவல் படை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குச் செல்வதால் தான் ஆபத்து ஏற்படுவதாகவும், கடல் எல்லையில் இருந்து ஐந்து மைல் தூரம் வரை மீன் பிடிக்கக் கூடாது என அறிவித்து விட்டதால், இனி பிரச்னை எழாது என்றும் தெரிவித்துள்ளது. இது பொறுப்பற்ற, விஷமத்தனமான, தீமை விளைவிக்கக்கூடிய போக்காகும்.

இந்த கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும், காலம் காலமாக மீன்பிடித்து வருகின்றனர். விடுதலைப் புலிகள் பேரை சொல்லி தமிழக மீனவர்கள் மீது, இலங்கை அரசு தாக்குதல் நடத்தியது. இப்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தை இல்லாமலே செய்துவிட்டோம் என, இலங்கை அரசு கூறுகிறது.இதன் பிறகும் இலங்கை கப்பல் படை, தமிழக மீனவர்களை தாக்குவதும், அவமானப்படுத்துவதும், பிடித்து வைத்துள்ள மீன்களையும், படகுகளையும் கைப்பற்றுவதும் நடக்கிறது. இந்த கொடுமையில் இருந்து மீனவர்களை காப்பதற்காகவே, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய கடலோர காவல் படை அளித்துள்ள பதிலை பார்க்கும் போது, இலங்கை அரசே, மத்திய அரசை விட எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.

கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல், நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கில், முதலுக்கே மோசம் என்ற அளவில் மத்திய அரசின் பதில் அமைந்துள்ளது. உண்மையிலேயே தமிழக மீனவர்கள், இந்திய குடிமக்கள் என்ற உணர்வு, மத்திய அரசுக்கு இருக்குமானால், கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை திரும்ப பெற வேண்டும்.இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி இந்திய, இலங்கை கடல் பகுதியில் இருநாட்டு மீனவர்களும் தாராளமான மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும். இனியாவது மத்திய அரசு தனது தவறை உணர்ந்து இலங்கை அரசின் ஏஜன்ட் போல் செயல்படுவதை விட்டுவிட வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...