|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 November, 2011

சென்னையில் பிடிபட்ட பயங்கரவாதிசேலையூரில் பிடிபட்ட, "இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபரும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த, எம்.பி.ஏ., மாணவரும் நேற்று பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் டில்லி கொண்டு செல்லப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி, சமீபத்தில் டில்லியில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையவர் என்றும், போலீசாரின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பவே சென்னைக்கு வந்து தலைமறைவாகியிருந்தார் என்றும் தெரிய வந்துள்ளது.

பீகார் மாநிலம், பர்பங்கா என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் இம்ரான் உசேன், அப்துல் ரகுமான், சேவாஜ் உசேன், முகம்மது மைதீன், சபித் ரகுமான், முகம்மது இக்பால், ஹத்லான். இவர்கள் சென்னை, சேலையூர், ராஜேஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, நகரின் பல்வேறு இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படித்து வந்தனர். டில்லி போலீசார், இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முகம்மது இர்ஷாத் கான், 50, என்ற நபரை தேடி வந்தனர். விசாரணையில், ஒரு கட்டமாக, இர்ஷாத் கான் மொபைல் போன் தகவல் பரிமாற்றத்தை கண்காணித்து வந்தனர்.அப்போது, இர்ஷாத் கானின் மொபைல் போனில் இருந்து சென்னை, சேலையூர் டவர் மூலமாக தகவல் பரிமாற்றம் நடப்பது தெரிந்தது. இதையடுத்து, சென்னை வந்த டில்லி போலீசார், சேலையூர், ராஜேஸ்வரி நகரில், பீகார் மாணவர்கள் தங்கிருந்த வீட்டை கடந்த 10 தினங்களாக மறைந்திருந்து, கண்காணித்து வந்தனர். பீகார் மாணவர்களுடன், தேடப்படும் பயங்கரவாதியான இர்ஷாத் கான் தங்கியிருப்பது தெரிய வந்தது. அவரையும், மற்றவர்களையும் கூண்டோடு கைது செய்ய திட்டமிட்ட டில்லி போலீசார், தமிழக உயர் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பயங்கரவாதி சென்னையில் தலைமறைவாகியிருக்கும் தகவலை கூறி, ஆயுதம் தாங்கிய போலீஸ் படை ஒன்று வேண்டும் என்று கோரினர். இதையடுத்து, 80 பேர் அடங்கிய போலீஸ் படை ஒன்று தயாரானது.

தமிழக போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு, சேலையூர், ராஜேஸ்வரி நகரில், இர்ஷாத் கான் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின், உள்ளே நுழைந்து பார்த்தபோது, இம்ரான் உசேன், அப்துல் ரகுமான், சேவஜ் உசேன், முகம்மது மைதீன் ஆகிய மாணவர்களுடன், பயங்கரவாதி இர்ஷாத்கானும் இருந்தார். ஐவரையும் சுற்றி வளைத்த போலீசார், அவர்களை மவுன்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவோடு இரவாக அழைத்துச் சென்றனர். அங்கு, இர்ஷாத் கானிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.இதில், சமீபத்தில் நடந்த டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் இர்ஷாத் கான் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதும், போலீசாரின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்ப, தனது உறவினரான அப்துல் ரகுமானுடன் சென்னையில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, ஆலந்தூர் கோர்ட்டில் இர்ஷாத் கானையும், அப்துல் ரகுமானையும் ஆஜர்படுத்திய டில்லி போலீசார், பின் இருவரையும் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லி கொண்டு சென்றனர்.இந்த வழக்கில், போலீசாரிடம் சிக்கிய பீகாரை சேர்ந்த இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அப்பாவிகள் என்று விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். போலீசாரிடம் சிக்கிய இம்ரான் உசேன், சேவஜ் உசேன், முகம்மது மைதீன் ஆகியோர், அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர். தலைமறைவாகியுள்ள மேலும் மூன்று பீகார் மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது.

சென்னையை தாக்க திட்டமா?இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு, மாணவர்களை அதிகமாக கொண்டு இயங்கி வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை மூளைச் சலவை செய்து, தங்கள் பயங்கரவாத திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. கடந்த 2008ம் ஆண்டு, ஆமதாபாத்தில் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலே இந்த அமைப்பின் மிகப் பெரிய தாக்குதல். இதில், 50 பேர் இறந்தனர். இந்தியன் முஜாகிதீன் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவனான முகம்மது இர்ஷாத் கான் சென்னையில் கடந்த ஒரு மாதமாக, மாணவர்களுடன் தங்கியிருந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை தாக்க அவன் எதுவும் திட்டமிட்டானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கைது செய்யப்பட்ட டில்லி பயங்கரவாதி, தமிழகத்தில் சதி செயலில் ஈடுபடவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக, தமிழக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:டில்லி போலீஸ் அளித்த தகவல் படி, முகம்மது இர்ஷாத் கான் மீது கள்ள நோட்டு, போலி பாஸ்போர்ட்கள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த இர்ஷாத்துக்கு, சென்னையில் அப்துல் ரகுமான் தங்க இடம் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இர்ஷாத்தை கைது செய்யும் போது, அவரிடமிருந்து எவ்வித வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை.அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தமிழகத்தில் எந்த சதி வேலையிலும் அவர்கள் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...