|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 November, 2011

தயாநிதி மாறனுக்கு உதவிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும் சிபிஐ!


ஏர்செல் நிறுவனத்தை வலுக்கட்டாயமாக மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க வைத்த விவகாரத்தில் தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது அந்தத் துறையில் உயர் அதிகாரிகளாக இருந்தவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா, கூடுதல் செயலாளர் ஜே.எஸ்.சர்மா, துணை டைரக்டர் ஜெனரல் பி.கே.மிட்டல், தயாநிதி மாறனின் பி.ஏ. சஞ்சய் மூர்த்தி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தும் என்று தெரிகிறது. இவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படவுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொலைத் தொடர்புத்துறையின் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ள சிபிஐ, அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணைகளை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த சிவசங்கரன் 2ஜி லைசென்ஸ் கோரி விண்ணப்பித்தபோது, அவருக்கு அதை வழங்க உத்தரவு பிறப்பித்தார் மிஸ்ரா. ஆனால், அந்த லைசென்கள் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் சர்மா. அவர் ஏன் அவ்வாறு உத்தரவு பிறப்பித்தார் என்ற கேள்வி எழுகிறது. இதே காலகட்டத்தில் தான் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தயாநிதி மாறன் என்னை நிர்பந்தித்தார் என்று சிபிஐயிடம் சிவசங்கரன் வாக்குமூலம் தந்துள்ளார்.

ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வாங்கிய பின், ஏர்செல் நிறுவனத்துக்கு ஒருங்கிணைந்த லைசென்ஸ் வழங்கலாம் என்று சர்மாவே மீண்டும் ஒரு நோட் எழுதியுள்ளார். சர்மாவின் உத்தரவின்பேரில் மிட்டல் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் நடந்தபோது சர்மா தொலைத்தொடர்புத்துறையின் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். முதலில் கூடுதல் செயலாளராகவும், பின்னர் செயலாளராகவும், இதையடுத்து டிராய் அமைப்பின் (தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) தலைவரானார். இப்போதும் அவர் தான் டிராய் தலைவராக உள்ளார்.

இதற்காக இவர்களுக்கும் இந்த விவகாரத்தில் நேரடியாக தொடர்பிருக்கும் என்று சிபிஐ கருதவில்லை என்று தெரிகிறது. ஆனாலும் இவர்களிடம் விசாரணை நடத்தினால், மேலும் பல உண்மைகள் வெளி வரலாம் என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. தயாநிதி மாறன் பதவியில் இருந்த காலத்தில் ஏர்செல் நிறுவனத்தை விற்க ஏற்படுத்தப்பட்ட நிர்ப்பந்தம் குறித்தும் மேக்சிஸ் நிறுவனத்துக்கு காட்டப்பட்ட சலுகைகள் குறித்தும் இவர்களிடம் விசாரிக்கப்படவுள்ளது. அதே போல மாறனின் பி.ஏ. சஞ்சய் மூர்த்தியையும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. மேலும் வயர்லெஸ் பிரிவில் இணை ஆலோசகர் ராம்ஜி சிங் குஷ்வாஹாவிடமும் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...