|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 November, 2011

.200 கோடி அரசு மருத்துவமனை கட்டு போடக்கூட துணி இல்லை!



விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால், நோயாளிகள் அவதிப்படும் நிலை தொடர்கிறது. இதைக் கண்டித்து அரசு டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியுள்ள நிலையில், மாவட்ட அமைச்சர் சண்முகம் தலையிட்டு பிரச்னையைத் தீர்க்க, துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விழுப்புரம் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில், 45 ஏக்கர் பரப்பளவில், 200 கோடி ரூபாய் செலவில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முண்டியம்பாக்கத்தில் உருவாக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் அவசரமாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேவையான அத்தியாவசிய சாதனங்கள் அமைக்காத நிலையில், திறப்பு விழா நடந்தது. மருத்துவமனை திறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கட்டமைப்பு வசதிகள் முழுமை பெறாததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்படும் பெரும்பாலான நோயாளிகள், மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவது தொடர்கிறது. இம்மருத்துவமனை அமைந்ததும், உயரிய சிகிச்சை கிடைக்கும் என்ற மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு வீணாகியுள்ளது.

கட்டு போட துணி இல்லை: தமிழகத்தில் நீளமான தேசிய நெடுஞ்சாலையை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டத்தில், நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. விபத்துகளில் காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் யார் வந்தாலும், அவர்களுக்கு உடனடி அவசர சிகிச்சை ஏதுமின்றி, மேல்சிகிச்சைக்கு அருகிலுள்ள புதுச்சேரி மற்றும் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில், பல பேருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால், ரத்தப் போக்கு அதிகமாகி உயிரிழக்கும் அவலம் நீடிக்கிறது. விபத்தில் அடிபட்டு வருபவர்கள் உடல்நிலை பற்றி உடனடியாக அறிய தேவையான, "சிடி' ஸ்கேன் இல்லாததும் முக்கிய காரணம். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட "சிடி' ஸ்கேன், விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையம் இரவில் செயல்படாததால், அவசரத் தேவைக்கு பயன்படாத அவலம் நீடிக்கிறது. அனைத்து துறைகளில் டாக்டர்கள் பணியில் இருந்தாலும், அவர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்யத் தயாராக இருந்தும் பிரச்னை தீரவில்லை. மருத்துவத்திற்குத் தேவையான மருந்துகள், குளுகோஸ் பாட்டில்கள் உள்ளிட்டவை சப்ளை செய்யப்படவில்லை. இங்கு, மருத்துவச் சிகிச்சைக்காக வரும் தினக்கூலி ஏழை மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், கட்டு போடும் துணி கூட இல்லாததால் மக்கள், மருத்துவமனையின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

இப்பிரச்னைகள் குறித்து, பணியில் உள்ள டாக்டர்கள் மருந்து மற்றும் அடிப்படை சாதனங்கள் தேவை பற்றி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் பலனில்லை. நிர்வாகத்தின் சார்பில் சென்னை மருத்துவ இயக்குனரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து பதிலளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றாலும், சிகிச்சையின் தரம் குறைந்து கொண்டே செல்கிறது. துரித சிகிச்சை அளிக்கப்படாததால் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள், நோயாளிகளின் அதிருப்திக்கு ஆளாகின்றனர். இதனால் ஆவேசமடைந்த டாக்டர்கள், மருத்துவமனையில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம்(8ம் தேதி), கறுப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் வசதிக்காக கட்டப்பட்டுள்ள கட்டண கழிவறை இன்றளவும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கலெக்டர் மணிமேகலை மருத்துவமனையை ஆய்வு செய்தபோது, அடிப்படை வசதிகள் முழுமை பெறாதது தெரிய வந்தது. கலெக்டர் உடனடியாக அனைத்து அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்தியும், பிரச்னைகள் இன்னும் சரி செய்யப்படவில்லை. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்ள கட்டப்பட்ட இம்மருத்துவமனையில், "சிடி' ஸ்கேன் போன்ற சாதனங்களும், மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் தங்கள் பயிற்சித் திறனை வளர்த்துக் கொள்வது கேள்விக்குறியான விஷயமாகியுள்ளது. மாவட்ட மக்களின் மருத்துவத் தேவையைப் போக்க கடந்த ஆட்சியில் அவசரக் கோலத்தில் திறக்கப்பட்ட அரசு மருத்துவமனையை திறம்படச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டியது, புதிய அரசின் கடமையாகும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அமோக ஆதரவளித்து ஆட்சிப் பொறுப்பை வழங்கிய மாவட்ட மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், புதிய அரசு செயல்பட வேண்டும். மக்களின் உயிர் காக்கும் முக்கிய பிரச்னையான இதை முதல்வர் ஜெ., கவனத்திற்கு கொண்டு சென்று, மருத்துவமனை முழுமையாகச் செயல்பட அமைச்சர் சண்முகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டு போட வேட்டி: கடந்த 6ம் தேதி, விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்ற கார் மீது மற்றொரு கார் மோதியதில், புதுமணப்பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போதிய மருத்துவ வசதியில்லாததாலும், கட்டு போட துணி இல்லாததாலும் உடன் சென்ற உறவினர்கள், கட்டியிருந்த வேட்டியால் மணப்பெண் மற்றும் ஒரு பெண்ணிற்கு கட்டு போட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இம்மருத்துவமனைக்கு கம்பெனி மூலம் சப்ளை செய்யப்பட்ட மருந்துகளுக்கு "பில்' செலுத்தாத காரணத்தால், பல்வேறு மருந்து கம்பெனிகளும் தங்கள் சப்ளையை நிறுத்திக் கொண்டுள்ளன. பெரிய அளவிலான அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்துகள் இம்மருத்துவமனையில் ஸ்டாக் இல்லை. கடந்த காலங்களில் மாதந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெற்ற நிலையில், தற்போது மாதத்திற்கு 20 அறுவை சிகிச்சைகள் கூட செய்யப்படுவதில்லை. காரணம், அதற்கான மருந்துகள் சப்ளை செய்யப்படுவதில்லை என, டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் செய்வாரா? கடந்த தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி முயற்சியின் பேரில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வரப்பட்டது என இன்றளவும் அக்கட்சியினர் பெருமை கொள்கின்றனர். அதேபோல், கடந்த முறை அ.தி.மு.க., ஆட்சியின்போது அமைச்சர் பதவி வகித்த சண்முகம், திண்டிவனம் நகருக்கு கண்டரக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்ததை அவரது கட்சியினர் சாதனையாக சொல்லி வருகின்றனர். இத்திட்டங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், பொதுமக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டவை என்பதால் இருவருக்கும் மிகுந்த மக்கள் செல்வாக்கை உருவாக்கியது. இதேபோல், மக்கள் நலன் கருதி மாவட்ட அரசு மருத்துவமனை முழுமையாகச் செயல்பட, உள்ளூர் அமைச்சர் சண்முகம் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...