|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 November, 2011

கேரள அரசு பீதி கிளப்ப காரணம்?




கடந்த 2006 பிப்ரவரியில் இந்த தீர்ப்பு வெளிவந்த நிலையில், மே மாதம் பொதுத் தேர்தலுக்கு முன், கேரள காங்கிரஸ் அரசு, அவசரமாக சட்டசபையை கூட்டி, இந்த தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது.இதை எதிர்த்து, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதன் மீதான விசாரணை நடந்து, தீர்ப்பு வெளிவர இருந்த நிலையில், பல்வேறு முறையீடுகளை கேரளா செய்து, அடுத்தடுத்த பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வைத்தது.இறுதியில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில், அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை அமைத்து, அதில், இரு மாநில அரசுகளும், தங்களது நியாயங்களைக் கூறி, ஒரு முடிவெடுக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இந்தக் குழுவில், கேரளா தரப்பில், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி தாமஸ், தமிழகத்தின் தரப்பில், ஓய்வு பெற்ற நீதிபதி லட்சுமணன் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, பல கட்டங்களாக கூடி விவாதித்து வந்த நிலையில், புதிய அணை கட்டுவதற்கான திட்டத்தை, கேரள அரசு தாக்கல் செய்தது. முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், திடீரென இப்பிரச்னையை பெரிதாக்கி, நாடு முழுவதும் பீதியை கிளப்பும் பிரசாரத்தை, கேரள அரசு தீவிரப்படுத்தி இருப்பதற்கு காரணம், வரும் டிசம்பர் 5ம் தேதி நடக்கவுள்ள முக்கியமான கூட்டமே என, கூறப்படுகிறது. இந்த பிரசாரத்தை முறியடிக்க வேண்டிய அவசியம், தமிழகத்துக்கு உள்ளது.முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பல ஆண்டுகள் விசாரணை மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்குப் பின், அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதித்ததோடு, 999 ஆண்டு குத்தகை செல்லும் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இந்த குழுவிலும், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையிலும், அணைக்கு ஆபத்து இருப்பதற்கான எவ்வித ஆதாரத்தையும், கேரள அரசு சமர்ப்பிக்கவில்லை. அறிவியல் ரீதியான ஆய்வுகள் போன்றவற்றின் முடிவுகளையும் கேட்கத் தயாராக இல்லை. அதேசமயம், அனைத்து ஆய்வுகளுக்கும் ஒத்துழைக்கவும், சுப்ரீம் கோர்ட்டின் விசாரணைக்கும் தயாராகவே தமிழகம் இருந்து வந்துள்ளது.இது போன்ற செயல்கள், இக்குழுவுக்கு கேரளா மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், குழுவின் இறுதிக்கட்ட கூட்டம், வரும் டிசம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. இக்கூட்டத்துக்குப் பின், தனது முடிவுரையை அறிக்கையாக, இக்குழுவின் தலைவர் ஆனந்த், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளார். அதன் அடிப்படையில், விரைவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வழங்க உள்ளது.தற்போதைய நிலையில், குழுவினரின் எண்ணம், தமிழகத்துக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, சமீப காலமாக கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகள், வேறு உத்தியை கையாளத் துவங்கியுள்ளன.

முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதாகவும், அதன் மூலம் தமிழகத்துக்கு தாராளமாக தண்ணீர் வழங்க இருப்பதாகவும், கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பிரதமரை சந்தித்து, இவ்விஷயத்தில் தமிழகத்துடன் மத்தியஸ்தம் செய்யுமாறு வலியுறுத்தினார்.சிறிய அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை காரணம் காட்டி, முல்லை பெரியாறு அணை உடையப் போவதாக தீவிர பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், "டேம் 999' என்ற திரைப்படத்தை வெளியிட்டு, மக்கள் மத்தியிலும், தேசிய அளவிலும் பீதியை ஏற்படுத்த, முயற்சிகள் நடந்துள்ளன.இது தவிர, ஆங்கில "டிவி' சேனல்களில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூலம், முல்லை பெரியாறு அணை குறித்து, தவறான செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன.கேரளா முழுவதும், தமிழகத்துக்கு எதிரான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நான்கு மாவட்டங்களில், "பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, மலையாள திரைப்பட நடிகைகள், நடிகர்களது பேட்டிகள் மூலம், அணைக்கு எதிரான பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வளவுக்கும் காரணம், வரும் 5ம் தேதி நடக்கவுள்ள கூட்டம் தான். அதில் எந்த முடிவும் எடுக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், குழுவில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள், மத்திய அரசு, மக்கள் என, அனைவர் மத்தியிலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் வேலையில், கேரளா ஈடுபட்டுள்ளது.இந்த பிரசாரத்தை, தமிழக அரசு முறியடிக்க, பதில் பிரசாரம் செய்தாக வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தின் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டு, தென் தமிழகமே பாலைவனமாக மாறிவிடும் நிலை ஏற்படும். 

முல்லை பெரியாறு அணை, 120 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் ஆட்சியரால் கட்டப்பட்டது. அப்போது, தமிழகத்துக்கு அணை கட்ட, 8,000 ஏக்கர் நிலத்தை, 999 ஆண்டு குத்தகைக்கு தர, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதால், இந்த ஒப்பந்தமே செல்லாது எனவும், புதிய அணை கட்டப் போவதாகவும் கேரளா கூறுகிறது. ஆனால், தமிழகத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள, 8,000 ஏக்கரில் புதிய அணையை கட்டாமல், கேரளாவுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப் போவதாகச் சொல்கிறது. இதன் மூலம், அணையின் மொத்த கட்டுப்பாட்டையும், தன் பிடிக்குள் கொண்டு வர, கேரளா முயற்சிக்கிறது.தற்போதைய நிலையில், முல்லை பெரியாறில், 136 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவே, 10 டி.எம்.சி., தான். இதில் தண்ணீர் வெளியேற வேண்டுமென்றால், 106 அடிக்கு மேல், 136 அடிக்கு கீழ் உள்ள தண்ணீர் தான் வெளியேற முடியும். அணை உடைந்தாலும், இந்த தண்ணீர் தான் வெளியேறும். எனவே, வெளியேறப் போவது 6 டி.எம்.சி., தண்ணீர் தான்.

அப்படி வெளியேறினாலும், அந்த தண்ணீர் நேராக இடுக்கி அணைக்கு தான் செல்லும். முல்லை பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில், 1979ல், கேரள மின் வாரியத்தால் கட்டப்பட்டது தான் இடுக்கி அணை. நீர்மின் நிலையத்துக்காக இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை, 70 டி.எம்.சி., தண்ணீர் கொள்ளளவு கொண்டது. எனவே, முல்லை பெரியாறு அணை உடைந்தாலும், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இந்த விவரங்களை, கேரள அரசு முதலில் மறைத்து வந்தது. இவை எல்லாம், வழக்கு விசாரணையின் போது தான் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது, "இடுக்கி அணையே உடைந்துவிடும்' என்ற, புதிய பிரசாரத்தை கேரளா துவக்கியுள்ளது.மேலும், முல்லை பெரியாறு அணை என்பது, மற்ற அணைகளை போல, மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுவது அல்ல. அந்த அணையில் உள்ள தண்ணீரை, மிகப் பெரிய குழாய்கள் மூலம் தான், தமிழகம் எடுத்து வருகிறது. இதனால், அணை உடைந்தால், நான்கு மாவட்டங்கள் அழிந்துவிடும் என்ற வாதத்துக்கே இடமில்லை.அவ்வாறு நடக்க வாய்ப்பு இருந்தால், அதற்கான ஆதாரங்களை, சுப்ரீம் கோர்ட்டில், கேரளா தாக்கல் செய்யலாம். ஆனால், அவ்வாறு எதையும் செய்யாமல், பிரதமரை சந்திப்பது, பீதியை கிளப்பும் பிரசாரங்களை மேற்கொள்வது, கடையடைப்பு நடத்துவது என மிரட்டி வருவது, இந்திய ஜனநாயகத்துக்கே ஆபத்தானது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...