|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 December, 2011

திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் 7வது நாளான இன்று காலையில் நடைபெற்ற மகா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சாமி வீதி உலா நடைபெற்று வருகின்றது. கார்த்திகை தீப திருவிழாவின் 6ம் நாளான நேற்று வெள்ளி ரத தேரோட்டம், சாமி வீதி உலா, 63 நாயன்மார்கள் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் 7வது நாளான இன்று அதிகாலை பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோரை மரத் தேரில் கொண்டு வந்து சிறப்பு அபிஷேக பூஜை செய்தனர்.

காலை 7.20 மணிக்கு விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அதன் பிறகு முருகன் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேர் மதியம் நிலைக்கு வந்ததும் சாமியின் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. அந்த தேரோட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் 'அண்ணாமலைக்கு அரோகா' என்று கோஷமிட்டனர். பெரிய மகாதேர் நிலைக்கு வந்த பிறகு, இன்று இரவு அம்மன் தேர் புறப்படும். இந்த தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச் செல்வது வழக்கம். அம்மன் தேரைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் புறப்படும். மகா தேரோட்டத்தின்போது குழந்தை வரம் வேண்டி குழந்தைகள் பெற்ற தம்பதிகள் நேர்த்தி கடனை நிவர்த்தி செய்ய கரும்பு தொட்டிலில் தங்கள் குழந்தைகளை வைத்து மாட வீதிகளில் வலம் வந்தனர்.தேரோட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...